Laides in Desert Safari!



ஆண்களின் சாகச ராஜ்ஜியத்தில் முதல் முறையாக பெண்களும் நுழைந்திருக்கிறார்கள்.

ஒட்டகங்களைக் கவனித்திருக்கிறீர்களா? நீண்ட கால்களும், விரிந்த குளம்புகளுமாக அவை காட்சியளிக்கும். இப்படி ஒட்டகங்கள் படைக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. கடற்கரையின் மணல் துகள் மென்மையாக இருக்கும். நடக்கும்போது உடலின் எடை காரணமாக நம் பாதங்கள் அழுந்தப் பதியும். ஆனால், அதை விட மென்மையான மணலால் உருவான பாலைவனத்தில் நடந்தால் கால்கள் நன்றாக அழுந்தப் பதிந்துவிடும். இதை கருத்தில் கொண்டுதான் இயற்கையே ஒட்டகங்களின் கால்களை அப்படி படைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட பாலைவனத்தில் பெரிய வண்டிகளும் செல்கின்றன; பறக்கின்றன. அதுவும் எப்படி? மணலை இறைத்தபடி. மணல் முகடுகளின் வடிவமைப்புக்கு ஏற்ப ஏறி இறங்கி. காரணம், ஒட்டகங்களின் கால்கள் ப்ளஸ் குளம்புகள் போலவேதான் இந்த வண்டிகளின் டயர்களும் இருக்கும். ‘டெஸர்ட் சஃபாரி’ என்பது இதுதான். சுற்றுலாப் பயணிகளைக் கவர உருவாக்கப்பட்ட இந்த ‘டெஸர்ட் சஃபாரி’, வெறும் பாலைவன சாகசப் பயணம் மட்டுமல்ல.

பயணத்துக்குப் பிறகு பாலைவனத்தின் நடுவில் அமைந்திருக்கும் ‘கேம்ப்’பில் இளைப்பாறுதல், ஒட்டகத்தில் சவாரி, மருதாணி, ஹுக்கா / ஷீஷா, ஆண்களின் கந்தூரா நடனம், கனமான வேலைப்பாடுகள் நிறைந்த பாவாடையை அணிந்து ஓர் ஆண் ஆடும் நடனம், ‘பெல்லி டான்ஸ்’, இரவு உணவு என சகலமும் இணைந்ததுதான் ‘டெஸர்ட் சஃபாரி’. இதற்கான சிறப்புப் பயிற்சியைத் தருவதற்காகவே அமீரகத்தில் ஆஃப் ரோட் (off-road) அமைப்புகள் நிறைய இருக்கின்றன.

‘ஆஃப் ரோட்’ என்றால் சாலையற்ற பகுதி என்பது பொதுவான பொருள். என்றாலும், அமீரகத்தில் அது பாலை வனத்தையும், உருவாக்கப்படாத கரடு முரடான பாதைகளையும் குறிக்கும். அமீரகத்தில் குளிர் காலம் தொடங்கிவிட்டால் பாலைவனம் புதிதாக உயிர்பெறும். காற்றலைகளால் நாள்தோறும் புதிதாக உருவாகும் மண்மேடுகளை வாகனங்களின் சக்கரங்கள் சவாலோடு முத்தமிடும். இதற்காகவே காத்திருக்கும் ஆஃப் ரோடு அமைப்புகளும் தங்கள் சாகசங்களுக்குத் தயாராகும்.

பாலைவனத்தில் வண்டி ஓட்டி தங்கள் சாகச உணர்வை தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் புதியவர்களை அரவணைத்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கிவிடும். ஆனால், எல்லோராலும் இந்த சாகசத்தை மேற்கொள்ள முடியாது. பணம் எக்குத்தப்பாக தேவைப்படும். குறிப்பாக 4X4 வாகனம் அவசியம். இதை ஃபோர் வீல் டிரைவ் என்பார்கள்.

அதென்ன 4X4 வண்டி? எல்லா வாகனங்களுக்கும் நான்கு சக்கரங்கள்தானே?
உண்மைதான். ஆனால், சாதாரண வண்டியில் நான்கு சக்கரங்களும் இயங்குவதில்லை. பின்னால் இருக்கும் இரண்டு சக்கரங்களோ அல்லது முன்னால் இருக்கும் இரு சக்கரங்களோ மட்டும் இயங்கும். இதன் சக்தியைக்கொண்டு மீதமுள்ள இரு சக்கரங்களும் நகரும். தார் சாலைகளுக்கு இவை ஓகே. ஆனால், பாலைவனத்தில் நான்கு சக்கரங்களும் கைகோர்த்து இயங்கினால்தான் அந்த வாகனம் சிக்கலில்லாமல் நகரும். இதை கருத்தில் கொண்டே நிசான் பேட்ரோல், ஜீப், டொயோட்டா எஃப்ஜே க்ரூஸர், நிசான் பாத்ஃபைன்டர், நிசான் எக்ஸ்டிரா, டொயோட்டா லேண்ட்க்ரூஸர் உள்ளிட்ட வாகனங்களை அமீரகத்தில் பயன்படுத்துகிறார்கள்.

குறைந்தது நான்காயிரம் சிசி திறன் கொண்ட இந்த வாகனங்கள் இல்லாமல் பாலைவனத்துக்குள் நுழைவது புதைகுழிக்குள் காலை விடுவதற்கு சமம். எனவேதான் இத்தகைய முயற்சியில் ஈடுபடும் முன் பாலைவனம் குறித்தும், மணல் மேடுகளின் தன்மை குறித்தும், வாகனங்களின் மைய ஈர்ப்பு விசை பற்றியும் தெளிவான அடிப்படை விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. மென்மையான மணலில் அதிக உந்து சக்தியோடு வாகனம் சீறும்போது - கபடியில் திறமையான வீரர் காலைக் கவ்விக்கொள்வது போல சக்கரத்தை மணல் உள்ளிழுத்துக் கொள்ளும்.

எனவே வாகனத்தின் பாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக சக்கரங்களின் பரப்பளவை விரிவாக்கும் முயற்சியாக டயரின் காற்றழுத்தத்தைக் குறைக்க வேண்டும். சராசரியாக ஜீப் சக்கரங்களின் காற்று 35 பிஎஸ்ஐ. அதனை 10 பிஎஸ்ஐ அளவுக்கு மணலின் தன்மையைக் கொண்டு குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மணல் மிகவும் மென்மையாக இருக்கும்போது 10 பிஎஸ்ஐ. அதுவே மணல் கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருக்கும்போது 12 பிஎஸ்ஐ (pound-force per square inch).

இவ்வளவு முன்னேற்பாடுகளை மேற்கொண்டாலும் தனியாக பாலைவனத்தில் செல்வது சரியல்ல. காரணம், மணலும் கடலும் ஒன்று. உள்ளே நுழைந்துவிட்டால் திசையை அறியவே முடியாது. திணற வைத்துவிடும். எனவேதான் இத்தகைய பயணங்களில் தொடர் ஊர்வலம் போல ஒன்றன் பின் ஒன்றாக தகுந்த இடைவெளி விட்டு வண்டிகள் செல்கின்றன. பாதுகாப்புக்கு இதுவே நல்லது. ஏதேனும் காரணங்களால் ஏதேனும் ஒரு வண்டி மணலுக்குள் சிக்கிக் கொண்டாலும் அதை கயிறு கட்டி இழுக்கத் தேவையான அளவு இடைவெளி கிடைக்கும்.

போலவே மணற்குன்றுகளில் ஏறி இறங்கும்போது முன்னால் செல்லும் வாகனம் எங்கிருக்கிறது என்பதை அடையாளம் காண முடியாது. இதற்காகவே வண்டிகளில் உயரமான கொடியை பொருத்துகிறார்கள். பின் தொடர்பவர்களுக்கு இதுவே வழிகாட்டி. இப்படி செல்லும் வாகன அணிக்கு தலைவராக இருந்து ஒருவர் வழிநடத்துவார். எல்லோராலும் இப்படி தலைவராக முடியாது. பாலைவனத்தில் பலகாலம் பல பயிற்சிகளை மேற்கொண்டு, ஆஃப் ரோடர், சீனியர் ஆஃப் ரோடர், எக்ஸ்பெர்ட், மார்ஷல் என்று படிப்படியாக உயர்ந்தவரே இப்பொறுப்பை ஏற்க முடியும்.

இப்படிப்பட்ட தலைவர் வழிகாட்டும் பாதையில்தான் பின்தொடர வேண்டும். அவர் எதிர்கொள்ளும் புதர், பாறை பற்றியெல்லாம் பின்னால் வருபவர்களுக்கு வாக்கிடாக்கி மூலம் தகவல் அளித்துக்கொண்டே இருப்பார். இரண்டாவதாகச் செல்பவர் அதனைப் புரிந்துகொண்டு தலைவருடைய அறிவுரைப்படி வழியை மாற்றி அமைத்துத் தொடர்வார். இது போன்ற பயணங்களின் போது இந்த ஒழுங்கும், தலைமைக்கான பொறுப்புணர்வும், அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்கும் பொறுமையும் அவசியம்.

பொதுவாக உயரமான மணல் மேட்டின் உச்சிக்கு நடந்தே செல்ல வேண்டுமென்றால் எப்படி ஏறுவோம்? வேகமாக ஓடிவந்து காலை அதிகம் பதிக்காமல், நிற்காமல் மடமடவென்று ஏறுவோம் அல்லவா? அப்படித்தான் வாகனத்திலும். உயரமான மணல் மேட்டில் ஏறும்போது மிகுந்த சக்தியுடன் மேட்டின் முகட்டுக்குச் செல்ல வேண்டும். மறுபுறம் அதலபாதாளமாகவும் இருக்கலாம். எனவே அதே வேகத்துடன் இறங்க முற்பட்டால் கட்டுப்பாடில்லாமல் பறந்து விழ நேரிடலாம்.

தவிர காரின் முன் பகுதி மணலில் அடிபட்டு உடையவும் கூடும். இப்படி நடக்கலாம் என்று எதிர்பார்த்தே சிறு மணற்குன்றுகளில் தொடக்கப் பயிற்சிகளை அளிக்கிறார்கள். மணலில் சக்கரங்கள் புதையும். ஸோ, வலமும் இடமுமாக சக்கரங்களைத் திருப்பிக் கொண்டே தேவையான உந்து சக்தியை வழங்க வேண்டும். இப்படி செய்தால்தான் முகட்டில் ஏற முடியும். ஒரே இடத்தில் ஒருசில விநாடிகள் வண்டி நின்றாலும் வாகனத்தின் எடை காரணமாக சக்கரங்கள் மணலில் மாட்டிக்கொள்ளும்.

இதுபோன்ற நேரங்களில் பதற்றப்படக் கூடாது. புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக வாகனத்தைச் செலுத்தும்போது சிக்கல் உருவானால் உடனே முயற்சியை கைவிட்டு மீண்டும் தொடர வேண்டும். இல்லாவிட்டால் வண்டியோடு சேர்ந்து பாலைவனத்தில் உருள வேண்டியதுதான். இவ்வளவு சிரமங்கள் இதில் இருப்பதால் பெரும்பாலும் ஆண்களே இத்தகைய சாகசப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இதை மாற்றி பெண்களாலும் ‘டெஸர்ட் சஃபாரி’ செய்ய முடியும் என்று நிரூபிக்க விரும்பினோம். ‘யூஏஇ ஆஃப் ரோடர்ஸ்’ அமைப்பின் மார்ஷல்களில் ஒருவரான மொகன்னாத், பயிற்சி அளித்து வழிகாட்ட ஒப்புக் கொண்டார். பிறகென்ன... அவரது தலைமையில் பெண்கள் மட்டுமே கொண்ட ஓர் அணி திரண்டது. காற்றழுத்தத்தை சரி செய்வதிலிருந்து அடிப்படை ஒழுங்குகளை முறைப்படுத்துவது வரை முழுக்க பெண்களே இந்த அணியில் இடம்பெற்றனர்.

சும்மா சொல்லக் கூடாது. சாகசப் பயிற்சி ஆண்களே பிரமிக்கும் வகையில் கச்சிதமாக, இயல்பாக, எந்த இடத்திலும் யாரும் சிக்கிக் கொள்ளாமல், பெரிய மேடுகளில் ஏறுவதும் இறங்குவதும் கடினம் என்றோ - பயம் என்றோ யாரும் குரல் எழுப்பாமல் சிறப்பாக வண்டியை இயக்கினர். இது முதல்கட்ட அடிப்படை பயிற்சிதான். இன்னும் சாகசத்தில் கடக்க வேண்டிய தூரம் அதிகம். என்றாலும் அமீரக ஆஃப் ரோட் வரலாற்றில் இது ஒரு புதிய தொடக்கம்.

இயற்கை தன் வளங்களை மனிதனுக்கு முன் பரப்பிவிட்டு, கூடவே சவாலையும் முன் வைத்துவிடுகிறது. மனிதனின் சாகச உணர்வுக்கும் இயற்கையின் அபாரமான சக்திக்கும் இடையிலான இந்தப் போட்டியில் வெல்ல வேண்டுமானால் மனிதன் விட்டுக் கொடுத்துத்தான் செல்ல வேண்டும் என்பதையே இந்த ‘டெஸர்ட் சஃபாரி’ உணர்த்துகிறது.                    

அமீரகத்திலிருந்து ஜெஸிலா பானு