ஜீப் ரேஸ் பயிற்சி மையம்!



-ப்ரியா

ஆணோ பெண்ணோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாகனம் பிடிக்கும். சிலருக்கு பைக், வேறு சிலர் ஸ்போர்ட்ஸ் பைக்கை விரும்புவார்கள். சிலர், புல்லட் வெறியர்கள். இந்த ரசனை எல்லாம் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமல்ல... நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். இவர்களின் சாய்ஸ் பெரும்பாலும் ஜீப்தான். ஏனெனில் கார் ரேஸ் விளையாட்டின் ஓர் அங்கம். ஜீப் அப்படியல்ல. அது சாகசத்தின் குறியீடு!

‘‘உண்மைதான். இதுக்குனு ஸ்பெஷலா போட்டியும் நடக்குது. குழுக்களும் உண்டு. கார் ஓட்டத் தெரிஞ்ச எல்லாருமே ஜீப் ஓட்டலாம். ஆனா, மலைகள்ல, குன்றுகள்ல, காடுகள்ல, சேறு சகதில சாகச பயணம் செய்ய கண்டிப்பா பயிற்சி தேவை...’’ என்கிறார் முகமது அலி. சென்னையைச் சேர்ந்த இவர், ஜீப்பில் சாகசப் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் புதுப்பேட்டைல. அப்பா அங்கதான் மெக்கானிக் கடை வைச்சிருந்தார். வேன், கார், டூ வீலர்னு எல்லா வண்டியையும் ரிப்பேர் செய்வார். சின்ன வயசுலேந்தே இப்படி வாகனங்கள், புகை, எண்ணெய் வாசனையோடதான் வளர்ந்தேன். வாழ்க்கை எந்தப் பிரச்னையும் இல்லாம மகிழ்ச்சியா போயிட்டிருந்தது. இந்த நேரத்துலதான் ஒருநாள் அப்பா கடைல திடீர்னு தீ விபத்து ஏற்பட்டது.

கிட்டத்தட்ட எல்லாமே சேதமாகிடுச்சு. தொழில்ல சரிவு ஏற்பட்டது. அவர்கிட்ட வேலை பார்த்தவங்க கொஞ்சம் கொஞ்சமா விலகினாங்க. தனியா அவரால கடையை பார்த்துக்க முடியலை. வருமானம் குறைஞ்சதால பள்ளிக்கு ஒழுங்கா போக முடியலை. அப்பாவுக்கு துணையா கடைக்கு போக ஆரம்பிச்சேன். முழுமையா தொழிலை கத்துகிட்டேன். அப்பாதான் எனக்கு குரு. பத்து வருஷ பயிற்சிக்கு அப்புறம் தனியா கடையை பார்த்துக்க ஆரம்பிச்சேன்...’’ சுருக்கமாக தனது பயோடேட்டாவை சொல்லி முடித்த முகமது அலி, ஜீப் சாகசம் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

‘‘சென்னைல ‘ஜீப் த்ரில்லர்ஸ்’னு ஒரு குழு இருக்கு. அர்க்கத் தத்தா அதை நிர்வகிக்கிறார். ஜீப்புல சாகசப் போட்டி நடத்தறதுதான் இவங்க பொழுதுபோக்கே. ஒருநாள் தன் வண்டியை பழுது பார்க்க கடைக்கு வந்தார். என் வேலை அவருக்குப் பிடிச்சிருந்தது. அதனால தொடர்ந்து ரிப்பேர் பார்க்க என்கிட்டயே வர ஆரம்பிச்சார்.

ஒருநாள் பேச்சுவாக்குல ஜீப் சாகசப் பயணத்தைப் பத்தி சொல்லி, என்னையும் வரச் சொன்னார். பயணம் செய்யறப்ப வண்டி ரிப்பேர் ஆனா, பழுது பார்க்க வசதியா இருக்கும் இல்லையா? நானும் போக ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம் எனக்கும் சாகச ஆசை வந்துடுச்சு. இதை புரிஞ்சுகிட்டவர் எனக்கு ஜீப் ஓட்ட கத்துக் கொடுத்தார்.

இதுக்கு அப்புறம் அந்த குழுவோட உறுப்பினராவே மாறிட்டேன். ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் மாசம் ஜீப் பிரியர்களுக்கான சாகசப் போட்டி நடக்கும். 2007ல நடந்த போட்டில நானும் கலந்துகிட்டேன். முதலிடம் பிடிச்சேன். மிகப்பெரிய உத்வேகத்தை இது கொடுத்துச்சு. அப்புறம் நடந்த எல்லா போட்டிக்கும் முதல் ஆளா பெயர் கொடுக்க ஆரம்பிச்சேன். பரிசுகளையும் வாங்கிக் குவிச்சேன்.

எல்லாருக்குமே ஜீப் ஓட்டற என் ஸ்டைல் பிடிச்சிருந்தது. 2013ம் ஆண்டுல சென்னை தவிர, பெங்களூர், ஐதராபாத்துல இருந்தெல்லாம் வந்து போட்டில கலந்துகிட்டாங்க. அந்த வருஷமும் முதலிடம் வந்தேன். இதுக்குப் பிறகுதான் இனி போட்டில கலந்துக்க வேண்டாம், பயிற்சி தர ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன்...’’ என்று சொல்லும் முகமது அலி, போட்டியாளர்கள் விரும்பும் வகையில் ஜீப்பை வடிவமைத்தும் தருகிறார்.

‘‘2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தை மறக்க முடியாது. அப்ப வீட்டுக்குள்ள சிக்கிக்கிட்டவங்களை படகுல போய் பலர் காப்பாத்தினாங்க. நானும் என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்ட மூணு பேரும் ஜீப்புல செம்மஞ்சேரி, புதுநகர் மாதிரியான பகுதிகளுக்கு போய் வெள்ளத்துல சிக்கினவங்களைக் காப்பாத்தினோம். தண்ணீர்ல மட்டுமில்ல... சேறிலும் ஜீப் போகும்.

அதனாலதான் எங்களால மக்களை முடிஞ்ச அளவு காப்பாத்த முடிஞ்சது. அதே மாதிரி வர்தா புயலின்போதும் ஜீப்புல ‘விஞ்ச்’ கயிறுகளை கட்டி முடிஞ்ச அளவு மரங்களை அப்புறப்படுத்தினோம். இதையெல்லாம் எதுக்காக சொல்றேன்னா... ஜீப்பை சாலைலயும் ஓட்டலாம்; சாகசப் பயணமும் மேற்கொள்ளலாம்; இதுமாதிரி இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது உதவவும் செய்யலாம்...’’ என்றவர் அனந்தகிருஷ்ணன், அர்ஷத், ஆனந்த் ராஜன், ஷரவன் குமார் ஆகியோருடன் இணைந்து ஜீப் சாகசப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

‘‘கேளம்பாக்கம், முடிச்சூர், தாம்பரம்... அப்புறம் பீச் மணல்... இதெல்லாம்தான் எங்க பயிற்சி மைதானங்கள்! இரண்டாம் உலகப் போர் சமயத்துல ராணுவ பயன்பாட்டுக்காக ஜீப்பை உருவாக்கினாங்க. அப்புறம் காலப்போக்குல அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துடுச்சு. இந்த இடத்துல இதை குறிப்பிட காரணம் இருக்கு.

ராணுவ பயன்பாட்டுக்கான வாகனம் என்பதால் மேடு பள்ளத்துல கூட இதை ஓட்ட முடியும். காரை எடுத்துக்கிட்டீங்கனா முன்னாடி இருக்கிற இரு சக்கரங்கள் இல்லைனா பின்னாடி இருக்கிற இரு சக்கரங்கள்ல மட்டும்தான் கியர் வேலை செய்யும். ஜீப் அப்படியில்ல. நான்கு சக்கரங்களோடயும் கியர் இணைஞ்சிருக்கு. அதை எப்படி பயன்படுத்தணும்னு நாங்க பயிற்சி அளிக்கறோம்.

சாலைல பயணிக்கிறப்ப பின்சக்கரத்துக்கு கியரை பயன்படுத்தலாம். மலை அல்லது கரடுமுரடான ரோட்ல முன் சக்கரத்து கியரையும் யூஸ் பண்ணலாம். இப்ப ஏணில ஏறும்போது இரண்டு கைகளை பிடிச்சு ஏறுவோம் இல்லையா..? அப்படித்தான் இதுவும். கேரளாவிலும் ஆந்திராவிலும் ஜீப்பை அதிகளவு பயன்படுத்தறாங்க. அந்த மாநில நிலப்பரப்பு அப்படி.

கியர்லயே லோ கியர், ஹை கியர் இருக்கு. மேட்டுல ஏறும்போது வண்டி ஒரு பக்கமா சாயும். அப்படி சாய்ந்த மாதிரியே ஓட்டலாம். ஆனா, ஓவரா சாய்ந்தா வண்டி கவிழ்ந்துடும். ஸோ, சரியா பேலன்ஸ் பண்ணணும். மழைக் காலத்துல தண்ணீர் தேங்கி இருக்கும் சாலை நடுவுல போகறது ரிஸ்க். பக்கவாட்டுல சாய்ந்து போகணும். இந்த மாதிரி நேரத்துல எந்த டிகிரில சாயணும்னு அளவு இருக்கு...’’ என்ற முகமது அலி, ஜீப்பின் அமைப்பை விளக்கினார்.

‘‘பல வகைகள் இருக்கு. நம்ம பயன்பாட்டுக்கு எது தேவையோ அப்படி மாற்றி அமைக்கலாம். மிலிட்டரி ஜீப்புல மேல கேன்வாஸ் துணியால கூரை அமைச்சிருப்பாங்க. நம்மூர் போலீஸ் ஜீப்புல ஃபைரால (fiber) கூரை அமைச்சிருப்பாங்க. கூரையோட எடை அதிகமா இருந்தா மலை மேல ஏறும்போது வெயிட் தாங்காம சாயும். போலீஸ் ஜீப் சாலைல மட்டுமே பயணிக்கும். அதனால இதனோட கூரை எடை அதிகமா இருந்தாலும் பிரச்னையில்ல.

சில வண்டிகள்ல மேல் கூரையே இருக்காது. இதுல ரோல் பார் அட்டாச் செய்ய லாம். சீட்டுக்கு நடுவுல இரும்புக் கம்பி இருக்கும். ‘காக்க காக்க’ சினிமால சூர்யா பயன்படுத்தற ஜீப்பை இதுக்கு உதாரணமா சொல்லலாம். ஜீப் சாய்ந்தாலும் இந்தக் கம்பிங்க உள்ள இருக்கிற ஆட்களை கீழ விழாம பாதுகாக்கும். முக்கியமான விஷயம், ஜீப் ஓட்டறவங்க எப்பவும் சீட் பெல்ட் அணியணும்...’’ என்றவரிடம் பயிற்சி குறித்து கேட்டோம்.

‘‘தார் ரோட்டுல நாங்க பயிற்சி தர மாட்டோம். பாதி உடைந்த மலை, பெரிய பெரிய கற்கள் அமைஞ்ச பாதை... இங்க எல்லாம்தான் பயணம் இருக்கும். ஒரு சில பாதைல ஒரு பக்கம் பெரிய பாறை இருக்கும். அது மேல ஏறி இறங்கணும். பள்ளத்துல எப்படி இறங்கணும்... அந்த சமயத்துல ஸ்டியரிங்கை எப்படி பிடிக்கணும்... அதே மாதிரி மேல ஏறும்போது என்ன செய்யணும்... இதையெல்லாம் முதல்ல லெக்சரா கொடுப்போம். அப்புறம் செய்முறை.

இப்ப வர்ற ஜீப்புல தூரத்துலேந்தே வேகமா வந்தாதான் மேடுகள்ல ஏற முடியும். ஆனா, மண்ணுல இந்த ஜீப்பை ஸ்பீடா ஓட்டலாம். ஸோ, ஜீப்போட அமைப்புக்கு ஏத்த மாதிரிதான் அதை பயன்படுத்தணும். சிலசமயம் மேடுகள்ல ஏறி இறங்கறப்ப சில ஸ்பேர் பார்ட்ஸ் உடையும். பிரேக் ஒயர் அறுந்துடும். ஸ்டியரிங் கட்டாகும். அதனால தரமான ஸ்பேர் பார்ட்ஸைத்தான் பயன்படுத்துவோம். அப்பதான் வண்டி மட்டுமில்ல... நாமும் பாதுகாப்பா இருப்போம். இதெல்லாமே பயிற்சியோட ஓர் அங்கம்தான்...’’ என்று சிரிக்கிறார் முகமது அலி.       

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்