பங்கி ஜம்பிங்கில் டீ!



-த.சக்திவேல்

பங்கி ஜம்பிங்தான் எனக்கு உசுரு. வாழ்க்கைல த்ரில் இருக்கணும். இல்லைன்னா வாழறதே வேஸ்ட். ஸோ, மலை உச்சிலேந்து... பாலத்து மேலேந்து எப்பவும் டைவ் அடிச்சுகிட்டே இருப்பேன். ஒருநாள் திடீர்னு தோணிச்சு. ஏன் ஏதாவது சாதனை செய்யக் கூடாது? உடனே களத்துல இறங்கிட்டேன்...’’ உற்சாகமாக சொல்கிறார் சைமன் பெர்ரி. இங்கிலாந்தை சேர்ந்த இவர், கடந்த மாதம் விநோத சாதனை மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

அப்படியென்ன விநோதம்? டீயும் பிஸ்கட்டும்தான்! ‘குஷி’ படத்திலேயே பிங்கி ஜம்பிங் என்றால் என்னவென்று விஜய் விளக்கிவிட்டார். மலை உச்சியிலிருந்து காலில் கயிற்றைக் கட்டி குதித்து காண்பித்தும்விட்டார். அப்படிப்பட்ட பிங்கி ஜம்பிங்குக்கு தயாரான சைமன் பெர்ரி, மறக்காமல் தன் கையில் பிஸ்கெட்டை எடுத்துக்கொண்டு 70 மீட்டர் உயரத்திலிருந்து குதித்தார். தரையில் ஒரு க்ளாசை வைத்திருந்தார்கள். அதனுள் சுடச் சுட டீ. தலைகீழாக கீழே வந்த பெர்ரி, சரியாக தன் கையில் இருந்த பிஸ்கெட்டை டீயில் நனைத்து சாப்பிட்டார்! சபாஷ்... என கின்னஸ் சாதனையில் பெர்ரியை இணைத்துவிட்டார்கள்!