க்ளோசப் பணம்பண வீக்கம்

கையோ, காலோ அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் வீக்கம். போலவே ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - ரூபாய் நோட்டுகள் - அதிகமானால் அதுவே பணவீக்கம். மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் ரூ.100 கோடி இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. அதுவே மக்களிடம் ரூ.200 கோடி இருந்தால், அதிக விலை கொடுத்து வாங்க போட்டியிடுவார்கள்.

உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் ரூ.100 கோடி மதிப்புள்ள அதே பொருட்களை ரூ.200 கோடி வரை விலை ஏற்றுவார்கள். விலைவாசி உயராது. உயர்த்தப்படும். அதுவே மக்களிடம் ரூ.100 கோடி பணம் இருந்து மார்க்கெட்டில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே இருந்தால்..? அப்போதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள்.

பணவீக்க  விகிதம்

பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை குறித்த ஏற்ற, இறக்க சதவிகிதமே பணவீக்க விகிதம். குறிப்பிட்ட ஆண்டின், குறிப்பிட்ட காலத்தின் பணவீக்க விகிதம் என்பது, அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலத்தில் இருந்த விலைவாசிகளுடனான ஒப்பீட்டு சதவிகிதம். பணவீக்க விகிதம் குறைகிறது என்றால் விலை குறைகிறது என்று பொருளல்ல. விலைகள் ஏறும் வேகம் குறைகிறது. அவ்வளவே. இந்த சூழலிலும் உயராத ‘பொருள் ஒன்று’ உண்டு. அதுதான் ‘ஊதியம்’ அல்லது ‘வருமானம்’.

எனவே, பொருட்களின் விலைக்கும், வாங்கும் சக்திக்கும் இடையிலான பள்ளம் அதிகமாகிறதே தவிர குறையவில்லை. உயர் வருமானம் கொண்டவர்களாலேயே தொடர்ந்து பொருட்களை வாங்க முடியும். அதைவிட வருமானம் குறைந்தவர்கள் சிறிது காலத்துக்கு தாக்குப் பிடிப்பார்கள். மற்றவர்கள் பல பொருட்களை வாங்குவதையே தவிர்த்துவிடுவார்கள்.

பண வாட்டம்

காய்ச்சலால் அவதிப்படுபவனுக்கு டாக்டர் மருந்து கொடுக்கிறார். காய்ச்சல் நின்று விடுகிறது. ஆனால், வயிற்றுவலி புதிதாகத் தோன்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது காய்ச்சலுக்கு தீர்வு வயிற்று வலி என்று எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படித்தான் இதுவும். ஏனெனில் பணவாட்டத்தின்போது எல்லா பொருட்களின் விலைகளும் குறைவதுபோல் வருமானமும் அதல பாதாளத்துக்கு வீழ்ந்துவிடும்.

இதையே இன்னொரு விதத்திலும் சொல்லலாம். வெள்ளப் பெருக்கால் ஏரிகளின் கரைகள் உடையும்போது, அடுத்த கட்டமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். அப்படித்தான் பணவீக்கம் உச்சத்தைத் தொடும்போது, வாங்கும் சக்தி குறைகிறது. எனவே, பொருட்களின் உற்பத்தியும் குறைகிறது. இதனால் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறும்.

அந்நிய செலாவணி விகிதம்

பல்வேறு நாடுகளின் நாணயங்களுக்கு இடையிலான சமன்பாடே அந்நிய செலாவணி விகிதம். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு பண்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு அமெரிக்காவில் எத்தனை டாலர்கள் தேவைப்படுகின்றன... அதே அளவைப் பெற இந்தியாவில் எத்தனை ரூபாய் தேவைப்படுகின்றன என்பதை வைத்துத்தானே டாலருக்கும், ரூபாய்க்கும் இடையிலான சமன்பாடு இருக்க முடியும்? அதாவது, நாணயங்களின் வாங்கும் சக்திதானே அவற்றின் மதிப்பை தீர்மானிக்க வேண்டும்?

இப்படிச் செய்வதுதான் நியாயம். இதன்படி பார்த்தால் ஒரு டாலருக்கான இந்திய மதிப்பு வெறும் ரூபாய் 25 என்று வந்து நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இது ஏதோ கற்பனை என்று நினைக்க வேண்டாம். உலக அளவிலான வறுமை அளவு குறித்து மதிப்பீடு செய்யும்போது உலக வங்கி 2005ம் ஆண்டு விலைகளின் அளவில் டாலருக்கு ரூ.19 என்றே கணக்கிட்டிருக்கிறது.

இப்படி வறுமையின் அளவைக் கணக்கிட மட்டும் நியாயமாக நடந்து கொள்கிறவர்கள், மற்ற விஷயங்களில் பண்டங்களுக்கோ அல்லது நாணயத்துக்கோ இருக்கும் கிராக்கியை வைத்தே சமன்பாட்டை தீர்க்கிறார்கள். தவிர அந்நிய செலாவணிச் சந்தையில் தலையிடுவதில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கி தீர்மானித்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் இஷ்டத்துக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயர்த்தியிருக்கின்றன.

டாலர் அரசியல்

பொருளாதார மந்தத்தில் அமெரிக்கா சிக்கியிருக்கும்போது அந்நாட்டின் நாணயமான டாலரின் மதிப்பு எப்படி உயர்கிறது? ‘டாலர் அரசிய’லின் ஆரம்பம் உலகப்போர் காலத்தில் தொடங்குகிறது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உற்பத்தித் திறன் அதிகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த வல்லுநர்களால் அந்நாடு, தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் முன்னேறிய நாடாக வளர்ந்திருந்தது.

முதல் உலகப்போரில் நேரடியாக பங்கு பெறாததால் ஐரோப்பிய நாடுகள் அடைந்த பெரும் இழப்பை அமெரிக்கா சந்திக்கவில்லை. மாறாக பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் கண்டது. இரண்டாம் உலகப்போரின்போது மேற்கத்திய நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்தது. தொழில்நுட்பங்களை வாரி வாரிக் கொடுத்தது. இதற்கு கைமாறாக பெருமளவு தங்கத்தை தன் இருப்புக்கு கொண்டு வந்தது.

விளைவு, போரின் முடிவில் உலக தங்கத்தின் கையிருப்பில் 80%மும், உற்பத்தித் துறையில் 40%மும் அமெரிக்காவின் வசம் வந்தது. போதாதா? டாலரின் மதிப்பும் அமெரிக்கா வைத்திருந்த தங்க இருப்புக்கு மாறாக மாறியது.

மட்டுமல்ல, வெளிநாட்டு வங்கிகள் வாங்கும் டாலர் பணத்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் தங்கமாக திருப்பிக் கொடுக்கும் நிலைக்கு விஸ்வரூபம் எடுத்தது. இந்த மாற்றத்துக்குப் பிறகு உலக நாடுகள் டாலர் மற்றும் தங்கத்தை கையிருப்பாகக் கொண்டு தங்களது நாணயத்தை வெளியிடத் தொடங்கின. பல நாட்டு வங்கிகள் டாலரை தங்கள் முதலீட்டுக் கையிருப்பாக வைக்க ஆரம்பித்தன. 1960 வரை இதுதான் நடைமுறை.

ஆனால், வியட்நாம் போர் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1960களில் நடந்த இந்த யுத்தத்துக்காக அமெரிக்கா அளவுக்கு மீறி செலவு செய்ய நேரிட்டது. அதுவரை தங்க கையிருப்புக்கு ஏற்றவாறு டாலரை வெளியிட்டு வந்த அந்நாடு, இதன் பின்னர் அதிக அளவு டாலரை வெளியிடத் தொடங்கியது. அத்துடன் வெளிநாட்டு வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரைக் கொடுத்து அமெரிக்காவிடம் அதற்கு ஈடான தங்கத்தைக் கேட்டபோது அதனால் தரமுடியாத நிலைக்குத் தாழ்ந்தது. 

இதனைத் தொடர்ந்து 1971ல் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் தலைமையிலான நிர்வாகம் உலக முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் டாலருக்கும், தங்கத்துக்கும் இடையிலான தொடர்பை அறுத்து விட்டது. டாலரின் மதிப்பு இனி அமெரிக்க நிர்வாகத்திடம் உலகம் வைக்கும் நம்பிக்கையில்தான் என்றானது.

இதனையடுத்து நடந்த மாற்றங்கள்தான் உலகின் இன்றைய நிலைக்குக் காரணம். 1970களின் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவுடன் போட்ட ஒப்பந்தம், வீழ்ச்சியில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்றியது. தனது எண்ணெய் விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்ய சவுதி அரேபியா சம்மதித்ததுதான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

உலக பொருளாதார வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகே உலக பெட்ரோல் வணிகம், டாலரில் விற்பனையாகத் தொடங்கியது. இதனால் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் டாலர் கையிருப்பு அதிகரித்தன. இதை வைத்து என்ன செய்வது? அமெரிக்காவே இதற்கு தீர்வும் சொன்னது. பத்திரங்களை வெளியிடுகிறோம். அதை டாலரில் வாங்குங்கள். இது முதலீடாகக் கருதப்படும் என தூண்டில் போட்டு மீன்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

எனில், பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகள்? வேறென்ன... எரிபொருட்களை டாலரில்தான் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். மனதில் கொள்ள வேண்டிய விஷயம், டாலரை உற்பத்தி செய்யும் ஒரே நாடு அமெரிக்கா என்பது! இதனால் அமெரிக்க மக்களுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு மற்ற நாடுகள் ஆளாயின.

இதை தனக்கு சாதகமாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருட்களையே வாங்குவது என்ற முடிவுக்கு வந்தது. இதனால் பிற நாடுகளை விட, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை குறைவு என்பதைக் காட்ட மற்ற நாடுகள் முயற்சித்தன. இதற்காக தங்கள் நாட்டில் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியாது. அது எக்குத்தப்பாகி விடும். எனவே, தாய்நாட்டின் நாணய மதிப்பை ஒவ்வொரு நாடும் குறைக்க ஆரம்பித்தன.

அதாவது, தனது மக்களின் உழைப்பு மற்றும் கனிம வளங்களை மலிவாக மாற்றி அதை அமெரிக்க மார்க்கெட்டில் இன்னும் மலிவான விலைக்கு ஏற்றுமதி செய்தன. சுருக்கமாகச் சொல்வதென்றால், உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் சுயதேவை என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முன்னேற்றத் திட்டங்களை வகுக்காமல், டாலர் கிடைக்க எந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கியது. இந்தியாவின் இப்போதைய சூழலுக்கும் இதுதான் காரணம்.

ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய். இதை டாலரில்தான் வாங்க வேண்டும். இது தவிர, தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு நம் நாட்டுக்கு வந்த மூலதனங்கள் அனைத்தும் டாலர் அடிப்படையிலானதே. இன்று அமெரிக்காவிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கி வலுவிழந்திருக்கின்றன. எனவே, தங்கள் பேலன்ஸ் ஷீட்டை ஓரளவு கவர்ச்சிகரமாகக் காண்பிக்க, இந்தியாவில் முதலீடு செய்த மூலதனங்களை திரும்பப் பெற்று வருகின்றன. இதன் காரணமாகவும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.                         

-கே.என். சிவராமன்