மெட்ரோ ட்ரெயினில் கீர்த்தி சுரேஷ்!



‘கனவுகளால் கலைந்தோமே...
கவலைகளால் தொலைந்தோமே...
வாழ்வில் நாள்தோறும் நேரும் சேதாரம்,
யாராலே அறியோம்!’

- யுகபாரதியின் தத்துவ வரிகளுக்கு உயிரூட்டிக்கொண்டிருந்தார் பாடகர் மதுபாலகிருஷ்ணன். ‘‘பைபிள்ல ஒரு வசனம் வரும்... ‘எந்தப் பாவமும் செய்யாமல் நன்மை மட்டுமே செய்கிற நீதிமான் பூமியில் இல்லை’னு! இதை மையமா வச்சு ரெடி பண்ணின கதைதான் ‘பாம்புசட்டை’. என் குருநாதர் ஷங்கர் சார்கிட்ட இருந்து வெளிவந்த வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் ரெண்டு பேரும் ‘வெயில்’, ‘கல்லூரி’னு எளிய மனிதர்களின் கதையைக் கையில் எடுத்தது போல் நானும் இதுல அழுத்தமான ஒரு கதையைத் தொட்டிருக்கேன்...’’ - நிதானமாகப் பேசுகிறார் ஆடம் தாசன். ‘சதுரங்க வேட்டை’யை அடுத்து மனோபாலா தயாரிக்கும் ‘பாம்புசட்டை’ படத்தின் அறிமுக இயக்குநர்.

‘‘இந்தப் படத்தோட கதையை நிறைய தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லியிருப்பேன். பலரும் ரிஜெக்ட் பண்ணின கதை இது. ஆனா, எனக்கு இந்தக் கதை மேல அதீத நம்பிக்கை இருந்துச்சு. மனோபாலா சார் தான் தயாரிக்கப்போகும் படத்துக்கான கதை கேட்கிறார்னு தெரிஞ்சதும், உடனே அவரைப் போய் பார்த்தேன். ‘முதல் பாதி வரை கேட்குறேன். கதை பிடிச்சிருந்தா செகண்ட் ஹாஃபையும் கேட்பேன்பா’னு ஒரு கண்டிஷனோடு கதை கேட்க உட்கார்ந்தார்.

நான் கதை சொல்ல ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்தில், ‘டீ கொண்டு வா’னு அவரோட அசிஸ்டென்ட்கிட்ட சொன்னார். முதல் பாதி கதையைச் சொல்லி முடிக்கும்போதே, மூணு டீ வந்தாச்சு... ‘சார் முழுக்கதையையும் கேட்பார்’னு தோணுச்சு. கேட்டதும், ‘உடனே தொடங்கிடலாம்’னு சொல்லி ஆரம்பிச்சார்.’’

‘‘டைட்டில் ‘பாம்புசட்டை’... வித்தியாசமா இருக்கே?’’
‘‘நன்றி. சட்டை வளர வளர பாம்பும் வளரும். ஒருத்தன் நல்லவனா இருக்கறதுக்கு அவனோட அசைக்க முடியாத வைராக்கியம்தான் காரணமா இருக்க முடியும். ஆனா, எப்படிப்பட்ட வைராக்கியத்தையும்  எளிதா உடைச்சிடும் சக்தி பணத்துக்கு மட்டுமே இருக்கு. பணத்தாசை பிடிச்சா என்ன நேரும்ங்கறதை கமர்ஷியலும் எமோஷனலுமா கலந்து சொல்லியிருக்கேன். இந்தப் படம் தொடங்குறதுக்கு முன்னாடி பாபி சிம்ஹா சின்னச் சின்ன ரோல்கள்தான் பண்ணிட்டிருந்தார். ஹீரோவா அவர் கமிட் ஆன முதல் படம் இதுதான். பாபி, கீர்த்தி சுரேஷ் தவிர சார்லி, குருசோமசுந்தரம், ‘தாமிரபரணி’ பானு என நிறைய நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க.’’

‘‘பாபி சிம்ஹாவை எப்படி செலக்ட் பண்ணீங்க?’’
‘‘அவரோட ‘ஜிகர்தண்டா’ பார்த்துதான். பாபி என் கதைக்குப் பொருத்தமான ஹீரோவா தெரிஞ்சார். பாபி சிம்ஹாவுக்கு இந்தப் படம் மறக்க முடியாத படம். இதோட ஷூட்டிங் அப்போதான் அவருக்கு நேஷனல் அவார்டு அறிவிச்சாங்க. அப்புறம் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. இப்படி நிறைய பாஸிட்டிவ் விஷயங்கள் நடந்திருக்கு. அந்த உற்சாகத்துல நல்லாவே நடிச்சு கொடுத்திருக்கார். அதே மாதிரி இந்தப் படத்தோட ஷூட்டிங் அப்போதான், பானுவுக்கும் திருமணம் ஆச்சு. சார்லி சார் பிரமாதமான ரோல் பண்ணியிருக்கார்.’’

‘‘கீர்த்தி சுரேஷை மெட்ரோ ட்ரெயின் ட்ராவல், மெரினா வாக்கிங்னு ஷூட் பண்ணியிருக்கீங்க... எப்படி சாத்தியமாச்சு?’’
‘‘இந்தப் படம் தொடங்கினப்போ கீர்த்தி டாப் ஹீரோயின் ஆகலை. அவங்களுக்கு படத்தோட ஹீரோ பாபி சிம்ஹாவை யாருன்னே தெரியல. யூனிட்ல நாங்க எல்லாருமே புதுமுகமா இருந்ததால, கீர்த்தி இதுல நடிக்கறதுக்கு கொஞ்சம் தயங்கினாங்க. அப்போ தெலுங்கில் நடிச்சிட்டிருந்தாங்க. ஐதராபாத் போய் அவங்ககிட்ட கதையைச் சொன்னேன்.

ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. ‘கண்டிப்பா பண்றேன்’னு வந்தாங்க. இடையில அவங்க இவ்ளோ ரீச் ஆனது ஒரு வகையில எங்களுக்கும் ப்ளஸ். பாபியும், கீர்த்தியும் அப்போ கிட்டத்தட்ட புதுமுகம் மாதிரி என்பதால சென்னையின் புறநகர் ஏரியாக்கள், மெட்ரோ ட்ரெயின், மாநகராட்சி பஸ்ல  பயணம், மெரினா பீச்னு நிறைய இடங்கள்ல கேண்டிட் கேமரா வச்சு எங்களால ஷூட் பண்ண முடிஞ்சது.

கார்ல ட்ராவல் பண்ற பாஸிங் சீன் ஷூட் பண்ணினோம். அதுல அவங்க ஒரு காஸ்ட்யூம்ல இருப்பாங்க. அடுத்த சீனும் உடனே எடுக்க வேண்டியிருக்கும். நாங்க ஷூட் பண்ற இடத்துல இருந்து எங்காவது கேரவனை நிறுத்தி வச்சிருப்போம். அங்கே போய் காஸ்ட்யூம் மாத்திட்டு வந்தால், நேரம் செலவாகும்னு ஏற்கனவே போட்டிருக்கற காஸ்ட்யூம் மேல இன்னொரு காஸ்ட்யூமையும் அணிந்து நடிச்சாங்க. பொதுவா ஹீரோயின்கள் இப்படிச் செய்ய மாட்டாங்க.  கீர்த்தி ரொம்ப டெடிகேடட்!’’

‘‘டெக்னீஷியன்களும் புதுமுகங்களா?’’
‘‘இல்லைங்க. கேமராமேன், எடிட்டர் ரெண்டு பேரும் ‘சதுரங்க வேட்டை’யில வொர்க் பண்ணினவங்க. இந்தப் படத்தை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க கேமராமேன் வெங்கடேஷ்தான் காரணம். அஜீஸ் இசையமைப்பாளரா அறிமுகமாகிறார். பாடல்களை வைரமுத்து, யுகபாரதி, மதன்கார்க்கி எழுதியிருக்காங்க.’’

‘‘ஷங்கர்கிட்ட வேலை செய்யுற வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’
‘‘என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் உள்ள வீரவநல்லூர். பொழப்பு தேடி  சென்னைக்கு வந்தேன். வந்த இடத்துல சினிமா பிடிச்சுப் போச்சு. பாலுமகேந்திரா சார், சேரன் சார்னு பலர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர முயற்சி பண்ணினேன். அப்படித்தான் ஷங்கர் சார்கிட்டேயும் போனேன். எல்லா அசிஸ்டென்ட்களையும் அவர் டெஸ்ட் வச்சுதான் எடுப்பார். செலக்ட் ஆனேன். ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’னு மூணு படங்கள் அவரோட வொர்க் பண்ணியிருக்கேன்.’’

‘‘உங்ககிட்டேயும் பிரமாண்டம் எதிர்பார்க்கலாமா?’’
‘‘ஷங்கர் சார் ஒன்லைன் சொன்னாலே அதுவே ரொம்ப பிரமாண்டமா இருக்கும். ஆனா நான் எளிய மனிதர்களின் கதையோடு வர்றேன். இந்தக் கதைக்கு தேவையான மேக்கிங் இருக்கும். ஷங்கர் சார் பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு. அவர்கிட்ட சினிமா, டெக்னிக்கல்னு கத்துக்கிட்டதையும் தாண்டி அவரோட நல்ல பண்புகளை ஃபாலோ பண்ண முயற்சிக்கறேன்.

அசோசியேட்டா இருந்தாலும், அசிஸ்டென்ட்டா இருந்தாலும் எல்லாரையுமே சமமாதான் பார்ப்பார். ஸ்டோரி டிஸ்கஷன்ல நம்மளோட கருத்தையும் கேட்பார். அவருக்குப் பிடிச்ச விஷயங்கள பண்ணினா, ஹேப்பியாகி உடனே பாராட்டுவார். அப்படி ஒரு நல்ல மனிதர் அவர். ‘படம் ரெடியானதும் கூப்பிடு, கண்டிப்பா பார்க்கறேன்’னு சந்தோஷமா சொன்னார். அவர் சந்தோஷப்படுற மாதிரி ஒரு நல்ல படம் எடுத்திருக்கேன்!’’

- மை.பாரதிராஜா