குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

தோழர் ஜீவா
முனைவர் இளசை சுந்தரம் (மதுரா வெளியீடு, 25-3, காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-600008. விலை ரூ.150/- தொடர்புக்கு: 98414 99000) ஜீவாவின் சிறப்புகளைப் பற்றிக் கூறும் நூல் இது. இப்படி ஒரே வார்த்தையில் அடக்கி விடக்கூடிய அளவுக்கு அவரது ஆகிருதி இல்லை. மிகுந்த நேர்மையுடன், நெருங்க முடியாத தூய்மையுடன் மனிதனாகவும், புனிதனாகவும் வாழ்ந்து இருக்கிறார். இன்னும் அவரை கண்ணால் கண்ட சாட்சிகள் இருக்கிறார்கள்.

நாம் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை அவரது தூய வாழ்வு அளித்த படிப்பினைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இளசை சுந்தரம் செய்திருப்பது பெரும்பணி. விட்டு விலகி விடுகிற நடையில் எழுதிவிடாமல், சாமான்யருக்கும் தெளிவாகும் விதத்தில் ஏராளமான சம்பவங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஜீவாவின் சொற்பொழிவுகள் மிகுந்த மரியாதைக்குரியவை. வசீகரமும், பொருளும், அதிர்ந்த குரலுமாய் பேசிய நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரிதான மனிதரைப் பற்றிய விரிவான நூல்.

சிற்றிதழ் Talk

பெரியதாக எதையும் யோசிக்காமல், அலட்டிக்கொள்ளாமல் இருட்டுக்கடை அல்வா போல, சின்னதாக, அதே நேரத்தில் தரத்தோடு இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் போக்குடன் படங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஒரு தீர்க்கமான வரையறை செய்துகொண்டேன்.

- திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் (‘படச்சுருள்’ இதழில்)

நிகழ்ச்சி மகிழ்ச்சி

ரஜினியின் ‘கபாலி’ படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது தாய்லாந்து இளவரசி ராஜதரா ஜெயன்குரா படப்பிடிப்புத் தளத்திற்கே வந்து ரஜினியை சந்தித்தார் அல்லவா? அப்போது ‘கபாலி’ ஷூட்டிங்கிற்கான உதவிகளை இளவரசி செய்து கொடுத்ததுடன் ரஜினிக்கும் பரிசு கொடுத்து மகிழ்ந்தார். அந்த நட்பின் காரணமாக, சமீபத்தில் சென்னை வந்திருந்த இளவரசி, ரஜினியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பில் அவர்களுடன் ‘வி கிரியேஷன்ஸ்’ பரந்தாமன் உடனிருந்தார். ரஜினிக்கு இந்த நிகழ்ச்சி... உண்மையில் மிகவும் மகிழ்ச்சி!

யூ டியூப் லைட்

ஷூட்டிங் எதுவும் இல்லாததால், ரிலாக்ஸ் ட்ரிப்பாக நியூயார்க் பறந்துவிட்டார் ஹன்சிகா. அங்கே புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் ரேம்ப் வாக் ஸ்டைலில் நடந்து வந்ததை ரீப்ளே வீடியோவாக்கி, ஃபேஸ்புக்கில் தட்டிவிட்டிருக்கிறார் ஹன்ஸ். ‘யூ ஆர் ஸோ பிரெட்டி... ஐ லவ் யூ ஸோ மச்’ என  ரசிகர்கள் மனம் கிறங்கினாலும், ‘ம்ம்ம்... நீங்க நினைச்சா நியூயார்க் போயிடுறீங்க. நாங்க அதையெல்லாம் படத்துலதான் பார்க்க முடியுது’’ என வெளிப்படையான கமென்ட்களும் வந்து விழுந்திருக்கின்றன. ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள், 145 ஷேர்களை கடந்து பரபரக்கும் இந்த வீடியோவுக்கு ஹன்ஸ் வைத்த தலைப்பு என்ன தெரியுமா? ‘‘வாழ்க்கையே ரீப்ளேதான்!’’

சர்வே

நாம் குடிக்கும் தண்ணீர்கூட நஞ்சாகலாம் என அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. நம் உடலுக்குத் தேவையான தண்ணீரை தீர்மானிப்பது உடலில் உள்ள சோடியம் தாதுக்கள்தான். தேவையில்லாமல் குடிக்கும் நீரானது இந்த சோடியத்தை வெகுவாக கரைத்துவிடுகிறது. நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்று நமக்கே தெரியாமல் போய்விடுகிறது. அப்படி மிதமிஞ்சி நீரைக் குடிக்கும்போது அதே நீர் நஞ்சாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக இந்த ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்த நஞ்சு நீர், மூளையை வீங்கச் செய்வதால் மூச்சுக்கோளாறும், அதனால் நினைவு இழத்தலும், இறுதியில் மரணமும்கூட சம்பவிக்கலாம் என்கிறார்கள் இந்த ஆய்வை செய்த மருத்துவர்கள். அதனால் தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடியுங்கள் என்கிறார்கள். ‘தண்ணில கண்டம்’ங்கிறது இதுதானா!

டெக் டிக்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கியக் கண்டுபிடிப்பு இந்த ‘மினி மொபைல் ரோபோடிக் பிரின்டர்’. நம் பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ள முடியும். அடிக்கடி பிரின்ட் எடுப்பவர்களுக்கு ஏற்றது. மொபைல் போனில் இதற்கான ஆண்டராய்டு ஆப்பை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒரு வெள்ளைத்தாளின் மேற்பகுதியில் இதை வைத்துவிட்டு நாம் பிரின்ட் எடுக்க வேண்டிய ஆவணங்களை ஆப்பிலிருந்து க்ளிக் செய்ய வேண்டும்.

தாளின் மீது ரோபோ போல நகர்ந்து அனைத்தையும் பிரின்ட் செய்துவிடும். கருப்பு வெள்ளையில் மட்டுமே இப்போது பிரின்ட் செய்ய முடியும், ‘விரைவில் கலர் மினி பிரின்டரையும் வெளியிடப் போகிறோம்’ என்கிறது இதை உலகுக்கு அறிமுகப்படுத்திய ‘ஜுடா லேப்ஸ்’ நிறுவனம். விலை ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை.