பச்சை நடிகைகள்!



-ஷாலினி நியூட்டன்

டக்கரான டாட்டூஸை குத்திக் கொள்ளாத நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு உடல் பாதி டாட்டூஸ் மீதியாக நம் நட்சத்திரங்கள் வலம் வருகிறார்கள். ரைட். எந்தெந்த இடங்களில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்கள்? இடுப்பழகி சிம்ரன் சில்லென இடது மார்பில் குத்திக் கொண்ட டாட்டூவில் ஆரம்பித்தது இந்த அரிய வரலாறு. அதே பாணியில் த்ரிஷா ஒரு மீன் பொம்மையை நெஞ்சில் நீந்த விட்டார். அவரே இடது கை மணிக்கட்டில் ஒரு சின்ன டாட்டூ குத்திக்கொண்டது நியூ அப்டேட்.

இந்த இடது நெஞ்சில் டாட்டூ குத்திக்கொண்ட நடிகைகள் கொஞ்சம் அதிகம். பூ வரைந்த நடிகை ரோஜா, கொடியை படர விட்ட ரியா சென்... என சொல்லிக்கொண்டே போகலாம். டான்ஸிங் கேர்ள்ஸை காலில் செதுக்கிய டாப்ஸி டாப் எனில் காதுக்கடியில் மியூசிக் சிம்பள் போட்டுக்கொண்ட காஜல் கலக்கலோ கலக்கல்.

ஹாலிவுட்டில் கால் பதித்த பிரியங்கா சோப்ரா கைகளில் ‘daddy’s lil girl’ என போட்டிருப்பார் இந்த அப்பா செல்லம். முதுகில் தன் பெயரைக் குத்திக் கொண்ட ஷ்ருதியும், ஸ்டார்களை பறக்க விட்ட நமீதாவும் நம்ம லிஸ்ட்ல எப்படி மிஸ் ஆவாங்க பாஸ்! சார்மியின் இடது தோளில் வாவ்டா ஸ்டைல் ட்ராகனைப் பார்க்கலாம். மதுமிதாவின் தோள்பட்டையில் ஓம் சிம்பள், மந்த்ரா பேடி வயிற்றில் சூரியன் படம், அலியா பட் பின் கழுத்தில் ‘படாகா’ - அதாவது ‘FireCrackers’ என இதற்கு அர்த்தமாம்!

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான சோனாக்க்ஷி சின்ஹாவின் கழுத்தடியில் சின்ன ஸ்டார் மின்னும். அசினின் வலது தோளில் சின்னப்பூ எனில் நம்ம குஷ்பூ அக்கா முதுகில் மயில் ஸ்டைல் கொடி. தீபிகா படுகோனேவின் பின் கழுத்தில் ஜொலிக்கும் ‘RK’வை ரன்பீர் கபூர் எனவும் சொல்லலாம்.

ஆனால், இப்போது டாட்டூ இருக்கு. காதல் இல்லை. இந்த மாதிரி காதலால் கலகம் ஆன சில டாட்டூக்களும் உண்டு. நம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கே அடிசறுக்கியது ‘பிரபு’ என்ற இப்போதும் இருக்கும் டாட்டூதான்! சுஷ்மிதா குத்திக் கொண்டது கொஞ்சம் நீளமான ஸ்லோகன் ‘Aut Viam Inveniam Aut Faciam’ அதாகப்பட்டது ‘I shall either find a way or make one’. தமிழில் இதை ‘நான் ஒரு பாதையைக் கண்டுபிடிப்பேன் அல்லது ஒன்றை உருவாக்குவேன்’ என குத்து மதிப்பாக பொருள் கொள்ளலாம்.

எட்டுக்கு மேலான டாட்டூக்களைக் குத்திக் கொண்டு படங்களில் அதை மேக்கப்பில் மறைக்க கஷ்டப்பட்ட பிரியா ஆனந்த் இப்போதெல்லாம் டாட்டூக்களை வரைந்து கொள்வதில்லை. போலவே சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் டாட்டூக்களை வரைந்த முமைத்கானும் இப்போது திருதிருவென விழிக்கிறார். டாடி மம்மி வீட்டில் இல்லை என்றால் இப்படித்தான் எக்குத்தப்பாக ஆகும் போல!