சான்டா கிளாஸ் வருவார்... காத்திருக்கும் போலீஸ்!டிசம்பர் 21, காலை 10 மணி, அமெரிக்காவின் மெம்பிஸ் நகரத்தில் உள்ள வங்கிக்குள் சுமார் ஆறடி உயரமுள்ள ‘சான்டா கிளாஸ்’ கிறிஸ்துமஸ் பாடலை பாடிக்கொண்டே நுழைந்தார். அங்கிருந்த வங்கி ஊழியர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் சொல்லி, தன் பையிலிருந்து முட்டாயை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். பெற்றோருடன் வந்த குழந்தைகள் ஆசையோடு கைகுலுக்கி, அவருடன் நடனமாடினர். செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இப்படி அனைவரும் ஜாலியாக இருந்த நேரத்தில் சட்டென்று கேஷியரை நோக்கி நகர்ந்தார் சான்டா கிளாஸ். கைகுலுக்க வருகிறார் என்று நினைத்த கேஷியர், துப்பாக்கியைக் கண்டதும் மிரண்டார். கண்களால், சத்தம் செய்ய வேண்டாம் என்று ஜாடை காட்டிவிட்டு துண்டுச் சீட்டை நீட்டினார் சான்டா கிளாஸ். அதில், ‘பணத்தை இந்த பையில் போடு. சத்தம் போட்டால் சுட்டுவிடுவேன்’ என்று எழுதியிருந்தது. பயந்துபோன கேஷியர் அப்படியே செய்தார்.

விடைபெறும்போது கேஷியருக்கு ‘ஹேப்பி கிறிஸ்மஸ்’ சொல்லி முட்டாயைக் கொடுத்ததுதான் ஹைலைட்! பொதுவாக உலகெங்கும் குழந்தைகள் சான்டா கிளாஸின் வருகைக்காக கிறிஸ்துமஸ் நாட்களில் காத்திருப்பார்கள். சாக்லெட்டுக்காகவும் அவரது கோமாளித்தனத்தை ரசிக்கவும். இப்போது கிறிஸ்துமஸ் முடிந்துவிட்டது. என்றாலும் மெம்பிஸ் காவல்துறை ‘இந்த’ சான்டா கிளாஸின் வருகைக்காகக் காத்திருக்கிறது!    

-த.சக்திவேல்