தொடரி விமர்சனம்



ரயில் பயணம், அதில் ஒரு காதல், காதலையும் காப்பாற்றி விபத்துக்குள்ளாக இருந்த ரயிலையும் காப்பாற்ற முடிகிற ஃபேன்டஸியே ‘தொடரி’. எக்ஸ்பிரஸ் ரயிலின் பேன்ட்ரியில் பணி செய்கிறார் தனுஷ். பயணிகளாக வருகிற விருந்தினர்களை சரியான முறையில் கவனித்து அனுப்புவது அவரது வேலை. அவரது கவனிப்பில் இருக்கும் ரயில் பெட்டியில் பிரபல நடிகையும் பயணிக்கிறார். அந்த நடிகைக்குத் துணையாக வரும் பணிப்பெண் கீர்த்தி சுரேஷ். அவருடன் தனுஷுக்கு கண்டதும் காதல். அந்த காதலுக்கு ஹரீஷ் உத்தமன் இடைஞ்சலாகிறார். எஞ்சின் டிரைவர் திடீரென இறந்து போக, அதிரடியில் வேகம் எடுக்கிறது ரயில் வண்டி. அந்த வண்டியில் பயணித்தவர்கள் என்னவானார்கள்? அந்த ரயிலில் பயணம் செய்த அமைச்சர் ராதா ரவியின் கதி என்ன? முக்கியமாக தனுஷ்-கீர்த்தி காதல் பிழைத்ததா? என்பதே ‘தொடரி’யின் க்ளைமேக்ஸ்.

எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதை ‘இது ரொம்பவே சுலபம்’ என்பது போல செய்து முடிப்பார் தனுஷ். அவருக்கு இது டேக் இட் ஈஸி கேரக்டர். சர்வ சாதாரணமாக நடித்துவிட்டு ‘அடுத்து என்ன’ என்பது போல் நிற்கிறார் தனுஷ். ரயிலுக்குள்ளே ஓடிக்கொண்டே திரிவதை விட பெரிய வேலையில்லை அவருக்கு. ஆனால், தீயாகப் பறக்கிற ரயிலின் மேல் தளத்தில் ஒற்றை ஆளாக அவர் நின்று நிதானித்து நடப்பதையும், நடனம் ஆடுவதையும் நீங்கள் நம்பிவிட்டால் உங்களுக்கு இடைஞ்சல் இல்லை.

டைரக்டருக்கும் வேலை மிச்சம். அதேபோல களேபரமான வேகத்தில் ரயில் பறக்கும்போது வெட்டவெளி மேற்கூரையில் தனுஷ்- கீர்த்தியின் காதலையும் நீங்கள் நம்பியே ஆக வேண்டும். ஆரம்பத்தில் தனுஷ், தம்பிராமையா, கருணாகரன் கலாட்டாக்கள் படத்தைக் கடத்திப் போகின்றன. கீர்த்தி சுரேஷ் பார்வையில் பட்ட கணத்திலிருந்து படம் காதலுக்கு மாறி, கலகலப்பில் திசை மாறுகிறது. தனுஷின் முதல் பார்வையிலிருந்து மாறுபட்டு அடுத்தடுத்து அவரின் மேலாண்மைக்குள் வந்து போகிறவரை கீர்த்தி ரொம்பவே க்யூட்.

‘சினிமாவில் ஒரு பாடலாவது பாடி விட வேண்டும்’ என்ற ஏக்கத்தில் இருக்கிற அவரை, ‘நான் வைரமுத்துவின் நண்பர்’ என தனுஷ் ஏமாற்றுவது படத்தின் ஆர்ப்பாட்டக் கணங்கள். மொத்த ரயிலின் அலுப்பு சலிப்பு இடங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது கீர்த்தி சுரேஷின் கிறங்கல் குரலும், ஹனி ஸ்மைலும்தான். இறுதிக்காட்சியில் அவர் படத்திற்கு கொடுத்தது உயிர்.

திரைக்கதையின் நம்பகத்தன்மை குறைவுபடுகிற இடங்களில் நகைச்சுவை காப்பாற்றுகிறது. எப்போதும் பரபரப்பையே நம்பியிருக்கும் டி.வி. மீடியாவை வெளுத்து வாங்கியிருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன். பயணிகளையும் சூழ்நிலையையும் காப்பாற்றுவதுதான் சூப்பர் ஹீரோவுக்கான அடிப்படைக் குணம். ஆனால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கீர்த்தி சுரேஷ் பற்றி மட்டுமே அவர் கவலைப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு எந்த உணர்வாவது தோன்றுமா என்றிருக்கிறது. தம்பிராமையா, கருணாகரன், தர்புகா சிவா என காமெடியில் தேற்றுகிறார்கள்.

மொத்த பரபரப்பான கணங்களில் படத்தின் வேகத்திற்கு பொறுப்பு கூட்டுகிறது வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா. இமான் பாடல்களில் பெயரெடுக்காவிட்டாலும், பின்னணி இசையில் உயிர் கொடுத்திருக்கிறார். ‘தொடரி’யில் லாஜிக் இருந்திருந்தால் மேஜிக் செய்திருக்கும்.

- குங்குமம் விமர்சனக் குழு