வானிலிருந்து குதித்து பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி!



விநோத ரஸ மஞ்சரி

அடர்ந்த நீலநிற வானம், மேகத்தைக் கிழித்துக் கொண்டு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது ஸ்கை டைவிங் நிறுவனத்தைச் சேர்ந்த குட்டி விமானம் ஒன்று. தரை மட்டத்திலிருந்து 13 ஆயிரம் அடி உயரே சென்றதும் விமானத்தின் வேகம் மெதுவாகக் குறைய, கதவைத் திறந்துகொண்டு  பயிற்சியாளர் ஒருவரின் துணையுடன் தரையை நோக்கி  ஸ்கை டைவிங் அடிக்கிறார் பெட்டி பட்லர் என்ற பாட்டி!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த இந்தப் பாட்டியின் வயது வெறும் 95தான். தனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடும் விதமாகவே  ஸ்கை டைவிங் அடித்திருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் இளசுகள் விரும்பி விளையாடுகின்ற சாகச விளையாட்டாக ஸ்கை டைவிங் இருக்கிறது. இதற்குப்  பணத்தை தண்ணீராக இறைக்க வேண்டும்.

எல்லோரும் பயந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் விளையாட்டாகவும் இது இருந்துவருகிறது. பெட்டி பட்லர் அசால்ட்டாக இந்த விளையாட்டில் கலந்துகொண்டு துணிச்சலாக  ஸ்கை டைவிங் அடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை அள்ளியிருக்கிறது. அமெரிக்க அதிபராக இருந்த ஹெச்.டபிள்யூ.புஷ் தனது 90வது வயதில் விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் அடித்ததைப் பார்த்திருக்கிறார் பெட்டி. ‘‘அந்த நிகழ்வுதான் எனக்கு உந்துதலாக இருந்தது’’ என்கிறார்.

80 வயதிலேயே சூடான ஏர் பலூனிலும், ஜெட் வேகத்தில் நீரில் செல்கின்ற படகிலும் சவாரி செய்து எல்லாரையும்  அசத்தியிருக்கிறார். வெறும் சாகசத்துக்காக இதை இவர் செய்யவில்லை. பாராசூட்டின் உதவியோடு மேலிருந்து கீழே மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தபோது பாட்டியின் உறவினர்கள், நண்பர்கள், பேரன், பேத்திகள் எல்லாரும் உற்சாகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருக்க, ஸ்கை டைவிங்கின் ஒவ்வொரு வினாடியையும் உணர்வுபூர்வமாக அனுபவித்து செயல்பட்டிருக்கிறார் என்பதை அவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே நமக்குக் காட்டுகிறது.

விரும்புவதை, நேசிப்பதை செய்ய வயது ஒரு தடையில்லை என்பதை இந்த நிகழ்வு நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. பாட்டி கீழே இறங்கியதும், ஸ்கை டைவிங் அனுபவம் எப்படியிருந்தது என்று ஒருவர் கேட்க, ‘‘வொண்டர்ஃபுல்’’ என்று அவர் சொல்ல அந்த இடமே குதூகலமாக மாறியது. ஐந்து வருடங்களில் நூறு வயதைத் தொட்டு விடுவார் இவர். அப்போது என்ன சாகசத்தைச் செய்யப்போகிறார் என்பதே இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது. இன்னும் பல சாதனைகளை பாட்டி படைக்கட்டும்!

- த.சக்திவேல்