பர்சனல் டேட்டாவை விற்கிறதா facebook?



-ச.அன்பரசு

காலையில் அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு தூங்கும் ஏ டூ இசட் யூத்கள், கண் விழித்ததும் போனை தேடி எடுத்து, குட்மார்னிங் சொல்வது ஃபேஸ்புக் உறவுகளுக்குத்தான். உடல் ஸ்டேட்டஸ்களுக்கு, உயிர் லைக்குகளுக்கு என வாழ்பவர்கள் அனைத்து போன்களிலும் ஃபேஸ்புக் வாலன்டியராக ஊடுருவி ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கங்களையும் கூவிக் கூவி விற்கும் சீக்ரெட்டை அறியமாட்டார்கள்.

சாதாரணமாக ஃபேஸ்புக்கில் ஒருவரை நீங்கள் ஃபாலோ செய்தாலே அவருக்கு கத்தரிக்காய் கொத்சு இஷ்டம், வெண்டைக்காய் உவ்வே என்பதிலிருந்து இங்கிலாந்தின் கேட் மிடில்டனின் ஃப்ளோரல் ஸ்கர்ட் பிடிக்கும் என்பது வரை தெரிந்துவிடும். உங்களுடைய ஆர்வம், வேலை, வருமானம் என எக்ஸ்ட்ரா தகவல்களை நண்பர்கள் அறியும்போது கொக்கி போட்டுத் தெரிந்துகொள்ளும் ஃபேஸ்புக் மட்டும் சும்மாயிருக்குமா?

ஒவ்வொருவரின் வருமானம், அவர்கள் செல்லும் ரெஸ்டாரண்ட்கள், பயன்படுத்தும் கடன் அட்டைகள் என பல்வேறு டேட்டாஸை நூதனமாக சேகரிப்பதுடன், ஒவ்வொரு சமூக நிகழ்வுகளிலும் பயனாளிகள் எந்தக் கருத்தை சொல்கிறார்கள்... எதன் பக்கம் நிற்கிறார்கள் என்பதை எல்லாம் அறிகிறது. தனது பிரிலியண்ட் அல்காரிதம் மூலம் 52 ஆயிரம் வகையான பிரிவுகளில் இவற்றை எல்லாம் வகைப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்ல ஆஃப் லைனில் இருக்கும்போதும் பயனாளிகளை இடைவிடாமல் கண்காணித்து அவர்களோடு தொடர்பு கொள்ள முயற்சிப்பவர்கள் யார்... எந்த தகவல்களை அல்லது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முற்படுகிறார்கள் என்பதை அறிகிறது அல்லது தெரிந்து கொள்ள முயற்சிக்கும் முகவர்களுக்கு வழி காட்டி உதவுகிறது. இதைத்தான், ‘பல்வேறு தகவல் முகவர் நிறுவனங்களிலிலிருந்து பெறும் டேட்டாஸை ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொள்கிறது.

அது நேர்மையான நிறுவனமாக இருந்தால் இது குறித்து பயனாளிகளிடம் ஏன் கூறவில்லை?’ என லாஜிக்காக கேட்கிறார் டிஜிட்டல் ஜனநாயக அமைப்பை சேர்ந்த ஜெஃப்ரி செஸ்டர். இதற்கு ஃபேஸ்புக் தரும் சிம்பிள் ஷார்ப் பதில்: தகவல்களை நாங்கள் சேகரிக்கவில்லையே! 2012ம் ஆண்டிலிருந்து தகவல் முகவர்களோடு ஜரூராக பணிபுரியத் தொடங்கிவிட்ட ஃபேஸ்புக், இது குறித்த சர்ச்சைகள் பற்றி கவலையேபடாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு தகவல் முகவர்களோடு கைகோர்த்துவருகிறது.
 
நமது பிரைவஸி தகவல்களை இடம்பெற வேண்டாம் எனில் ஹெல்ப் சென்டர் மூலம் அதை நீக்கிவிடலாம் என்று சான்ஸ் கொடுத்தாலும், ஃபேஸ்புக் தொடர்ந்து தனது தகவல் முகவர்களை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால் அந்த முயற்சியும் நாளடைவில் மிஷன் இம்பாசிபிள் ஆகிவிடவே வாய்ப்பு அதிகம். சிக்கல்களுக்கு பிள்ளையார் சுழி, ஃபேஸ்புக்கின் அல்காரிதம்தான். நமது சாய்ஸ்களின் அடிப்படையில் கணக்கு தொடங்கும்போதே, அசால்டாக நம்மை கணிக்கத் தொடங்கி விடுகிறது இந்த ஷார்ப் கோடிங் அல்காரிதம்.

நமது ஃபேஸ்புக் பக்கத்தில் ட்ரெண்டிங் விஷயங்களோடு ‘கருத்து சொல்லுங்க பாஸ்’ ரக செய்திகள், உங்களுக்கு பிடித்த உணவக விளம்பரங்கள் தப்பாமல் இடம்பிடிக்கும் ரகசியம் இதுதான். இந்த வகையில் விளம்பர நிறுவனங்களுக்கு 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் தொகுப்பை ஃபேஸ்புக் அளித்திருக்கிறது. இதில் அறுநூறுக்கும் மேற்பட்ட தகவல்கள் வெளியேயுள்ள தகவல் முகவர் நிறுவனங்களால் பெறப்பட்டவை.

ஸோ, ஃபேஸ்புக்கின் பிரைவசி அமைப்பில் செய்யும் மாற்றங்களைவிட, அதில் பகிரப்படும் நமது அந்தரங்க தகவல்களை முடிந்தளவு குறைத்துக்கொள்வது நமது பர்ஸுக்கும் அல்லது கிரெடிட் / டெபிட் கார்டுக்கும் மனநலனுக்கும் நல்லது. இணையத்தில் உலவும் ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் என்பது மிகப்பெரும் பொறுப்பை உள்ளடக்கியது என்பதை உணரவேண்டிய நேரமிது.                

ஹிஸ்டரி

பிப்ரவரி, 2004ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மார்க் ஸூக்கர்பெர்க்  தொடங்கிய சமூக இணையதளமான ஃபேஸ்புக் (ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த தகவல் தாளின் பெயர்தான் ஃபேஸ்புக்), தனது சிம்பிளிசிட்டியால் பலரையும் கவர, 24 மணிநேரத்தில் 1200 மாணவர்கள் இதில் இணைந்தனர். அதற்கு பிறகு ஒரே மாதத்தில் பல்கலையின் இளநிலை மாணவர்கள் 90% இதில் இணைந்துவிட்டனர்.

2005, ஆகஸ்ட்டில் இணைய முகவரியை 2 லட்சம் டாலர்களுக்கு ஃபேஸ்புக் வாங்கியது. அவ்வளவுதான். பல்கலைக்கழக கேம்பஸ்களில் நெருப்பாய் இது பரவியது. இன்று தினசரி 1.1 பில்லியன் மக்கள் ஃபேஸ்புக்கில் இணைவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. 2015ன் லாபத் தொகையான 7.1 பில்லியன் டாலர்களை ஜஸ்ட் லைக் தட் ஆக 2016ன் முதல் காலாண்டிலேயே கடந்துவிட்டது.

இப்போது ஸ்மார்ட் போன்களில் ஃபேஸ்புக் பயன்படுத்தப்படுவதன் வழியாக மட்டுமே இதற்கு 84% லாபம் கிடைக்கிறதாம்! இதுதவிர இன்ஸ்டாகிராம் (2012), வாட்ஸ் அப் (2014) ஆகியவையும் ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க்கின் பாக்கெட்டில்தான் இருக்கின்றன. ப்ரீபேஸிக், அக்விலா, ஆக்மென்டட் ரியாலிட்டி என ஃபேஸ்புக் பக்கா பிளான்களோடு இயங்கிவருகிறது.