விழித்திருக்க வைக்கும் இரவு வாழ்க்கை!



மீரா கதிரவன்

‘‘இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருத்தனை ஆழமா உத்துப் பார்த்தீங்கன்னா ஒரு கதை... அவனோட வீடு வரைக்கும் தேடிப் போனா ஒரு களம்... வாழ்க்கையை தீர்க்கமாகப் பார்த்தால் அது கணங்களால் ஆனதுன்னு தெரியும். வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படுகிற திருப்பங்கள் எல்லாமே அப்படித்தான். ஊர்ல உட்கார்ந்திருந்தவன், ஒரு கணத்தில் நினைத்து சென்னைக்கு புறப்பட்டு வந்தேன்.

வந்தது சினிமா டைரக்டராக... அஞ்சு வருஷம் இந்த சென்னை எனக்குத் தண்ணி காட்டுச்சு. வீடுகள்ல செக்யூரிட்டியாக இருந்திருக்கிறேன. சென்னையில நான் சர்வராக வேலை பார்க்காத பெரிய ஹோட்டல்களே கிடையாது. அந்த மாதிரி நேரங்களில் சென்னையின் இரவு வாழ்க்கை எனக்குத் தெரியும். புரியும். அதன் விநோதங்களை அறிஞ்சிருக்கேன். ஒரு இரவில் நடக்கிற நான்கு சம்பவங்களை அல்லது நான்கு கதைகளை இணைத்து ஒரு படமாக செய்திருக்கிறேன். ‘விழித்திரு’ அப்படியான படம். சினிமாவாக இருந்தும், இதை சினிமாவாகவே ஆக்கிவிடாமல்  அசல் வாழ்க்கையாக காட்டியிருக்கேன்...’’ - தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் மீரா கதிரவன். ‘அவள் பெயர் தமிழரசி’யில் நம்பிக்கையாகக் காணப்பட்டவர்.

‘‘உங்களின் முதல் படம் ஆர்வத்தை தோற்றுவித்தது...’’
‘‘எனது முதல் படம் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாக வந்திருக்க வேண்டியது. அதற்காக அதிகபட்சமாக நெருங்கிவிட்டேன். எனக்காக காய்களை நகர்த்திய மணிரத்னத்தின் சகோதரர் ஸ்ரீனிவாசன் இறந்துபோக அது நடக்கல. அப்புறம்தான் ‘அவள் பெயர் தமிழரசி’ வந்தது. நான் நினைத்திருந்த இளையராஜா இல்லை. நான் நினைத்து வைத்திருந்த படத்தைக் கொண்டுவரமுடியாத அளவுக்கு தடைகள் இருந்தன. ஒரு பாய்ச்சல் நடந்திருக்க வேண்டியது. ஆனால் நடக்கவில்லை.

கதை நாயகன் ஜெய் ‘நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ‘வாமனன்’ தவிர பிற படங்கள் வெற்றி பெறாது’ என பேட்டி கொடுத்திருந்தார். படமும் காலதாமதம் ஆனது. ஒரு குழந்தையை வயிற்றில் பத்து மாதம்தான் வைத்திருக்க முடியும். அதற்குப் பின்பும் பிரசவம் ஆகவில்லை என்றால் அதை சுமையாகக் கருதி வெளியே எடுத்துவிட வேண்டியதுதான். அப்படித்தான் வெளியே எடுத்துப் போட்டுவிட்டேன். அப்படியிருந்தும் அந்தப் படத்தின் உண்மைத்தன்மை கருதி அதைப் பாராட்டினார்கள். முன்னேற்றத்திற்கான அறிகுறி என்றார்கள். அவர்கள் என்னை தளர விடாமல் பார்த்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு நிதானித்து வருவதுதான் இந்த ‘விழித்திரு’ ’’

‘‘எப்படி இருக்கும் ‘விழித்திரு’?’’
‘‘இங்கே நிறைய பேருக்கு சென்னையின் முகம் தெரியாது. பகலைவிட இரவு வாழ்க்கை சூட்சுமம் நிறைந்தது. புதிதானது. பெரும்பாலான மக்கள் இந்த இரவு வாழ்க்கைக்குள் வரமாட்டார்கள். மும்பை மாதிரி ஊர்கள்ல விழித்திருக்கும் நகரம் ‘பளிச்’னு தெரியும். நான்கு கதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒன்றோடு ஒன்று நம்பகமாகச் சேர்த்்துச் செய்திருக்கிறேன். இரவு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் கதை, அடுத்த நாள் காலை 6 மணிக்கு முடியும். சீட்டின் நுனியில் உட்கார்ந்துகொண்டு நகம் கடிக்கிற உணர்ச்சிக்கு கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன்.

டி.ஆர்., விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு, தன்ஷிகா, தம்பி ராமையா, குழந்தை சாரா, எரிகா ெபர்னாண்டஸ், அபிநயா, நாகேந்திரபாபுன்னு எக்கச்சக்க ஆர்டிஸ்ட்ஸ். அவர்களுக்கான களத்தில் நின்னு விளையாடிப் பார்க்கிற தீவிரத்தில் இருந்தாங்க. ராத்திரி பத்து மணிக்கு மேலே கேமராவைக் கொண்டு சென்னை வீதிகளில் வைச்சா அருமையாக இருக்கும். ஆனால் இரண்டு மணி ஆனால் போலீஸ்காரங்க தொந்தரவு தாங்க முடியாது. ஹாரன் வண்டிகளில் வந்து சூழ்ந்துக்குவாங்க. முறையான பர்மிஷன் வாங்கியிருப்போம். விதிமுறைகளை மீறமாட்டோம். அப்படியும் அவங்க இடைஞ்சல் இருக்கும். பஞ்சாயத்து பேசியே டயர்ட் ஆகியிருக்கேன்.

அப்புறம் குழந்தை சாரா.. பத்து மணிக்கும் மேலே குழந்தைக்கு தூக்கம் சொக்கும். அதுக்குள்ளே ஷூட்டிங் நடந்தாகணும். அதனால் டைம் ஆகிப் போச்சு. இப்பப் பார்த்தால் காத்திருந்தது வீண் போகலை. த்ரில்லர்தான். ஆனால் வாழ்க்கை இருக்கு. இதில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு நடித்திருந்தும் யாருமே ஹீரோக்கள் இல்லை. கதையே பெரிய அளவில் எழுந்து நிற்கிறது. எல்லோருக்குமே ராத்திரி ஷூட்டிங்தான். ஆனாலும் யாரும் எனக்குத் தொந்தரவு கொடுத்ததாக நினைவே இல்லை.

இந்தப் படத்தில் இவ்வளவு முகங்களைப் பார்க்கிறதே உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். விஜய் மில்டனின் கேமரா பார்வையில் பார்த்த சென்னை நிச்சயம் வேறுமாதிரி இருக்கும். அதிகார வர்க்கம், ஒரு எளிய மனிதனை விழுங்கப் பார்க்கிற அரசியலும் இதில் இருக்கிறது. அதனாலேயே ‘விழித்திரு’. சில இடங்களில் இனம் தெரியாத துயர் சூழும், பல இடங்களில் புன்னகைக்க வைக்கும், இன்னும் சில இடங்களில் வாழ்க்கையின் ஒட்டுமொத்தத் துடிப்பும் காணக் கிடைக்கும்!’’

‘‘ஏராளமான இசையமைப்பாளர்களைப் பாட வச்சு புரட்சி செய்திருக்கீங்க!’’
‘‘படத்தைப் பார்த்து ஆசைப்பட்டு டி.ராஜேந்தர் சார் ஒரு பாட்டும் பாடி நடித்தும் கொடுத்தார். மியூசிக் டைரக்டர் சத்யன் மகாலிங்கம் அன்புக்காகவும், நட்புக்காக விஜய் ஆண்டனி, சத்யா, தமன், சந்தோஷ் நாராயணன், அல்போன்ஸ் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள். விதவிதமான பாடல்களும், குரல்களுமே இதில் தனி ஈர்ப்பு. உங்கள் மனதைத் தொடுவதற்கு நிறைய இடங்கள் வைத்திருக்கிறேன்.’’

- நா.கதிர்வேலன்