ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 8

தேனிசை செல்லப்பாவின் குரல், கூட்டத்தைக் கட்டிப் போட்டுவிடும். அவர் கச்சேரிக்குப் பிறகு எத்தனை பெரிய சொற்பொழிவாளர்கள் வந்தாலும் அவர்கள் பேச்சு எடுபடாது. அரங்கு முழுவதையும் பறித்துக்கொண்டு போய்விடுவார். இன உணர்வையும் மொழி உணர்வையும் கொதிநிலைக்கு கொண்டுவந்து நிறுத்துவார். இப்பொழுதே கிளம்பிப்போய் துப்பாக்கிக்கு இரையாகத் தோன்றும். எனக்கும் சரவணனுக்கும் அந்த நாள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தேனிசைத் தென்றல் தேவாவை மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு தேனிசை செல்லப்பா என்ற பெயரும் அவரின் அசாதாரண இசை அர்ப்பணிப்பும் அன்றுதான் புரிந்தது. உலகநாடுகள் முழுக்க அவர் பாடலால் அறியப்பட்டிருக்கிறார். குறிப்பாக, ஈழத் தமிழர்கள் அவர் பாடலுக்காக தவம் கிடக்கிறார்கள். அவர் ஒரு மேடையில் பாடுகிறார் என்றால் அது அவர்களுக்கு மேடை அல்ல. போர்க்களம். இன்றும் இவரால் பாடப்பட்ட ‘சந்தன பேழையில்’ என்று ஆரம்பிக்கும் புதுவை ரத்தினதுரையின் பாடலைத்தான் மாவீரர் நாளில் இசைக்கிறார்கள்.

மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் அப்பாடலை இசைக்கும்போது கண்ணீர் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழிசைக்கு நெடிய வரலாறு உண்டு. ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிருத சாகரத்திலிருந்து’ அவ்வரலாறு தொடங்குகிறது என சிலர் சொன்னாலும் அதற்கு முன்பிருந்தே அதாவது, சங்க இலக்கிய காலத்திலேயே அதன் வேர் இருப்பதாக இன்னும் சிலர் ஆய்ந்திருக்கிறார்கள். தேனிசை செல்லப்பா அந்த வேரின் கிளைமரமாகவே கிளைத்திருக்கிறார்.

இல்லையென்றால், அவர் பாடலைக் கேட்டு ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்மணி தாலிக்கொடியை, வளையலை, காது கம்மலை, இன்னபிற ஆபரணங்களை கழற்றி ஈழப் போருக்கு நிதியாகக் கொடுத்திருக்க மாட்டார். ‘எப்படித் தாங்குவது, எப்படி தாங்குவது, ஈழ தேசம் எதிரி கையில், எப்படித் தாங்குவது’ என்று அவர் மேடையில் பாடப் பாட கண்ணீர் உகுத்த அப்பெண்மணி தாமாகவே மேடைக்கு  வந்து தன்னிடமிருந்த நகைகளை நிதியளிப்புப் பெட்டியில் போட்டிருக்கிறார்.

கொடுமுடி கோகிலம் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தரம்பாள், இந்திய விடுதலைக்கு நிதி வசூல் செய்து கொடுத்ததைப் போல தேனிசை செல்லப்பாவும் ஈழ விடுதலைக்கு தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார். இதயத்தின் ஆழத்திலிருந்து பாடும் பாடகர்களால் மட்டும்தான் அப்படியான வரலாறுகளை உருவாக்க முடியும். தேனிசை செல்லப்பா தமிழின வரலாற்றில் தவிர்க்கமுடியாத இசை அத்தியாயம் ஒருமுறை நார்வேயில் தேனிசை செல்லப்பாவின் இசைக்கச்சேரி. அரங்கு நிறைந்த கூட்டம்.

அந்தக் கச்சேரியில் தம்பிராஜா என்ற ஈழத்தமிழர் கலந்து கொள்கிறார். அதுவரை அப்படியொரு கச்சேரி நிகழ்ந்ததில்லை என்பதால் சிலிர்க்கிறார். அதன் காரணமாக அடுத்த ஆண்டும் செல்லப்பாவின் கச்சேரியில் கலந்துகொள்ள எண்ணுகிறார். என்றாலும், நோய் அவரை வரமுடியாதவாறு படுத்த படுக்கையாக்கிவிடுகிறது. ஒருகட்டத்தில் நோய்முற்றி, இனி பிழைக்க வழியில்லை என மருத்துவர்களும் சொல்லிவிடுகிறார்கள்.

அந்த அடாத சோகத்திலும் அவர் வருத்தப்பட்டது செல்லப்பாவின் கச்சேரியை கேட்க முடியாமல் போய்விட்டதே என்றுதான். வருத்தப்பட்டவர், அத்தோடு நில்லாமல் தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, இந்த ஆண்டு அய்யா வந்து மேடையில் பாடும்போது என் வருத்தத்தை தெரிவித்து இதை அவர் விரலில் அணிவியுங்கள், என்றிருக்கிறார். மனைவியும் மகளும் அந்த சம்பவத்தை சொல்லி அதன்படியே மோதிரத்தை அணிவித்திருக்கிறார்கள். அந்த மோதிரத்தை அய்யா தன் இறுதிக் காலம்வரை அணிந்திருக்க வேண்டும் என்பது தம்பிராஜாவின் விருப்பம்.

தமிழ்ச் சான்றோர் பேரவை விழாவில், குழல் விளக்கில் பட்டுத்தெறித்த மோதிரத்தின் ஒளிக்குப் பின்னே இப்படியொரு செய்தியிருப்பது நெடுநாள் கழித்தே எனக்கும் சரவணனுக்கும் தெரிய வந்தது. தேனிசை செல்லப்பாவை புலம்பெயர்ந்த தமிழர்கள் கொண்டாடிய அளவுக்கு தமிழகம் கொண்டாடவில்லை. இங்கே இருக்கும் ஒருசில தமிழ் அமைப்புகளின் மேடைகளில் அவர் இன்றும் பாடி வருகிறார். பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், புதுவை ரத்தினதுரை, காசி ஆனந்தன், கவியன்பன் பாடல்களை அவர் பாடும்பொழுது நம்மையு மறியாமல் உணர்வுத் தளத்தில் சஞ்சரிக்கத் தொடங்குவோம்.

இசைக் கச்சேரி என்பதிலும் பார்க்க, தமிழிசை மீட்பையே அவர் ஒவ்வொரு மேடையிலும் செய்துவருகிறார். 1990ல் யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் ஐந்துலட்சம்பேர் கூடி, அவர் கச்சேரியை கெளரவித்ததை வீரகேசரி தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. 1996ல் லண்டன் லம்போர்ட் ஸ்டேடியத்தில் இருபதாயிரம்பேர். பதினெட்டாயிரம் பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில் இரண்டாயிரம்பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

அனுமதி மறுக்கப்பட்ட அவர்களுக்காக அடுத்த சில நாட்களும் கச்சேரியைத் தொடர்ந்திருக்கிறார்கள். இப்போது சென்னைப் புறநகரை அடுத்த படப்பையில் வசித்துவருகிறார். இரண்டாயிரம் பாடல்கள். ஏராளமான இசைத்தட்டுகள். ஆயிரக்கணக்கான மேடைகள் என தமிழர்கள் வாழும் நிலப்பரப்பெங்கும் அவர் பயணித்திருக்கிறார். லண்டனில் மைக்கேல் ஜாக்ஸனுக்குப் பிறகு அதிகமான ரசிகர்களை ஈர்த்தவராக தேனிசை செல்லப்பாவைச் சொல்கிறார்கள்.

ஆனால், உள்ளூர் மேடைகளோ அவரை ஒதுக்கி வைத்திருக்கின்றன. இசை விழாக்களிலோ ஊடகங்களிலோ அவர் முகம் தென்படுவதில்லை. நானும் தம்பி ஆரோக்கியதாஸூம் அவரை ‘49ஓ’ திரைப்படத்தில் ‘இன்னும் எத்தனை காலம் வரை’ என்னும் பாடலைப் பாடவைத்தோம். சமூக மாறுதலுக்கான சிந்தனைகளை உள்ளடக்கிய அப்பாடலை எத்தனைபேர் கேட்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை.

பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த நடிகர் சத்யராஜ் அவரைப்பற்றி சொன்னபோதுதான் அந்தப் படக்குழுவினருக்கே அவரைப்பற்றித் தெரிந்தது. தோளில் நீலத்துண்டு, சட்டைப் பையில் திருக்குறள் புத்தகம். இதுவே தமிழன் தன்னை தமிழனாக அறிவிக்கும் அடையாளம் என்றார் ஆதித்தனார். அந்த அடையாளத்தை தேனிசை செல்லப்பா இழக்க விரும்புவதில்லை.

ஒருவரை யார் என்று அறிந்துகொள்வதும் அவரைப் பின் தொடர்வதும் அவசியம். ஒருவரையும் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்தாலும் சொல்வதில்லை என்பதே இன்றைய தமிழ் இசை விமர்சகர்களின் போக்காக இருக்கிறது. ஒரு மேடையில் தேனிசை செல்லப்பா பாடுகிறார் என்றால் அந்தக் கச்சேரியைக் கேட்பது கடமை என்று ஈழத்தமிழர்கள் கருதுகிறார்கள். நாமோ அவர் யாரென்றுகூட அறியாமலிருக்கிறோம்.

உணவுக்காக ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள போய் உணர்வு வயப்படுப்பட்டுவிட்ட நாங்கள் அதன்பின் சோம்பிக் கிடந்த சென்னையை சொர்க்கபுரியாக்கும் சிந்தனைகளுக்கு இடமளிக்கவில்லை. சோற்றுக்கு வழிதேடி, சொந்த ஊருக்கு போகாமலிருக்கும் காரியங்களில் ஈடுபடுகிறோம். சென்னைதான் உங்களுக்கான களம் என்று சொல்லி, எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய தோழர்களுக்கு எங்களை ஆளாக்கிப் பார்க்கவேண்டும் என்னும் ஆசையிருந்தது.

இலக்கியம், சினிமா, அரசியல், பத்திரிகை என பொதுசனத்தோடு தொடர்புடைய ஏதோ ஒரு துறையில் செயலில் நாங்கள் ஈடுபடவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதற்காகவே அவ்வப்போது அவர்கள் எங்கள் கொம்புகளை சீவி, ஜரிகை ரிப்பன்களை கட்டிவிட்டார்கள். அது புரியாமல் ஆரம்ப காலங்களில், சமூகத்தை முட்டிமோதி வீழ்த்திவிடலாம் என்னும் மூர்க்கத்தோடு சுற்றிக்கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு நாளின் முடிவும் இன்னொரு நாளின் தொடக்கத்தை அல்லாமல் அனுபவங்களையே வழங்குகின்றன. அநேகமாக, தொண்ணூறுகளில் சென்னை நகரில் நடந்த அத்தனை விழாக்களிலும் நாங்கள் கலந்துகொண்டிருக்கிறோம். மதிய உணவோடு கூடிய விழாவென்றால் முதல்நாளே பவுடரடித்து கிளம்பியிருக்கிறோம். வறுமை சோபித்திருக்கும் காலங்களில் பாடல்களும் கவிதைகளும் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தும்.

லட்சிய வாழ்வை நோக்கி நகர்வதற்கும் லட்சோப லட்ச மக்களை அடைவதற்குமான வழியைக் காண்பிக்கும். திலீபனுக்கும் அப்படித்தான் தேனிசை செல்லப்பாவின் குரலில் தோய்ந்திருந்த உண்மை பிடிபட்டிருக்கும். எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அந்த மக்களின் தொன்மங்கள்மீது ஒரு போராளி தன் பார்வையை செலுத்த இலக்கியங்களே உதவுகின்றன. இசைப்பாடல்கள் துணைபுரிகின்றன.

கண் பார்வையில்லாத இந்தி இசையமைப்பாளர் ரவீந்திரன் ஜெயினின் அதிகமான பாடல்களை கே.ஜே.யேசுதாஸே பாடியிருக்கிறார். யேசுதாஸ் பாடிய ‘கோரி தேரா’ போன்ற எண்ணற்ற வெற்றிப் பாடல்களை ரவீந்திரன் ஜெயினின் இசையில் கேட்பது தனி அனுபவம். ஒருமுறை ரவீந்திரன் ஜெயினிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார், ‘கண் பார்வையில்லாத உங்களுக்கு பார்வை வந்தால் யாரை முதலில் பார்க்க விரும்புவீர்கள்?’ ரவீந்திரன் ஜெயின் வழக்கமான தன் புன்னகை இழையோட பதிலளித்தார்.

‘யேசுதாஸை பார்க்கவே விரும்புவேன்! அரூபத்திலிருந்து இசையை கொண்டுவந்த என் ரூப லட்சணங்களை உலகமறியச் செய்தவர் அவரல்லவா? அவரில்லாமல் நானில்லையே. என்னை அவர் பிரதிபலித்திருக்கிறார். சுருதிகளாகவும் ஸ்வரங்களாகவும் மட்டுமே ரூபங்களை அறிந்துவந்த எனக்கு அவரைத் தாண்டி யாரை முதலில் பார்க்கப் பிடிக்கும்’ என்றாராம். தேனிசை செல்லப்பாவும் அத்தகைய சிறப்புடையவரே.

இன்றைக்கு உலகமெங்கும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் அவருடைய குரலிலிருந்து தங்களைப் பார்க்கிறார்கள். மரபார்ந்த தங்கள் இசையின் மூல வடிவை நோக்கிய அவர்களின் தேடலுக்கு தேனிசை செல்லப்பா உதவி வருகிறார். இதுதான் தமிழனின் இசை என்பதுபோல எண்பது வயதிலும் அந்தக் குரல் போராளிகளுக்காக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்கு பாடினாலும் தனக்கு எவ்வளவு தருவீர்கள், என்று பெரியாரே அவரைக் கேட்கச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், அவர் எந்த இடத்திலும் பணத்துக்காக பாடுவதில்லை. இனத்துக்காகவே பாடிவருகிறார். போதாமையை போக்கக் கிளம்பிய நானும் சரவணனும் செல்லப்பா போன்றோருக்குக் கிடைக்காத அங்கீகாரத்தைத் தேடித்தான் இப்போதும் அலைந்துகொண்டிருக்கிறோம்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்