போலீஸ்... போலீஸ்...



காலை மணி எட்டு. ‘‘ரேவதி’’  - அழைத்தான் ராகவன். ‘‘என்னங்க?’’ ‘‘ஷூ பாலீஷ் போட்டாச்சா?’’ ‘‘ஆச்சுங்க!’’ ‘‘சாப்பாடு எடுத்து வச்சுட்டியா?’’ ‘‘ம்...’’ ‘‘யூனிஃபார்ம் அயர்ன் பண்ணிட்டியா?’’ ‘‘ஐயையோ,  அதாங்க மறந்துட்டேன்...’’ என்றபடி அவள் கையை உதறினாள். ‘‘வர வர உனக்கு அலட்சியம் அதிகமாயிட்டுது. உடம்புல பயம் விட்டுப் போச்சு. ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டர் கிட்ட யார் திட்டு வாங்குறது?’’ - உரத்த குரலில் கூவினான் ராகவன். ‘‘இதோ... ரெண்டு நிமிஷத்துல அயர்ன் பண்ணிடுறேன். நீங்க கிளம்புங்க’’ என்றவள் சிறிது நேரத்தில் மடிப்பு கலையாத போலீஸ் சீருடையை ராகவனிடம் கொடுத்தாள்.

கான்ஸ்டபிள் ராகவன் மிடுக்காக சைக்கிளில் ஏறியபடி, ‘‘நீ புறப்படலையா?’’ என்று ரேவதியைப் பார்த்துக் கேட்டபோது வெளியே போலீஸ் ஜீப்பின் ஹாரன் ஒலி கேட்டது. காரோட்டி உள்ளே வந்து ரேவதிக்கு சல்யூட் வைத்தான். ஜீப்பில் போகும்போது, ‘‘மேடம்! நீங்க போற வழியிலேதான் அவருக்கு வேலை. அவரும் உங்ககூட ஜீப்ல வரக் கூடாதா?’’ என்று டிரைவர் கேட்க, பதில் கூறாது சிரித்தாள் இன்ஸ்பெக்டர் ரேவதி.                 

-தங்கம் மணிவண்ணன்