தமிழக குத்துச்சண்டை வீரர்!



கூலி வேலை செய்யும்

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். ஆனால், ஏராளமான வெற்றிகளும், விருதுகளும் கிடைத்த பிறகும் கூட, சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதன் வேதனை சொல்லி மாளாது. தமிழக குத்துச்சண்டை வீரர் செந்தில்நாதனின் துயரம் இப்படியானதுதான். சமீபத்தில், தாய்லாந்தில் நடந்த 60 கிலோ எடைப் பிரிவு புரொஃபஷனல் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று திரும்பியிருக்கும் அவரைச் சந்திக்கச் சென்றால் பெயின்ட் அடிக்கும் கூலி வேலையில் இருந்தார். 

கடந்த 2006ம் வருடம் தேசிய ஜூனியர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ்குமாருடன் ஃபைனலில் மோதி வெள்ளிப் பதக்கம் வென்றவரின் நிலை, இதுதான்! செந்தில்நாதன் காலை, மாலை என இருவேளைகள் தனக்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார். அப்படியே பயிற்சியாளர் பணியும் செய்கிறார். மற்ற நேரங்களில் பெயின்ட் அடிப்பதும், மூட்டை தூக்குவதுமாகக் கூலி வேலைக்குச் சென்றுவிடுகிறார்.

‘‘அப்பா இல்லாததால குடும்பத்தைக் கவனிக்கிற பொறுப்பு சின்ன வயசுலேயே வந்திடுச்சு. அதனால, கிடைக்கிற கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கேன் சார்...’’ என வருத்தம் பொங்கப் பேசும் செந்தில்நாதனிடம் பயிற்சி பெற்றவர்கள் இன்று போலீஸ், ரயில்வே எனப் பல்வேறு அரசுப் பணிகளில் ஜொலிக்கின்றனர்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் வட சென்னையின் வியாசர்பாடிதான்! என்னோட தாய்மாமா அருள் பாக்ஸரா இருந்தவர். மாநில அளவுல பதக்கம் வாங்கியிருக்கிறார். அவரைப் பார்த்துதான் எனக்கு பாக்ஸராகணும்னு  ஆர்வம் வந்துச்சு. ஏழு வயசுல அவர்கிட்ட போயிட்டேன். ஆனா, சிறுவனா இருக்கேன்னு இப்போ வேணாம்னு அனுப்பிட்டார். அப்புறம், பனிரெண்டு வயசுல பாக்சிங் பண்ண வந்தேன். எனக்கு பாக்ஸர் கருணாநிதி நிறைய பயிற்சி கொடுத்தார். அதனால 14 வயசுல மாநில அளவுல சப்-ஜூனியர் 39 கிலோ எடை பிரிவுல தங்கம் வாங்கினேன்.

அப்புறம் அதே சப்-ஜூனியர்ல தேசிய அளவுல வெண்கலம் அடிச்சேன். பிறகு, மாநில ஜூனியர்ல தங்கமும், சிறந்த குத்துச்சண்டை வீரர்னு பட்டமும் வாங்கினேன். அடுத்து, தேசிய அளவுல வெள்ளிப் பதக்கம் கிடைச்சது. அப்போ, ‘தென்னகத்தின் சிறந்த குத்துச்சண்டை வீரர்’னு பரிசும் ெபற்றேன். தொடர்ந்து, ஃபெடரேஷன் கப் சீனியர்ல வெண்கலம் அடிச்சேன்.

இந்தியாவுல எல்லா இடமும் போய் விளையாடி இருக்கேன். ஆனா, உலக அளவுல என்னால போக முடியலை. அதுக்கு நிறைய தடைகளைக் கடக்க வேண்டி இருந்துச்சு. ஒரு கட்டத்துல அமெச்சூர் போட்டிகள்ல இருந்து விலகி, புரொஃபஷனல் குத்துச்சண்டை போட்டிகளுக்குப் போய் பதக்கங்கள் அடிச்சேன். (ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜேந்தர்சிங் இதைத்தான் இப்போது செய்து கோடிகளில் சம்பாதிக்கிறார்!) இப்போ, தாய்லாந்துல நடந்த போட்டியில தங்கம் வாங்கியிருக்கேன்.

அங்க தாய்லாந்து சார்பா விளையாடுங்கனு கேட்குறாங்க. ஆனா, நம்ம நாட்டுக்காக விளையாடுறதுதான் எனக்குப் பெருமை’’ என்கிற செந்தில்நாதன் நேரு ஸ்டேடியத்தை ஒட்டியிருக்கும் மை லேடீஸ் பூங்கா எதிரே பாக்சிங் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் தந்த பயிற்சியால் தேசிய அளவில் பதக்கங்கள் வாங்கிய வீரர், வீராங்கனைகள் நிறைய! இப்போது முப்பது பேர் இவரிடம் தீவிர பயிற்சியில் இருக்கிறார்கள்.

‘‘இந்த மையம் ஆரம்பிச்சு நாலு வருஷமாகிடுச்சு. ஆரம்பத்துல, நேரு ஸ்டேடியம் உள்ேள பயிற்சி பண்ணிட்டு இருந்தேன். ஒரு மாநகராட்சி கவுன்சிலர்தான் இங்க தனிப் பயிற்சி மையத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அப்புறமா நான், விளையாடுற ரிங் செட்டப் உள்பட மத்த பொருட்கள வாங்கிப் போட்டேன். கத்துக்க ஆசைப்படுறவங்களுக்கு ஃப்ரீயா பயிற்சி கொடுத்திட்டு வர்றேன். சென்னை மட்டுமல்ல...

திருப்பதி, திருத்தணியில இருந்து கூட கத்துக்க ஆர்வமா வர்றாங்க. இந்த விளையாட்டுக்குப் பெரிசா பணம் தேவையில்ல. போட்டிக்குப் போனா மேட்ச் நடத்துறவங்களே க்ளவுஸ் எல்லாம் கூட கொடுத்திடுவாங்க. பயிற்சி மட்டும் நாம சிறப்பா பண்ணிட்டுப் போகணும். அதனாலதான் கஷ்டப்படுற என்னை மாதிரியான பசங்களுக்கு இந்த விளையாட்டு ரொம்ப செட்டாகுது. நான், இந்த விளையாட்டுக்கு வந்ததுக்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனா, இங்க பாக்ஸர்னா ஒரு மாதிரியான பார்வையும் இருக்கு. அதுவும் வியாசர்பாடி ஏரியான்னா அந்தப் பார்வை இன்னும் வித்தியாசமாகிடுது. ஒரு முறை போலீஸ்காரங்களே என்னைப் பார்த்து ‘பாக்ஸர்னா ரவுடியாதான் இருப்பான்’னு சொன்னாங்க. இங்க நிறைய நல்ல மனுஷங்க இருக்காங்கனு யாருக்கும் தெரியறதில்ல’’ என ஆதங்கப்படுகிறவருக்கு இப்போது முப்பது வயதாகிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

‘‘ஆரம்பத்துல இருந்தே பயிற்சியில ஈடுபட்டதால எட்டாம் வகுப்பு வரைதான் என்னால் படிக்க முடிஞ்சது. அந்த நேரம் எட்டாம் வகுப்பு பாஸாகியிருந்தா அரசு வேலைனு இருந்துச்சு. ஆனா, எனக்குக் கிடைக்கல. அப்புறம், பத்தாம் வகுப்பு பாஸாகணும்னு சொன்னாங்க. இப்போ, பிளஸ் 2 முடிச்சிட்டேன். ஆனாலும் அரசு கரிசனம் காட்ட மாட்டேங்குது. அரசு ஆணைப்படி சிறந்த விளையாட்டு வீரர்களை அரசுப் பணியில் அமர்த்தலாம்னு இருக்கு. அதன்படியும் கேட்டுப் பார்த்துட்டேன்.

இப்போ, என் மாதிரி பாக்ஸர்களை போலீஸ், ரயில்வே துறைகள்ல மட்டும்தான் வேலைக்கு எடுக்குறாங்க. மற்ற துறைகள்லயும் எடுத்தா நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஏதாவது நிரந்தர வேலை இருந்தாதான் எந்தக் கவலையும் இல்லாம உலக அளவுல என்னால சாதிக்க முடியும். அதோடு, நிறைய பேரைப் பயிற்சி கொடுத்து உருவாக்கவும் முடியும்’’ எனக் கோரிக்கையோடு விடை கொடுக்கிறார் செந்தில்நாதன். ஒலிம்பிக் தோல்விகளை விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் செந்தில்நாதனின் நிலையை நினைக்க வேண்டும்!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்