இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி காலண்டர்!



-ஷாலினி நியூட்டன்

‘‘இப்படித் திரும்புங்க... இந்தப் பக்கம்... இன்னும் கொஞ்சம் அந்த முடிய லைட்டா பறக்க வி்டுங்க... லிப்ஸ்டிக் எக்ஸ்ட்ரா போடுங்க...”  போட்டோ ஷூட்களில் அதிகம் இந்த வாக்கியங்களைக் கேட்கலாம். மாடல்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் மட்டும்தான் இந்த வார்த்தைகள் சொந்தமா என்ன..? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். இதைத்தான் அழுத்தமாக உலகுக்கு அறிவித்திருக்கிறார் ப்ரீத்தி ராய்.

12 மாற்றுத்திறனாளிகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் கோலோச்சுபவர்கள். இவர்களை மாடல்களாக மாற்றி இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி காலண்டரை தன் குழுவினருடன் இணைந்து வெளியிட்டிருக்கிறார். ‘‘படிச்சது பிஏ சைக்காலஜி. எம்ஏ மாஸ் கம்யூனிகேஷன். எஃப்.எம் சேனல்ல கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அப்புறம்தான் ‘மிஷன் ஸ்மைல்’ ஆரம்பிச்சோம். சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏராளமா நடத்திட்டு வர்றோம். பணத்தை ஒரு பொருட்டா மதிக்காத திறமைசாலிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் நோக்கம்.

அதனோட ஒரு பகுதிதான் இந்த ‘Rising Above’ காலண்டர்...’’ என்ற ப்ரீத்தி, இது குறித்து விவரிக்க ஆரம்பித்தார். ‘‘மாற்றுத் திறனாளிகளை இதுவரை யாரும் க்ளாமரா, அழகா, ஹேண்ட்ஸம்மா போட்டோ எடுத்ததே இல்ல. அவங்களும் அழகானவங்கதானே..? அதை ஏன் நாம லைம்லைட்டுக்கு கொண்டு வரக் கூடாதுனு தோணிச்சு. அதன் விளைவுதான் இந்த கான்செப்ட். ஆனா, சின்னதா தயக்கம் இருந்தது. ஒருவேளை மாற்றுத் திறனாளிகளை இது சங்கடப்படுத்திச்சுன்னா..? அதனால ஐடியா லெவல்லயே வைச்சிருந்தேன்.

இந்த நேரத்துலதான் ஷாலினி சரஸ்வதியை ஒரு போட்டோ ஷூட்ல சந்திச்சேன். இவங்க இந்தியாவோட முதல் பிளேட் ரன்னர். என் மனசுல என்ன இருந்ததோ அதை ரொம்ப கேஷுவலா என்கிட்ட கேட்டாங்க... ‘எங்களை ஏன் ஹாட்டா ஸ்டைலா நீங்க எடுக்கக் கூடாது..? போஸ் கொடுக்க நான் ரெடி...’ வாவ்னு துள்ளிக் குதிச்சேன். பிறகென்ன... மடமடனு வேலைல இறங்கிட்டோம்.

ஐடில வேலை பார்க்கறவங்க, மோட்டார் பைக்கர், ஓவியர், பேட்மின்டன் ப்ளேயர், தாவரவியல் வல்லுனர், ஹாக்கி வீரர்... இப்படி பல துறைகள்ல முத்திரை பதிக்கிற மாற்றுத் திறனாளிகள் 12 பேரை தேர்ந்தெடுத்து போட்டோ ஷூட் நடத்தினோம். இதுக்கான பண உதவிகளும் எங்களுக்கு கிடைச்சது. கேமராமேன் குமரன், ஸ்டைலிஸ்ட் சித்தாரா குடிக், ஆர்ட் டைரக்டர் கனிக்ராஜ் சாமுவேல்னு எங்க டெக்னீஷியன்ஸ் யாருமே ஒரு பைசா கூட இதுக்கு வாங்கலை.

ஒவ்வொரு மாசத்துக்கும் ஒருத்தர்; அவங்களுக்கு பொருத்தமா சில வரிகள்னு காலண்டரை முழுமையாக்கினோம்...’’ என்று சொல்லும் ப்ரீத்தி, ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஷூட் செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட உணர்வு எழுச்சிகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்கிறார். ‘‘ஷாலினிக்கு மேக்கப் போடறப்ப அவங்க கணவர்தான் சாப்பாட்டை ஊட்டி விடுவாரு. கால்ல அவங்களுக்கு ஷூ மாட்டி விடற வரைக்கும் தன் தோள்லயே அவங்களை சுமந்துட்டு இருப்பாரு.

ஏன், இரண்டு கைகளும் இல்லாத விஸ்வாஸுக்கு யாரும் சொல்லாமயே எங்க எடிட்டர் சாப்பாடு ஊட்டி விட்டப்ப நாங்க எல்லாருமே நெகிழ்ந்துட்டோம். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு சில போட்டோ ஷூட் நைட் மூணு மணி வரைக்கும் கூட போச்சு. ஆனா, எங்க டீம் கொஞ்சம் கூட சோர்வடையலை. உண்மைலயே இதை எனக்குக் கிடைச்ச வரமா நான் நினைக்கறேன். இப்படியொரு குழு அமையலைனா இந்த காலண்டர் இந்த அளவுக்கு சக்சஸ் ஆகியிருக்காது...’’ என்ற ப்ரீத்தி, மாற்றுத்திறனாளிகளும் நம்மைப் போல் வாழவே விரும்புவதாக சொல்கிறார்.

‘‘அவங்களும் நம்மை மாதிரி அழகு, கவர்ச்சி எல்லாம் விரும்பறவங்கதான். நாமதான் தேவையே இல்லாம பரிதாபம் என்கிற பெயர்ல சோக கீதம் வாசிச்சு அவங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கறோம். நம்மைப் போலவே - ஏன், நம்மை விட புத்திசாலியா, திறமையானவங்களா அவங்க இருக்காங்க. அதை நாம மதிக்கும்போது அவ்வளவு சந்தோஷப்படறாங்க...’’ என ப்ரீத்தி முடித்ததுமே ஷாலினி சரஸ்வதியை தொடர்பு கொண்டோம். ஏனெனில் ப்ரீத்தியின் சிந்தனைக்கு முதன் முதலில் வடிவம் கொடுத்தவர் இவர்தான்.

‘‘சொந்த ஊர் பெங்களூர். பி.காம் படிச்சுட்டு பிபிஓ-ல வேலை பார்த்தேன். அப்பதான் உடல்ரீதியா பாக்டீரியா பிரச்னை வந்து என் கையும் காலும் செயலிழந்து போச்சு. சிகிச்சை எடுத்துகிட்ட ரெண்டு வருஷங்கள்ல என் உடல் குண்டாகிடுச்சு. ஓரளவாவது நடக்கவும் உடம்பை குறைக்கவும் முயற்சிகள் எடுத்தேன். அதன் விளைவுதான் பிளேட் ரன்னர், டான்சர் முகங்கள்.

என் ஃப்ரெண்ட் வழியாதான் ப்ரீத்தி அறிமுகமானாங்க. ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். ஃபோட்டோ ஷூட் எடுத்தப்ப, ‘சிம்பத்திய கிரியேட் பண்ணாதீங்க. இப்படி இருக்கறதுல நான் பெருமைப்படறேன். அந்த சந்தோஷத்தை போட்டோல கொண்டு வாங்க’னு சொன்னேன். இதுதான் இந்த காலண்டர் உருவாகவே காரணம்னு நினைக்கிறப்ப பெருமையா இருக்கு. எல்லாருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒண்ணுதான். எங்களைப் பார்த்து தயவுசெய்து பரிதாபப்படாதீங்க. நாங்களும் அழகானவங்கதான்..!’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஷாலினி சரஸ்வதி.