இந்திய பாலியல் பிசினஸின் மதிப்பு 343 பில்லியன் டாலர்!



அதாவது சுமார் ரூ.23 லட்சம் கோடி!

-ச.அன்பரசு

சரியாக 2005 மே 20 அன்று மும்பையில் சங்லி பகுதியில் போலீசாரின் மூர்க்கத்தனமான ரெய்டால் பாலியல் தொழிலாளிகள் திகிலடைந்தது உண்மைதான். ஆனால், இன்று அப்பெண்களை யாரும் தலைமுடியைப் பிடித்திழுத்து தாக்கி, கெட்ட வார்த்தைகளைப் பேசிவிட முடியாது. பாலியல் தொழிலாளிகளான பெண்களும் தம் கவுரவத்தை பாதுகாக்க தயாராகிவிட்டனர். ஆனால் இன்று அவர்கள் தம் உரிமைகளைக் கேட்கத்தொடங்கி உள்ளனர். எப்படி நிகழ்ந்தது இம்மாற்றம்? இதன் பின்னணியில் சங்ராம் அமைப்பின் நிறுவனரும் செயலாளருமான மீனா சேஷூ இருக்கிறார்.

மாற்றத்தின் தொடக்கம்!
சம்பதா கிராமீன் மகிளா சன்ஸ்தா (SANGRAM) எனும் தன்னார்வ அமைப்பின் விழிப்புணர்வு பிரசாரமே, சங்லி பகுதி பாலியல் தொழிலாளிகளின் மீதான காவலர்களின் வன்முறை, நோய் பிரச்னைகளிலிருந்து அவர்களைக் காக்கிறது. எய்ட்ஸ் குறித்தும், அடிப்படை மனித உரிமைகளைக் கற்பிக்கவும் முதலில் மீனா சிரமப்பட்டிருக்கிறார். 1980ம் ஆண்டு பெண்ணுரிமை செயல்பாட்டாளராக தன் பொது வாழ்வைத் தொடங்கியவர், டாடா இன்ஸ்டிடியூட்டில் சமூகநலத்துறையில் பட்டம் பெற்றார். 1986ல் பத்திரி கையாளரான கணவரின் பணி மாற்றத்தினால் மும்பையின் சங்லி பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

‘‘நாம் இயல்பாகவே பெண்களை ஆழமாக கவனிக்காதபோது, முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டும் இங்கென்ன மரியாதை இருக்கும்?’’ என மெல்லிய குரலில் ஊசியாய் குத்தும் உண்மையைப் பேசுகிறார் மீனா. முதலில் பாலியல் தொழிலாளிகளைப் பார்த்ததும், ஆண்கள் தம் பொருளாதார சுரண்டலுக்காக இவர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தாராம். பிறகே உண்மையை உணர்ந்து அவர்கள் மீதான வன்முறை, நோய் ஆகியவற்றிலிருந்து அவர்களைக் காக்க சங்ராம் அமைப்பு மூலம் போராட ஆரம்பித்திருக்கிறார்.

பாலியல் சுரண்டல்!
‘‘இப்பெண்கள் இங்கு வாழ சாத்தியமான ஒரே வாய்ப்பு பாலியல் தொழில்தான். ஆனால், இதைச் சாக்காக வைத்து அரசும் பிறரும் இவர்களை எளிதாக ஏமாற்றுகிறார்கள். நாங்கள் இதை என்றுமே அனுமதிக்க மாட்டோம். சங்ராம், அவர்களின் உரிமைக்குரல்...’’ தீர்க்கமாக ஒலித்த மீனாவின் குரலில் வைரத்தின் உறுதி. பாலியல் தொழிலாளிகளின் மீதான கசப்பு அவர்களின் குழந்தைகளின் மீதும் பரவ, அதனைக் கண்டித்து கார்ப்பரேஷன், முனி சிபல் பள்ளிகளின் முன்னே அக்குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக்கொள்ளக்கோரி பேரணியும் நடத்தியிருக்கிறார்கள் சங்ராம் அமைப்பினர்.

இந்தியாவில் எய்ட்ஸ் நுழைந்த காலகட்டத்தில் - 1980களில் - நகரங்களில்தான் பாதிப்பு அதிகம் என மருத்துவர்கள் கணித்தனர். ஆனால், கிராமப்பகுதியிலிருந்து முதல் நோயாளியாக வந்த பெண்ணே, சங்லி பகுதியைச் சேர்ந்தவர்தான் என்பது பலருக்கும் பெரிய ஷாக். சங்லி பகுதி பாலியல் தொழிலாளிகளுக்கு கோகுல்நகர், ஸ்வரூப் டாக்கீஸ் பகுதிக்கு வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலைகள்தான் பிழைப்புக்கான வாசல். ‘‘கோகுல்நகர் தொழிலாளிகள் எவரும் ஆணுறைகளை பயன்படுத்துவதே இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டிற்கான அரசின் இலவச ஆணுறையை வெளியே எடுக்கும்போதே கிழிந்துவிடுகிறது. இந்நிலையில் அரசின் உதவியை மட்டும் நம்பி எப்படி இவர்கள் நிம்மதியாக வாழ முடியும்?’’ கொதிக்கிறார் மீனா.

கல்வியெனும் அமுது!
சங்ராமின் கல்வி கற்கும் திட்டத்தில் முதலில் இணைந்த தொழிலாளிகளின் எண்ணிக்கை 16. இன்று மகாராஷ்டிராவின் 8 மாவட்டங்களில் மொத்தம் 5 ஆயிரம் நபர்கள் இதில் இணைந்துள்ளனர். சோலாப்பூர், கோலாப்பூர், புனே மாவட்டத்தில் பாராமதி என சங்ராமின் திட்டங்கள் விரிவாக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளன என்பது மீனா குழுவினரின் உழைப்புக்கு சாட்சி.

‘‘‘பாலியல் தொழிலாளர்களுக்கு பேச வாய்ப்பளிக்காமல், அவர்களின் தேவையை எப்படி அறிவது? இச்சூழலில் அவர்களது வாழ்வு குறித்துப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று ஆவேசமாகப் பேசிய மீனாவின் சொற்கள்தான் பாலியல் தொழிலாளர்களின் கள யதார்த்தத்தை புரிய வைத்து அப்பெண்களைக் குறித்த என் எண்ணங்களையே மாற்றியது...’’ என நெகிழ்கிறார் பெண்கள் அமைப்பான ‘கிரியா’வின் இயக்குநரான கீதாஞ்சலி மிஸ்‌ரா.

‘‘பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துபவர்களில் பலரும் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள்தான். எத்தனை மார்க் வாங்குகிறார்கள்? கல்லூரி செல்கிறார்களா? என்றெல்லாம் கவலைப்பட யாருமேயில்லை...’’ என்று ஆதங்கத்தோடு நம்மோடு உரையாடும் சமூக செயல்பாட்டாளர் மித்ரா, கர்நாடகாவின் நிபானியில் மாணவர் விடுதியை சங்ராம் அமைப்புடன் இணைந்து நடத்தி வருகிறார்.

‘‘இத்தகைய சூழலில் வாழும் மக்களை நான் எங்குமே பார்த்ததில்லை. எய்ட்ஸ் நோயோடு போராடும் இம்மக்களுக்கான எங்களது முயற்சிகள் பலனளிக்குமா? தெரியாது. ஆனால், இது நாளைய சமூகத்துக்கான எங்கள் கனவு; நமது குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக நாம் கையளித்துச் செல்லவிருக்கும் பூவுலகு...’’ என திருப்தியுடன் புன்னகைக்கிறார் மீனா சேஷூ.
கல்வி தந்த அம்மா!      

ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் கடத்தல்!

நூறு நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 49% நாடுகள் பாலியல் தொழிலை சட்டபூர்வமாகவும், 39% நாடுகள் அங்கீகாரமற்றும், 12% நாடுகள் நிபந்தனைகளோடும் அனுமதிக்கின்றன. சட்டபூர்வமாக 1.41 பில்லியன் மக்களும், அங்கீகாரமற்று 2.05 பில்லியன் மக்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரம். அதில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 16 மில்லியன். 2016ம் ஆண்டு மட்டும் தில்லியில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆயிரம் (Procon.org, global slavery index 2016).

14 வயது...

பால்வினைநோய் வாய்ப்பு குறைவு என்பதால், விபச்சாரத்துக்காக கடத்தப்படும் பெண்களின் இப்போதைய வயது 14 என்கிறது தஸ்‌ரா நிறுவன அறிக்கை. ‘‘இந்தியாவில் பாலியல் தொழிலின் மூலம் 343  பில்லியன் டாலர்கள் வருமானம் கொழிக்கிறது...’’ என்கிறார் நோபல் பரிசு வென்ற சமூக ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி.

தில்லி ஜிபி சாலையின் மாத வருமானம் ரூ.100 கோடி!

தில்லி ஜிபி சாலையில் பாலியல் தொழில் நடக்கும் 90 இல்லங்களில் 5 ஆயிரம் பெண்களும் 800 குழந்தைகளும் வாழ்கின்றனர். தோராயமாக ஒரு பெண் பாலுறவுக்கு வசூலிக்கும் தொகை ரூ.350. இதில் பெரும்பகுதி அவரை பாதுகாப்பவருக்கு சென்றுவிடுகிறது. எஞ்சியது மட்டுமே அப்பெண்ணுக்கு. என்றாலும் ஜிபி சாலையின் மாத வருமானம் ரூ.100 கோடி.

பெண்கள் மற்றும் குழந்தைகளை சட்டத்துக்கு புறம்பாக கடத்துவதை தடுக்கும் ((ITPA(3,7,18)) சட்டப்படி, 3 மாதங்களிலிருந்து - 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 200 - 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். தில்லியின் ஜிபி சாலை, மும்பையின் காமாத்திபுரா, கொல்கத்தாவின் சோனாகாச்சி ஆகிய இடங்களிலுள்ள பாலியல் மையங்களுக்கு யார் உரிமையாளர் கள் என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை!

சங்ராம் ஹிஸ்டரி!

1991ம் ஆண்டு 54 பணியாளர்களோடு மீனா சேஷூ தொடங்கிய சங்ராம் அமைப்பு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வூட்டும் முயற்சியை தன் பணியாளர்களைக் கொண்டு முன்னெடுத்தது. இதனால், பால்வினை நோயாளிகளை தினமும் பரிசோதித்து அவர்களின் நோய், கருவிலுள்ள குழந்தைக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

2004ல் சங்லி பகுதி குழந்தைகளுக்கு, வீட்டிலேயே கல்வி கற்பிக்கும் முயற்சிகள் தொடங்கின. 2006ல் காசம் திட்டத்தால், பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான முயற்சிகள் வேகமெடுத்தன. இன்று, சங்ராம் அமைப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகளை மாதம்தோறும் வழங்கி வருகிறது.