ஏக்கம்



‘‘பாட்டி... பாட்டி... நாங்க வந்துட்டோம்!’’ என்றபடி வீட்டுக்குள் வந்து நின்ற இரண்டு குழந்தைகளையும் அணைத்து உச்சி முகர்ந்தாள் பங்கஜம். ‘‘பாட்டி... நீங்க ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க. அடையாளமே தெரியலை!’’ ‘‘அப்படியா கண்ணுங்களா? உங்களைப் பாத்து மூணு வருஷமாச்சே... அதான்! சரி... அப்பாவும் அம்மாவும் எங்கே?’’ ‘‘எங்களை முதலில் போகச் சொல்லிட்டாங்க. நீங்க கோபப்படாம இருக்கறதுக்காக தெருமுனைக் கோயிலுக்குப் போய் சாமிகிட்டே வேண்டிக்கிட்டு இருக்காங்க!’’ இதைக் கேட்ட பங்கஜத்தின் முகம் பரவசத்தால் மலர்ந்தது.

‘‘சரி... நீங்க ரெண்டு பேரும் சோபா  மேலே உட்காருங்க. திருப்பதி லட்டு வச்சிருக்கேன். கொண்டு வந்து தர்றேன்’’ என்றபடி பூஜையறைக்குள் போனாள். பங்கஜம் லட்டுடன் திரும்பி வந்து பார்த்தபோது அங்கே குழந்தைகளைக் காணோம். உள்ளே வந்த கணவர் சிவராமனிடம் விசாரித்தாள். ‘‘அவங்க பக்கத்து வீட்டு பட்டு பாட்டியோட பேரப்பிள்ளைங்க. கிராமத்து வீடு எல்லாம் ஒரே மாதிரியா இருக்கறதாலே தெரியாம நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டாங்க.

இப்போதான் அவுங்க அப்பா அம்மா வந்து அழைச்சுகிட்டுப் போனாங்க...’’ ‘‘அப்போ வந்தது நம்ப பேரன், பேத்தி இல்லையா?’’ பங்கஜம் ஏக்கத்துடன் கேட்டாள். ‘‘இந்த வருஷம் கோடை விடுமுறைக்கு நம்ம பேரன், பேத்தி கண்டிப்பா வருவாங்க... பாரேன்’’ பங்கஜத்தின் கன்னத்தை ஆறுதலாக வருடினார் சிவராமன், கலங்கிய கண்களுடன்.

- ராஜன்புத்திரன்