தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அழகினில் தெரிவதுண்டோ..!



-ஷாலினி நியூட்டன்

யுனெஸ்கோ சொல்லாமலேயே சகலருக்கும் தெரியும். உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றும்தான் மனிதர்களுக்கு அவசியம் தேவை என்று. என்ன பயன்? எல்லோருக்கும் இந்த மூன்றும் கிடைப்பதில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வு சார்ந்து இவை மாறுபடுகின்றன. இது ஒரு பக்கம் எனில், பொருளாதார ரீதியாக ஸ்ட்ராங் ஆக இருப்பவர்களில் சிலருக்கு உடையே பிரச்னையாக இருக்கிறது.

உதாரணமாக அதீத உடல் எடை கொண்டவர்கள். வயது முதிர்ந்தவர்கள். மாற்றுத் திறனாளிகள். இவர்களுக்கும் டிசைன் டிசைன் ஆக ஆடைகளை அணிய வேண்டும் என ஆசை இருக்காதா? இதை மனதில் வைத்துதான் ஃபேஷன் டிசைனரான ஷாலினி விசாகன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான ஆடைகளை உருவாக்கியுள்ளார்.
 
“சொந்த ஊர் ஹைதராபாத். படிச்சது பி.காம். திருமணத்துக்கு பின் சென்னை வாழ்க்கை. சாதாரண ஹவுஸ் ஒயிஃப். ஃபேஷன் மேல கொள்ளை ஆசை. அதனாலயே டிப்ளமா முடிச்சுட்டு டிசைனராகிட்டேன்...’’ 140 சொற்களில் டுவிட் போடுவது போல் தன் பயோ டேட்டாவை ஒப்பித்துவிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான டிசைன்ஸ் குறித்து விரிவாக பேச ஆரம்பித்தார் ஷாலினி.

‘‘என் கணவர் விசாகன், ஒரு மாற்றுத்திறனாளி. அவருக்கான டிரெஸ்ஸை நான்தான் டிசைன் செய்வேன். அவருக்கு சின்னதா ஒரு கப் அமைப்பு, கைல இருக்கணும். இப்படி சில விஷயங்களை செஞ்சாதான் அவரால மத்தவங்க மாதிரி உடுத்த முடியும். இப்படி பார்த்துப் பார்த்து செய்யறப்பதான் ஒண்ணு தோணிச்சு. என் கணவர் மாதிரி எத்தனை பேர் இருக்காங்க? அவங்க உடல்ல எவ்வளவு பிரச்னைகள் இருக்கும்? அதெல்லாம் வெளில தெரியாத மாதிரி உடை அணிய அவங்களுக்கும்தானே ஆசை இருக்கும்...?

இதை எல்லாம் அசை போட்டு பார்த்துட்டுதான் களத்துல இறங்கினேன். ஃபேஷன் ஷோவும் நடத்தினேன். ஷோவோட கான்செப்டுக்கு புரொஃபஷனல் மாடல்ஸை பயன்படுத்தலை. உண்மையான மாற்றுத்திறனாளிகளையே தேர்ந்தெடுத்து அவங்களுக்குனு ஸ்பெஷலா டிரெஸை உருவாக்கினேன். ஜீன்ஸ், சோலி, புடவை... ஏன் ட்ரெண்டி மேக்ஸி கவுன் அணியவும் அவங்களுக்கு ஆசை இருக்கும்.

வீட்டு ஃபங்ஷன்ல ஸ்பெஷல் டிரெஸ் போட்டுக்க ரொம்பவே சிரமப்படுவாங்க. ஏன்னா, நார்மல் சைஸ் அவங்களுக்கு போதாமையோட இருக்கும். ஸோ, மத்தவங்களோட உதவி அதிகப்படியா தேவைப்படாத, கவுன் மாதிரி போட்டுக்கற அல்லது பட்டன் ஸ்டைல்ல மாத்தினேன். கூடவே அவங்க விரும்பற மாதிரியான - எல்லோரும் பொதுவா அணியக்கூடிய - உடைகளா அவை இருக்கிற மாதிரியும் பார்த்துகிட்டேன்.

இதுக்கு கிடைச்ச வரவேற்பு உற்சாகப்படுத்தி இருக்கு. இன்னும் பெரிய அளவுல இதை கொண்டு போக திட்டமிட்டிருக்கேன். நிறைய ஆசிரமங்கள் போய் ரிசர்ச் பண்ணறேன். பெற்றோர்களை சந்திச்சு உடை உடுத்தறப்ப என்னென்ன பிரச்னைகளை மாற்றுத் திறனாளிகளும் மனவளர்ச்சி குன்றியவர்களும் அனுபவிக்கறாங்கன்னு ஸ்டடி செய்யறேன். கூடிய சீக்கிரத்துல இவங்களுக்கான ஸ்பெஷல் பொட்டிக்கை தொடங்கிடுவேன்னு  நினைக்கறேன்...’’ என்று சிரிக்கிறார் ஷாலினி விசாகன்.   

படங்கள்: ஆ. வின்சென்ட் பால்