கவிதைக்காரர்கள் வீதி



வற்றிய நதிக்குத்
தெரியும்
நம்மை விட்டுப் போகாதது
கூழாங்கற்கள்
மட்டுமே என்று!
- மு.க.இப்ராஹிம், வேம்பார்.

நமக்கு எந்தப் பக்கம்?
நாசூக்காய்
சாதி அறிய முயலும்
நகரவாசியின்
கேள்வியில் ஒளிந்திருக்கிறது
தீண்டாமையின் மிச்சம்.
- ஜி.ஆரோக்கியதாஸ், சென்னை-32.

நாம் ஊடலின் விளிம்புகளில்
படுத்துக்கொண்டிருக்கிறோம்
உறக்கம் நமக்கிடையே
புரண்டுகொண்டிருக்கிறது
- ஜி.கனிமொழி, கடலூர்.

நதியின்
மெல்லிய அலையாட்டலில்
ஓய்வுறத் துவங்கியது,
கடைசிப் பயணியையும்
கரையேற்றி முடித்த
படகு!
- மகிவனி, கோவை.

உடன் விளையாட
குழந்தைகள் வேண்டுமென்று
கடைக்காரனிடம்
அடம்பிடித்து அழுகின்றன
பொம்மைகள்.
- சா.நாதன் ரவிகுமார், திருவள்ளூர்.

சிறுசிறு முத்தங்களால்
தொடங்குகிறது
பெருங்காமம்!
- விகடபாரதி, திட்டச்சேரி.