ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

-சுபா

‘‘இன்னுமா நீ சாகவில்லை?’’ என்று கிரிதர் கேட்டதும், கல்யாணி வாய்விட்டுச் சிரித்தாள். “செத்துப் போனா மட்டும் உங்களை மறந்துர முடியுமா..?” கிரிதர் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தார். “உங்க வீட்ல சந்தேகப்படலையே..?” “நாலு சேனலை நடத்திட்டு இருக்கற ஒரு டி.வி கம்பெனியோட முதலாளிக்கு என் மேல ஆர்வம். அதனால, அவரோட கெஸ்ட் ஹவுஸுக்கு என்னைத் தனியாக் கூப்பிட்டிருக்காரு... நாப்பது வயசானாலும் பார்க்கறதுக்கு அசத்தலா இருப்பாருன்னு சொல்லிட்டா வர முடியும்..? இப்பவும் வீட்ல வழக்கமான அதே பொய்தான் சொல்லிட்டு வந்தேன்.

‘ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு... புது ப்ரோகிராம் பத்தி எங்க ப்ரோகிராம் எக்ஸிகியூடிவ்வோட பேசிட்டு வர்றதுக்கு லேட்டாகும்’னு சொன்னேன். எங்கப்பாவும் அம்மாவும் பாவம்... என்னை முழுசா நம்பறவங்க...” சொல்லிவிட்டு கல்யாணி கை நீட்டி அவர் தொடையில் உரிமையுடன் கையை இருத்திக்கொண்டாள். “யாருக்கும் தெரியாம இப்படித் திருட்டுத்தனமா போறதுல ஒரு த்ரில் இருக்கு இல்ல..?” என்று படபடவென்று கண் சிமிட்டினாள்.

கிரிதர் தனக்குள் ரத்தம் ஜிவ்வென்று வேகம் எடுப்பதை உணர்ந்தார். “உனக்கு ரொம்ப நெருக்கமா இருக்கானே, விஜய்... அவன்கிட்ட ஷேர் பண்ணியிருக்கியா..?” “மூச்..! விஜய்க்கு நம்ம விவகாரம் சுத்தமா தெரியாது. அவன் ரொம்ப நல்ல பையன். தெரிஞ்சா, ‘இதெல்லாம் வேண்டாம்’னு எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிருவான்... எனக்கே சில சமயம் இது ரிஸ்க்குனு தோணும். ஆனா இன்னொரு பக்கம், ‘இதுல ஒரு பெரிய த்ரில் இருக்கு’னு உங்க முகம் என்னை விரட்டிட்டே இருக்கும்! நான் சின்னப் பொண்ணுதானே..?”

கல்யாணி கொஞ்சலான குரலில் கேட்டாள். “நீயா சின்னப் பொண்ணு..? அடேங்கப்பா, உன்கிட்ட எத்தனை விஷயத்தை நான் கத்துக்கிட்டிருக்கேன்..!” என்று கிரிதர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, கல்யாணி வெட்கத்துடன் அவர் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். கார் லாகவமாகத் திரும்பி, மலைச் சாலையில் நுழைந்தது. திடீரென்று கல்யாணி வெடுக்கென்று திரும்பினாள்.

“ஆனா நீங்க எனக்கு துரோகம் பண்ணிட்டீங்களே கிரிதர்... ‘கர்ப்பம் கன்ஃபர்ம் ஆச்சுன்னா, கலைக்க மாட்டேன். அது என் குறிக்கோளுக்கு எதிரானது. ஊரறிய நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கங்க... சொத்து வேண்டாம்... சுகம் வேண்டாம்... உங்க கம்பெனில எனக்கு எந்தப் பங்கும் வேண்டாம்... ஆனா, என் குழந்தைக்கு அப்பன் நீங்கதான்னு தைரியமா சொல்லணும்’னு சொன்னேனே... அதுக்காக கோயில்ல கொள்ளையடிச்சிட்டுப் போனவங்ககிட்டயே ‘கல்யாணியைக் கண்டுபிடிச்சு தீர்த்துருங்க’னு சொல்லிட்டீங்களே...” கிரிதர் திடுக்கிட்டார்.

“ஏய், நான் உன்னை கொலை செய்யச் சொன்ன விஷயம் உனக்கு எப்படித் தெரியும்..?” “உயிரோட இருந்தவரைக்கும் உள்ள ஒண்ணு வெச்சு வெளிய ஒண்ணு பேசி என்னை ஏமாத்த முடியும். ஆனா, செத்தப்புறம்? இப்ப உங்க மனசுல ஓடறது அப்படியே எனக்கு ஒளிவுமறைவு இல்லாமத் தெரியுதே..! நான் என்ன செய்யட்டும்..?” கிரிதர் கண்களில் அச்சம் வந்தது.

“ஸாரிடா...” “நான் கர்ப்பம்னு போன் பண்ணி சொன்னவுடனே, நீங்க ஏன் சந்தோஷப்படலை..? ஒரு எட்டு மாசம் காத்திருந்து, உங்க குழந்தையைப் பார்க்கணும்னு உங்களுக்கு ஏன் தோணல..? ஆளை வெச்சு என் கழுத்தைச் சீவி, ஆத்து தண்ணிலயே சாகடிக்க வெச்சீங்களே, அதுல உங்களுக்கு என்ன த்ரில் கிடைச்சுது..?” “ஏய்... அப்படிப் பாக்காத... பயமா இருக்கு!”

“நீங்க செஞ்சதை அப்படியே ஏத்துக்கிட்டு, பேசாம போயிடுவேன்னு நினைக்கறீங்களா..? நான் பழிவாங்க வேண்டாமா..?” “ஐயோ, என்ன செய்யப் போற..?” “சிம்ப்பிள்... இந்த ஸ்டீயரிங்கைப் பிடிச்சு இப்படித் திருப்பிவிட்டா, கார் என்ன ஆகும்..?” கல்யாணி ஸ்டீயரிங்கைப் பிடித்துத் திருக... கிரிதர் திடுக்கிட்டுக் கண்விழித்தார்.

‘தான் கண்டது கனவு’ என்று புரியவே அவருக்குச் சிறிது நேரம் பிடித்தது. படுக்கையறையின் ஏ.சி.யைத் தாண்டி, உடையை நனைத்து உடல் முழுவதும் வியர்த்துவிட்டிருந்தது. ஜெயசூர்யா ஏமாற்றவில்லை. நந்தினி புதிதாக அனுப்பிய சங்கேத வாசகங்களையும் உடைத்து விட்டிருந்தான். ஒவ்வொரு வார்த்தையும் இன்ஸ்பெக்டர் துரை அரசன் முகத்தில் என்ன உணர்ச்சிகளைக் கொண்டுவரும் என்று நந்தினியால் கற்பனை செய்ய முடிந்தது.

ஜெயசூர்யாவிடம் நன்றி சொல்லி, விடைபெற்றுப் புறப்பட்டபோது, நந்தினிக்கு தொடர் கொட்டாவிகளாக வந்தது. அமெரிக்க நேரத்துடன் இயைந்து, இரவு வெகு நேரம் விழித்திருந்து வேலை செய்ததால் வந்த சங்கடம் இது! வீடு திரும்பி, குளித்து, உடை மாற்றி வேலைக்குச் சென்று சேர்ந்தபோது, ஒரு மணி நேரம் தாமதமாகியிருந்தது. அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த நந்தினி தன் மேஜையை அடைந்து கம்ப்யூட்டரை இயக்கினாள்.

இ-மெயிலில் வந்திருந்த ஒரு விண்ணப்பம் அவளை நிமிர்ந்து அமரச் செய்தது. கே.ஜி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் கிரிதர் பெயரில் உடனடியாக லண்டனுக்கு முதல் வகுப்பு பயணச்சீட்டு பதிவு செய்யுமாறு வந்திருந்த இ-மெயில் அது..! நந்தினி வேலை செய்த தீபக் டிராவல்ஸின் முதலாளி, தீபக் தர்மசேனா. அவருடைய தீபக் மரைன் கம்பெனியைப் போலவே கே.ஜி. தொலைக்காட்சியும் அவர்களுடைய முக்கிய வாடிக்கையாளர்.

அவர்களுடைய அதிகாரிகளுக்கான பெரும்பாலான பயணங்களைத் திட்டமிடுவதும், பயணச்சீட்டுகள் வழங்குவதும் தீபக் டிராவல்ஸ்தான் என்பது நந்தினிக்குத் தெரியும். நந்தினி போனை எடுத்தாள். டயல் செய்தாள். மறுமுனையில் கொட்டாவிகளை அடக்கியபடி பேசினான் விஜய். “என்னடா, உங்க பாஸு டபக்னு லண்டன் புறப்படறாரு..?” என்று நந்தினி மெல்லிய குரலில் கேட்டாள்.

“மாட்டிக்கற மாதிரி இருந்தா, பணக்காரங்க தப்பிச்சுப் போறதுக்கு புகலிடம் ஒண்ணு வேண்டாமா..? இந்தியாவுலேர்ந்து ஓடி வர கொள்ளைக்காரங்களுக்கு அடைக்கலம் குடுக்கறதுக்குன்னே சில நாடுங்க கேட்டை திறந்து வெச்சிட்டு காத்திருக்காங்களே..!” என்று சொன்ன விஜய் கூடவே, “இதை துரை அரசனுக்கும் சொல்லிடு..!’ என்றான்.

“வேலை பத்தின விவரம் எதையும், யார்கிட்டயும் பகிர்ந்துக்கக் கூடாதுனுதான் என்னோட கம்பெனி பாலிஸி. அதை நான் மீறணும். ஓகே... என்ன செய்யறது..?” என்று முணுமுணுத்தாள், நந்தினி. “சந்தேகம் வராதபடி டிக்கெட்டை புக் பண்ணி அனுப்பிடு... மிச்சத்தை துரை அரசன் பார்த்துப்பாரு!” என்றான் விஜய். விஜய் தனக்கு துரை அரசனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை மீண்டும் படித்தான்.

‘கிடைத்த ஆதாரங்களோடு உடனே புறப்பட்டு இந்தியா திரும்பி விடு... மற்ற விஷயங்களை நம் தூதரகம் பார்த்துக்கொள்ளும்...’ விஜய்க்கு திடீரென்று பெரும் நிம்மதி வந்தது. ‘என் தாய்நாட்டுக்குத் திரும்பப் போகிறேன்...’ என்ற கிளர்ச்சி உடலெங்கும் பரவிப் பூத்தது. தன் பயணச் சீட்டைப் பதிவு செய்யும் வேலையில் இறங்கினான். 

இன்ஸ்பெக்டர் துரை அரசன் மாற்றி மாற்றிக் கேட்ட கேள்விகளால், தீபக் தர்மசேனா தளர்ந்துபோயிருந்தார். கண்களை மூடினால், ‘என்னைவிட உன் முதலாளி உனக்கு முக்கியமா?’ என்று அவருடைய அம்மா இமைகளுக்குள் வந்து கண்ணீரோடு கேட்டு நச்சரித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவராக தன் வக்கீலுக்கு போன் செய்தார்.

“ராகவானந்தம் சார்... எங்கம்மாவுக்கு நடக்கப்போறதை நெனைச்சு, நெஞ்செல்லாம் வலிக்குது... உண்மைலயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துருவேனோனு பயமா இருக்கு... பேசாம அப்ரூவராயிடட்டுமா..?” “அந்த இன்ஸ்பெக்டர் சாமர்த்தியமா உங்கம்மாவை வெச்சு உங்களை வளைச்சிருக்கார். அவசரப்படாதீங்க... நாம கோர்ட்ல போராடுவோம், தீபக்...” “எனக்கு அம்மா முக்கியம். அப்ரூவராகறதுனு முடிவு பண்ணிட்டேன்.

அதுக்கான வேலைகளைச் செய்யுங்க வக்கீல் சார்...” என்று சொல்லிவிட்டு தீபக் போன் தொடர்பைத் துண்டித்தார். கிரிதர் தன்னுடைய பிரத்யேக அலுவலக அறையில் முகம் கழுவி, சிறு டவலால் ஒற்றிக்கொண்டார். மேஜை இழுப்பறையைத் திறந்து, அதிலிருந்த வெவ்வேறு போன்களைக் கவர்ந்தார். தன் அலுவலகப் பையில் அவற்றை அவர் வைத்துக்கொண்டிருந்தபோது, இன்டர்காம் ஒலித்தது. அவரது பி.ஏ. செந்தாமரை பேசினார்.

“சார், போலீஸ் வந்திருக்கு...” கிரிதர் விறைத்தார். அதற்குள்ளாகவா? இருந்தாலும், துணிவை விட்டுவிடாமல் பேசினார். “கல்யாணி பத்தி விசாரிக்கவோ, விஜய்யைப் பத்தி விசாரிக்கவோ வந்திருப்பாங்க... காணாமப் போன அந்த காரைப் பத்தி விசாரிக்கக்கூட வந்திருக்கலாம்... அந்த டிபார்ட்மென்ட்டுக்கு அனுப்பு..!” “இல்ல சார்...” என்று பதறியது செந்தாமரையின் குரல். “அவங்க வந்திருக்கறது, உங்களை விசாரிக்க..!”

“வ்வாட்..?!” என்று அதிர்ந்தது போல் கிரிதர் காட்டிக்கொண்டார். “உள்ள அனுப்பு..!” கையிலெடுத்த செல்போன்களைப் போட்டு, மீண்டும் இழுப்பறையை மூடினார். பூட்டினார். இன்ஸ்பெக்டர் துரை அரசன், உள்ளே நுழைந்தார். “வாங்க இன்ஸ்பெக்டர்...” துரை அரசன், அங்கிருந்த நாற்காலியில் சொல்லாமலேயே அமர்ந்தார். “வணக்கம் குணாளன் சார்!” என்றார். கிரிதர் அயரவில்லை.

“அது என் பூர்வீகப் பேரு... அதை கெஸட்ல கொடுத்து மாத்திட்டேனே. இப்ப என்னோட பேரு கிரிதர்..!” “உங்களைப் பத்தி தீபக் தர்மசேனா சில உண்மையெல்லாம் சொல்லியிருக்கார்...” “எந்த தீபக் தர்மசேனா..?” “எந்த தீபக் தர்மசேனாவுக்கு நீங்க வேற வேற போன்ல இருந்து கால் பண்ணி பேசினீங்களோ, அந்த தீபக் தர்மசேனா இப்ப ஒரு தனியார் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி, போலீஸோட கட்டுப்பாட்டுல இருக்கார்.

அவரைப் பயன்படுத்தி இந்தியக் கோயில்கள்ல சிற்பங்களை கொள்ளையடிக்கறது மட்டும் இல்ல, கடல் வழியா ஆயுதங்களைக் கடத்தறது, தவறான தீவிரவாதிகளுக்குத் துணை போறதுனு நிறைய விஷயங்கள்ல நீங்க சட்டத்தை மீறித்தான் மூட்டை மூட்டையா சம்பாதிச்சு இருக்கீங்க. அந்தப் பணத்தையெல்லாம் இந்த பில்டிங்லயும், தொலைக்காட்சி சேனல்லயும் கொட்டியிருக்கீங்க...”

“பிசினஸ்ல என்னை ஜெயிக்க முடியாதவங்க ஏதாவது கதை கட்டி விடுவாங்க. அதையெல்லாம் குற்றச்சாட்டா என் முன்னால வெக்காதீங்க...” “உங்க ரெக்கார்ட்ஸை கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டோம் சார்! நீங்க திடீர்னு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால நெல்லூர்ல கவர்ன்மென்ட் ஆபீஸ்ல ‘குணாளன்’ங்கற பேர்ல சேர்ந்திருக்கீங்க. அதுக்கு முன்னால நீங்க இருந்த இடம் எதுன்னு நாங்க தோண்டித் துருவினபோது, மும்பையில ஒரு அனாதை ஆசிரமத்துல நீங்க படிச்சதா எங்களுக்குத் தகவல் கிடைச்சுது.

அங்கயும் விசாரிச்சுட்டோம். அங்க இருக்கற குணாளனோட போட்டோஸெல்லாம் பார்த்தோம். அது நீங்க இல்ல. நெல்லூர்ல வேலை கிடைச்சு புறப்படறதுக்கு முன்னாடி, அந்த ஆசிரமத்துக்குப் போய் குணாளன் போட்டோ எடுத்துட்டிருக்காரு. அந்த போட்டோவுல இருக்கற இளைஞன் வேற, இங்க அரசாங்க வேலையில சேர்ந்தபோது, அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்ல ஒட்டியிருந்த போட்டோல இருந்தவன் வேற!” கிரிதர், இன்ஸ்பெக்டரை நம்ப முடியாமல் பார்த்தார்.

“அன்னிக்கு உங்களுக்காக இந்த வேலையை செஞ்ச அந்த கவர்மென்ட் ஆபீஸ் பியூனைக்கூட பிடிச்சிட்டோம். நாலு தட்டு தட்டினவுடனே, உண்மையெல்லாம் சொல்லிட்டாரு. போட்டோவை மாத்தறதுக்காக பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாலயே அவருக்கு அம்பதாயிரம் ரூபா குடுத்தீங்களாமே..?” “நீங்க சொல்றது புரியல...”

“தெளிவாப் புரியும்படி சொல்லவா, கிரிதர் சார்..? வேலைக்கான ஆர்டர்ஸ் கிடைச்சு வந்தவரோட பேர் குணாளன். அந்த ஆர்டர்ஸ் காப்பி ஒண்ணு நெல்லூர் அரசாங்க ஆபீஸ்க்கு வந்திருக்குமில்லையா.. அந்த  ரெக்கார்ட்ஸ்ல குணாளனோட ஒரிஜினல் போட்டோவை எடுத்துட்டு, உங்க போட்டோவை அங்க ஒட்டறதுக்குதான் அந்தப் பியூனுக்கு லஞ்சம். வாங்கின பணத்துக்கு அந்த வேலையை அவர் கச்சிதமா பண்ணிட்டாரு.

அரசாங்க வேலைல நீங்க இப்படி குறுக்கு வழில சேர்ந்துட்டீங்க.. அப்புறம், அங்கேர்ந்து தூர்தர்ஷனுக்கு அப்ளை பண்ணி அங்க சேர்ந்தீங்க. அதுக்கப்புறம் கிடுகிடுன்னு ஒரு ஏணி பிடிச்சு, நீங்க மேல வந்துட்டீங்க...” கிரிதர் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருக்க முயற்சி செய்தார். இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார். “குணாளன் எப்ப கிரிதர் ஆனாருன்ற விவரம்லாம் எங்ககிட்ட இருக்கு... ஆனா, நீங்க எப்ப குணாளன் ஆனீங்க? உங்க உண்மையான பூர்வீகம் என்ன, நெல்லூர் வரைக்கும் வந்த அந்த குணாளன் என்ன ஆனாருன்ற விவரங்கள் மட்டும் எங்களுக்குக் கிடைக்கல. அதை நீங்க இப்ப சொல்றீங்களா? இல்ல, போலீஸ் கஸ்டடிக்கு வந்தப்புறம் சொல்றீங்களா..?”

(அடுத்த இதழில் முடியும்...)

ஓவியம்: அரஸ்