சூப்பர் ஸ்டாரை சீக்கிரம் சந்திக்கணும்!



‘ரியோ’ ஒலிம்பிக்கில்  பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு மாபெரும் பெருமையைத் தேடித் தந்தவர் பி.வி.சிந்து! அவருக்கு  இன்றுவரை வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக சென்னையில் லேண்டாகி இருந்தார் சிந்து. என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் இந்த வெள்ளி மங்கைக்கு வைர நெக்லஸ் பரிசு வழங்கிய விழா அது! பிங்க் அனார்கலி உடையும், ‘ரியோ 2016’ என்று ஒலிம்பிக் சின்னம் பொறிக்கப்பட்ட மெல்லிய செயினுமாக சிம்பிளாக காட்சியளித்தவரை சின்ன கேப்பில் சந்தித்தோம்.

பேட்மின்டனில் ஆர்வம் எப்படி வந்தது?
‘‘அப்பா பி.வி.ரமணாவும் அம்மா விஜயாவும் வாலிபால் ப்ளேயர்ஸ்! அப்பா ‘அர்ஜுனா விருது’ பெற்றவர். இருந்தும், எனது பயிற்சியாளர் கோபிசந்த் 2001ல் ‘இங்கிலாந்து ஓபன்’ பேட்மின்டனில் சாம்பியன் ஆன வெற்றிக் கதைதான் என்னை பேட்மின்டன் பக்கம் போக வைத்தது. எட்டு வயதில் இருந்தே விளையாட ஆரம்பித்துவிட்டேன்.’’

பேட்மின்டன் தவிர வேறெந்த விளையாட்டு பிடிக்கும்?
‘‘டென்னிஸ்... நான், ரோஜர் ஃபெடரரின் தீவிர ரசிகை. ரியோ ஒலிம்பிக்கின்போது, ரஃபேல் நடால், ஜோகோவிச் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப நேரம் பேச முடியவில்லை. அவர்களுடன் புகைப்படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டேன்.’’

ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
‘‘வீட்டில் இருந்தால் டி.வி.தான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், டிராவல் என்றால் மியூசிக் கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்திப் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.’’

அப்பா, அம்மா, அக்கா எப்படி உந்துதலாக இருந்தார்கள்?
‘‘அப்பா, அம்மா இல்லை என்றால் நான் இல்லவே இல்லை. அவர்கள் கொடுத்த சப்போர்ட்டில்தான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன். ஐ லவ் மை பேரன்ட்ஸ்! அக்கா திவ்யாவிடம் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணுவேன். என்னுடைய ரகசியங்கள் தெரிந்தவள். எனக்கு விளையாட்டிலும், வாழ்விலும் ஏதாவது சிக்கல் என்றால் அவளிடம்தான் அறிவுரை கேட்பேன்.’’

பிடித்த உணவு எது?
‘‘பிரியாணி ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா கையால் செய்கிற ஹைதராபாத் பிரியாணியும், மட்டன் கீமாவும் செம டேஸ்ட். நிறைய நொறுக்குத்தீனி விரும்பிச் சாப்பிடுவேன். ஆனால், ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பே ஜங்க் ஃபுட்டை நிறுத்திவிட்டேன். புரோட்டீன், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டேன். அதேபோல், இரண்டரை மாதங்களாக செல்போனும் பயன்படுத்தவில்லை. வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதாக இருந்தது என் பயிற்சி. அதற்கான பலன்தான் இந்தப் பதக்கம்!’’
 
ஒலிம்பிக்கிற்குப் பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது?
‘‘நிறைய மாற்றங்கள்... நினைத்துக் கூடப் பார்க்கவில்லை, எங்கு போனாலும் மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது  ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனது வெற்றி நிறைய இளம்பெண்களுக்கு உத்வேகமாக உள்ளது. அதேநேரத்தில், என் மீது மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. எனது பொறுப்பும் கூடியிருக்கிறது. அதனால், இப்போது கடுமையாக உழைத்து வருகிறேன். போக வேண்டிய தூரம் அதிகம்.’’

நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் எனப் பலரும் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளனரே?
‘‘எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியெல்லாம் நடக்கும் என நான் கனவிலும் நினைக்கவேயில்லை. அது என்னுடைய நாளாக அமைந்துவிட்டது மகிழ்ச்சி! அடுத்த முறையோ, சீக்கிரமோ, சென்னை வரும்போது சூப்பர்ஸ்டார் ரஜினியைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்!’’

பிடித்த நடிகர்கள்?
‘‘தெலுங்கில் மகேஷ்பாபு, பிரபாஸ் பிடிக்கும். பெரும்பாலும் படங்கள் பார்ப்பது விமானத்தில் பறக்கும்போது கிடைக்கிற நேரங்களில்தான்.’’

ஷாப்பிங் எல்லாம் போவீர்களா? என்ன மாதிரியான டிரஸ் பிடிக்கும்?
‘‘ஷாப்பிங் செல்வதை ரொம்பவே விரும்புவேன். அழகாக டிரஸ் அணிய வேண்டும் என்றும் நினைப்பேன். ஆனால், பரபரப்பான பயிற்சிக்கு இடையில் இதற்கெல்லாம் டைம் கிடைப்பதில்லை. தினமும் இத்தனை மணி நேரம் என பயிற்சி விதிகள் வைத்துக்கொள்ளும்போது, நாம் நினைக்கிற, ஆசைப்படுகிற எல்லாவற்றுக்கும் நேரம் அமைவதில்லை. எல்லோருக்கும் தெரியுமே... சில தியாகங்கள் இல்லாமல் எந்த வெற்றியும் கிடைப்பதில்லை!’’ 

சென்னைக்கும் உங்களுக்குமான தொடர்பு பற்றி?
‘‘என் அம்மா சென்னையில் வளர்ந்தவர். அவருக்கு நிறைய தோழிகள் இங்கே இருக்கிறார்கள். அம்மா தமிழ் நன்றாகப் பேசுவார். ஆனால், எனக்கு தமிழ் தெரியாது. தமிழ் சினிமா நிறைய பார்த்திருக்கிறேன். கடைசியாக ஆர்யா, நயன்தாரா நடித்த ‘ராஜாராணி’ ெதலுங்கில் பார்த்த ஞாபகம். அப்புறம், சில தமிழ் வீடியோக்களை ‘டப்ஸ்மாஷ்’ பண்ணி வெளியிட்டிருக்கிறேன்!’’

- பேராச்சி கண்ணன்
படங்கள்: பரணிகுமார்