YouTubeல் புத்தக விமர்சனம்!



-பேராச்சி கண்ணன்

அமெரிக்க அழகிப் போட்டியிலிருந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை அனைத்தும் வீடியோவாக அரங்கேறும் இடம் யூ டியூப். இதில் டப்மாஷ், சினிமா விமர்சனம், காமெடி, கலாய்ப்பு புதுப்பட டீசர்கள்... என காக்டெயில் ஆக ஜாலியாகப்  பார்த்து ரசித்திருப்போம். குழந்தைகள் குளிப்பதிலிருந்து, குறும்படங்கள் வரை வீடியோவாக போட்டு ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருப்போம். 

ஆனால், முதல்முறையாக புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் முயற்சியாக வீடியோ வடிவில் புத்தக விமர்சனத்தை அமர்க்களமாகக் கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். ஒன்றல்ல... இரண்டல்ல... கடந்த ஓராண்டில் மட்டும் 47 தமிழ்ப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி விமர்சனம் செய்திருக்கிறார். எப்படி பாஸ் இப்படி என அவரிடமே கேட்டோம். ‘‘போன வருஷம் ஜனவரி மாசம்தான் இந்த விமர்சனத்தை ஆரம்பிச்சேன்.

முன்னாடி எல்லாம் புத்தக அறிமுகம், நண்பர்கள் மூலமாகவோ அல்லது பத்திரிகையில் வர்ற விமர்சனங்கள் வழியாகவோ நமக்கு கிடைக்கும். இப்ப, டெக்கோ ஜெனரேஷன். சாப்பிடறதுலேந்து தூங்கற வரைக்கும் எல்லா நேரமும் டெக்னாலஜிலயே மூழ்கியிருக்காங்க. யூ டியூப் தொழில்நுட்பம் உண்மைல நமக்கு கிடைச்சிருக்கிற கிப்ஃட். அதுல சமூக அக்கறையுள்ள நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துற மாதிரி ஒரு சேனலை ரன் பண்ணினா என்னனு தோணிச்சு.

நண்பர்கள் கைகொடுத்தாங்க. இறங்கியாச்சு...’’ என்று சிரிக்கும் கார்த்திக், மதுரையைச் சேர்ந்தவர். சாஃப்ட்வேர் எஞ்சினியர். ‘‘இதுல, எனக்கு பக்கபலமா என் தம்பி மௌலி, ரூம்ல ஒண்ணா இருந்த பார்த்திபன், இந்திர பிரசாத்னு எல்லாரும் உதவறாங்க. எங்ககிட்ட பெரிய கேமரா எல்லாம் கிடையாது. செல்போன் கேமரால இந்த நண்பர்கள்தான் ஷூட் பண்ணி தர்றாங்க. 1998 முதல் புக்ஸ் படிக்கறேன். அதனாலதான் தைரியமா வாரம் ஒரு புக்குனு முடிவு செஞ்சோம். ஆனா, அவ்வளவு சுலபத்துல எங்க எண்ணம் நிறைவேறலை.

ஏன்னா, ஒரு வாரத்துக்குள்ள சமூகம் சார்ந்த நூல்களை படிச்சு முடிக்கறது கஷ்டம். அதைப் பத்தின அறிமுகத்தை பேசறதோ அதைவிட சிரமம். சில புத்தகங்களை படிச்சு முடிச்சதும் அதனோட தாக்கம் ஒரு மாசம் வரைக்கும் கூட இருக்கும். வேற நூல்களை படிக்க தோணாது. இது மாதிரி நேரங்கள்ல ஏற்கனவே நான் படிச்ச நூல்களை பத்தி பேசிடுவேன். கனமான புத்தகங்களைத்தான் ரிவ்யூ செய்வேன்னு இல்ல.

தந்தை பெரியாரோட ‘பெண் ஏன் அடிமையானாள்’, பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் ஏன்’ மாதிரியான சிறு நூல்களைக் கூட அறிமுகம் செய்வேன்...’’ என்ற கார்த்தியிடம், இதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று கேட்டோம். ‘‘உண்மையை சொல்லணும்னா பெருசா வரவேற்பு இல்ல. நண்பர்கள் பார்த்துட்டு ஃபேஸ்புக்ல ஷேர் செய்வாங்க. அதைப் பார்த்துட்டு ஒருசிலர் எங்க யூ டியூப் தளத்துக்கு வருவாங்க. முகநூல்ல நூறு லைக்ஸ் விழுந்தாலே பெரிய விஷயம்.

இப்படிதான் நிலைமை இருக்கு. ஆனா, இதுக்காக நான் சோர்ந்து போகலை. அஞ்சு பேரை ரீச் பண்ணினா கூட போதும். காலமே அந்த அஞ்சை அம்பதா, ஐந்தாயிரமா, ஐம்பதாயிரமா உயர்த்தும். அதிகபட்சம் ஒரு புத்தகத்தை பத்தி பத்து நிமிஷம்தான் பேசுவேன். வீடியோ குவாலிட்டில கவனம் செலுத்துங்க... எடிட்டிங்கை ஷார்ப்பா ஆக்குங்கனு சொல்றாங்க. புத்தகம் எளிமையானவர்களோட உலகம். அதை பிரம்மாண்டப்படுத்த வேண்டியதில்லனு நினைக்கிறேன். தமிழகத்துல இது புது முயற்சி. நாளைக்கு என்னை விட சிறப்பா பல பேர் செய்யலாம். செய்யணும்னுதான் விரும்பறேன்...’’ என்று சொல்லும் கார்த்திக், இப்போது தன் தம்பி மெளலியையும் இதில் டிரெய்ன் செய்து வருகிறார்.