பீப் சாங் சர்ச்சைக்கு அனிருத் பதில்!



-மை.பாரதிராஜா

‘‘டீஸர் பாக்கறீங்களா..? ஸாங்ஸ் கேட்டீங்களா..? இல்லைனா இப்ப கேட்கறீங்களா..?’’ கேள்விகளை அடுக்கியபடி பதிலை எதிர்பார்க்காமல் ஐபோனில் டீஸரை அதிர விடுகிறார் சாய் பரத். செம ஃப்ரெண்ட்லி கேரக்டர். விவேக், நரேனுடன்  அனிருத்தின் கஸின் ரிஷிகேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ரம்’ படத்தின் அறிமுக இயக்குநர்.

‘டைட்டில்லயே சரக்கு வாடை அடிக்குதே?’ என கச்சேரியை ஆரம்பித்ததும் பக்கென்று சிரிக்கிறார் சாய். ‘‘இது எதேச்சையா நடந்த விஷயம் பாஸ். ‘தீர்ப்பு’னுதான் முதல்ல தலைப்பு வைச்சிருந்தேன். ‘அடப்பாவி... சீரியல் மாதிரி இருக்குய்யா. உன்னோட கதைல ஹாரர், காமெடி, ஆக்‌ஷன்னு எல்லாம் இருக்கு. முதல்ல டைட்டிலை மாத்து’னு நண்பர்கள் சட்டையை பிடிச்சு உலுக்கினாங்க. எனக்கும் அது சரின்னு பட்டது. ரூம் போட்டு யோசிச்சேன். முடி கொட்டினதுதான் மிச்சம். அப்பதான் சட்டையை உலுக்கின அதே ஃப்ரெண்ட்ஸ், ‘தீர்ப்பு’னா பண்டைய தமிழ்ல ‘ரம்’னு அர்த்தம்னு ஆதாரத்தை கொண்டு வந்து கொட்டினாங்க. மண்டைக்குள்ள அப்பதான் பாஸ் பல்பு எரிஞ்சுது!

இந்த கதையை புரொட்யூசர் விஜயராகவேந்திரா, அனிருத்னு எல்லார்கிட்டயும் சொன்னேன். ‘கதை பிடிச்சிருக்கு’னு சொல்லாம ‘என்ன டைட்டில் வைச்சிருக்கீங்க’னு கேட்டாங்க. ‘ரம்’னு சொன்னேன். ‘என்ன அர்த்தம்’னு கொக்கிப் போட்டாங்க. எரிஞ்ச பல்பை திறந்து காட்டினேன். ‘ஆஹா’னு துள்ளி குதிச்சாங்க. ரசிகர்களும் அப்படி கேள்வி கேட்டு பதிலை வாங்கி ‘உர்ரே’னு டான்ஸ் ஆடுவாங்கனு நம்பிக்கை இருக்கு...’’ உற்சாகம் வழிய வழிய பேசுகிறார் சாய்.

காமெடி, ஆக்‌ஷன், ஹாரர்னா... படத்துல கதைக்கு முக்கியத்துவம் இருக்கா?
எடுத்ததுமே இப்படி குண்டு போடறீங்களே பாஸ். வண்டி வண்டியா கதை இருக்கு. வெளி உலகத்துக்கு தெரியாம திருடர்களா இருக்கிற அஞ்சு பேர் ஒருமுறை கொள்ளையடிக்கிறப்ப போலீஸ் கிட்ட மாட்டிக்கிறாங்க. இதுக்கு அப்புறம் அவங்க சந்திக்கிற பிரச்னைகள்ல அமானுஷ்யமும் கலந்திருக்கு. புதுமுகம் ரிஷிகேஷ், ‘மாயா’ வில்லன் அம்ரீஷ், ‘மூணே மூணு வார்த்தை’ அர்ஜூன்னுடன் விவேக்கும் சஞ்சிதா ஷெட்டியும் திருடர்களா வர்றாங்க. நரேன் போலீஸ் அதிகாரி. நெகட்டிவ் ரோல். அவர்கிட்ட கிரிமினாலஜி படிக்கிற மியா ஜார்ஜ், இன்டன்ஷிப் ஸ்டூடண்ட். ஒரு பாட்டுக்கு விவேக் பிரமாதமா டான்ஸ் ஆடியிருக்கார்!

இதுல அனிருத் எப்படி..?
ரிஷிகேஷ் ஹீரோவா அறிமுகமாகிற படம். அதனால அவருக்காக அனிருத் கதைகளை கேட்க ஆரம்பிச்சார். என் ஸ்கிரிப்ட் பிடிச்சுப் போச்சு. ‘இதுவரை நான் ஹாரர் ட்ரை பண்ணினதில்லை’னு மியூசிக் பண்ண ஆர்வமானார். பின்னணி முடிச்சதும், ‘படம் மாஸ்... தெறிச்சிருக்கீங்க’னு பாராட்டினார். நியாயமா பார்த்தா அனிருத்தான் பேசப்படுவார். ஏன்னா, ஹாரர்ல இது அவருக்கு ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட். பின்னி பெடல் எடுத்திருக்கார்.

வில்லனா நடிக்க நரேன் எப்படி சம்மதிச்சார்?
‘ஒரு ஹீரோவா ஏதோவொரு இடத்தை இப்பதான் பிடிச்சிருக்கேன். மறுபடியும் நெகட்டிவ் ரோல் சொல்றீங்களே’னு முதல்ல தயங்கினார். அப்புறம் ஸ்கிரிப்ட் கேட்டுட்டு ‘நான் ரெடி’னு வந்து நின்னார். விவேக்கும் இவரும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்ஸ். சஞ்சிதா ஷெட்டி ஆக்‌ஷன்லயும் கலக்கியிருக்காங்க. கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாவின் சீடர் விக்னேஷ் வாசு இதுல ஒளிப்பதிவாளரா அறிமுகமாறாரு. இந்த விக்னேஷ், என் ஃப்ரெண்ட்ஸுல ஒருத்தன். ஒண்ணா விஸ்காம் படிச்சோம். ஒண்ணாவே படம் பண்ணுவோம்னு முடிவு செய்திருந்தோம். இப்ப அது நிறைவேறியிருக்கு.

‘ஹோலா அமிகோ...’ பாட்டு நல்லா இருக்கு. ஆனா, அனிருத் சர்ச்சைல சிக்கின ‘பீப்’ பாட்டுக்கு பதில் மாதிரி இருக்கே?
கரெக்ட்டா பாயிண் டை பிடிச்சுட்டீங்க. தனிப்பட்ட முறைல தன் வாழ்க்கைல நடந்த அந்த சர்ச்சை தொடர்பா தன் தரப்பை சொல்ல அனிருத் உள்ளூர நினைச்சுட்டிருந்த நேரத்துல படத்துலயும் அப்படியொரு சிச்சுவேஷன் இருந்ததை பார்த்ததும் சந்தோஷப்பட்டார். ‘ஹோலா’ ஸாங் அமைஞ்சது இப்படிதான். எதிர்பார்த்தா மாதிரியே அந்த சிங்கிள் ட்ராக் செம ஹிட். படம் ஹாரர்னாலும் பாடல்கள் ஒவ்வொன்னும் வெரைட்டியா இருக்கும்!  

Behind the scenes

* முழுக்க முழுக்க சென்னையை சுற்றியே படத்தை எடுத்திருக்கிறார்கள்.
* மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் முடிந்திருக்கிறது. 
* இயக்குநர் சாய் பரத், ‘Deep Gold’ என்கிற ஹாலிவுட் படத்தில் அசிஸ்டென்ட்டாக பணியாற்றியிருக்கிறார்.
* ‘கடவுளே விடை...’ மெலடிக்காக மெனக்கட்டிருக்கிறார் அனிருத்.
* அப்பா, அக்கா - தம்பி சென்டிமேன்ட் காட்சிகளை, காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை படம் பிடித்திருக்கிறார்கள். முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் மியா ஜார்ஜ்.
* சஞ்சிதா ஷெட்டி நடித்த ‘பொரி பத்தேரியம்...’ பாடலை துறைமுகம் பகுதியில் உள்ள பழைய குடோன் ஒன்றில் ஷூட் செய்துள்ளனர்.
* ‘பேயோ போபியா...’ பாடலுக்கு மூட்டு வலியையும் பொருட்படுத்தாமல் ஆடியிருக்கிறார் விவேக்.