Botaதுny!



-ஷாலினி நியூட்டன்

‘‘பென்சில்ல வட்டம், சதுரம், செவ்வகம், சின்ன புள்ளிகள்னு கிறுக்கினது எல்லாம் உங்க நினைவுல இருக்கா..?’’ புதிர் போடுவது போல் கேட்கிறார் அனாகா நாராயணன். புதிருக்கான விடை நமக்கு கிடைக்காமல் கூட போகலாம். ஆனால், அனாகாவுக்கு கிடைத்திருக்கிறது. அதனால்தான் ஃபேஷன் டிசைனரான இவர், இந்த பென்சில் நினைவுகளையே பிரிண்டிங்கில் கொண்டு வந்து ஆடை வடிவமைப்பில் அசத்தி வருகிறார்.

‘‘அமெரிக்காவுல எகனாமிக்ஸ்ல டிகிரி முடிச்சேன். அப்புறம் சென்னை வந்துட்டேன். டெக்ஸ்டைல் தொழிலை சொந்தமா ஆரம்பிச்சேன். நம்ம இந்தியப் பெண்களுக்கு பொதுவாவே ஒரு பிரச்னை இருக்கு. அதுதான் சைஸ் சார்ட். XS, M, L, XL, XXL... இதெல்லாமே யூனிவர்சல். அமெரிக்கா, இங்கிலாந்தை மனசுல வைச்சு குத்துமதிப்பா இப்படி அளவிட்டிருக்காங்க.

பட், நம்ம இந்தியப் பெண்களுக்கு இது செட் ஆகாது. உடல்வாகு அப்படி. வளைவுகள் நம்ம பெண்கள் அளவுக்கு மத்த நாட்டு பெண்கள்கிட்ட இல்ல. இதனாலயே ஆன்லைன்ல வாங்கறதும் ரெடிமேட் ஆக பர்ச்சேஸ் செய்யறதும் நமக்கு சூட் ஆகறதில்ல. இந்த உண்மைதான் முதல்ல நான் எதிர்கொண்ட சவால்...’’ புன்னகைக்கிறார் அனாகா. ஜஸ்ட் லைக் தட் ஆக இந்த சேலன்ஜில் இவர் ஜெயித்திருக்கிறார் என்பதுதான் ப்ளஸ்.

‘‘நிறைய டிசைன்ஸ், நிறைய டிரெஸ்னு பிடிச்ச ரூட்ல போயிட்டு இருந்தேன். இந்த நேரத்துலதான் பெங்களூர் சித்ரகலா ப்ரிஷத்துல கண்காட்சி ஒண்ணு நடந்தது. ‘வா அதுக்கு போகலாம்’னு என் ஃப்ரெண்ட் அழைச்சாங்க. ‘ஒய் நாட்’னு தோணிச்சு. சம்மதிச்சேன். போனோம். பார்த்தோம். அங்க என்னை ஒரு விஷயம் கவர்ந்தது. தாவர செல்களோட விளக்கப் படத்தை 3Dல காட்சிக்கு வைச்சிருந்தாங்க. சட்டுனு அந்த பேட்டன் என்னை கட்டிப் போட்டது. கிட்டத்தட்ட சின்ன வயசுல நாம பென்சில்ல கிறுக்கினதோட மேம்பட்ட வெர்ஷன். இதையே நாம ஏன் டிரெஸ் டிசைனா மாத்தக் கூடாது?

மனசுக்குள்ளயே இந்தக் கேள்வி சுத்தி சுத்தி வந்தது. உடனே அதுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பிச்சேன். செம்பருத்தியோட மகரந்த அமைப்பு, அத்தி இலைகள்... இது மாதிரி பாட்டனி தொடர்பான விஷயங்களைச் சேகரிச்சேன். மைக்ராஸ்கோப் வழியா இதனோட செல் அமைப்பை படமா எடுத்தேன். ஓவியமா வரைஞ்சேன். பிரிண்டுக்கு கொண்டு வந்தேன். முதல்ல ஏகத்துக்கு சொதப்பினேன். ஆனாலும் மனம் தளரலை. கடைசில மனசுல நினைச்சதை அப்படியே கொண்டு வந்ததும்தான் நிம்மதியாச்சு...’’ கண்களைச் சிமிட்டுகிறார் அனாகா.

‘‘ஒரு விஷயம். பூ, கோடுகள், கட்டிடங்கள் மாதிரியான டிசைன்ஸுக்கு ரெடிமேடா அச்சு இருக்கு. ஆனா, இது மாதிரி தாவர செல் தொடர்பானதுக்கு கிடையாது. ஸோ, நாமளேதான் கையால வரைஞ்சு பிரிண்ட் பண்ணணும். இந்த டிசைன்ஸ்ல உருவான உடைகளை தினமும் ஆபீசுக்கு போட்டுட்டு போகலாம். பார்ட்டிகளுக்கு அணியலாம். அதனாலயே காதி, காட்டன், கிரெப் சில்க், லினென் மாதிரியான சாதாரண துணிகள்லயே டிசைன் செய்யறேன். இது தாவர செல் (Plant cell). அதனால அடர் பச்சை, மெரூன், பிரவுன்... இப்படி செடிகளோட கலரையே பயன்படுத்தறேன்...’’ என்கிறார் அனாகா. ஆக, இருப்பதையே வித்தியாசமாக செய்தால் வெற்றி நிச்சயம். சரிதானே?

மாடல்: நிதா சாஹே

படங்கள்: பிரெதிகா மேனன்