குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

சிச்சிலி

லீனா மணிமேகலை
(நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005, விலை ரூ.100/- தொடர்புக்கு: 94861 77208) லீனாவின் 100 காதல் கவிதைகள்  கொண்ட தொகுப்பு இது. கவிதை உலகின் எந்த நிலப்பரப்பையும் கடந்து வெளிவரக்கூடிய அசாத்திய திறமை கூடிய கவிதைகள். வாழ்வின் எந்த ரகசியங்களுக்குள்ளும் அகப்படாத காதலின் பக்கங்கள் வீரியமாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. அனுபவப்பட்ட, துரோகத்தில் இழைந்த, பிரியப்பட்ட காதலின் உணர்வுகளைப் படிக்க நேர்வதே ஒரு அனுபவம். இதுவரை நாம் கண்டுவந்த காதலின் பிதற்றலான பக்கங்கள் துறக்கப்பட்டு, ரத்தமும் சதையுமான உண்மை முன்வைக்கப்படுகிறது.

படிக்கும்போது லீனாவோடு உரையாட முடிகிறது. அவரிடம் பாசாங்குகள் இல்லை. ஒரு மெல்லிய தென்றலைத் தீண்டுவதற்கு வந்தால், நீங்கள் ஏமாறப்போவது நிச்சயம். தற்செயலாக ஒரு மின்னோட்டமுள்ள கம்பியைத் தொடுவது போன்றது. நீங்களாக விரும்பித் துணிந்து அதைத் தொடுவதற்கு வெகுவாக அஞ்சுவீர்கள். ஆனால் இந்தக் கவிதைகள் முற்றிலும் தற்செயலாக உங்களைத் தொடுகின்றன. எல்லாவற்றையும் சுட்டெரித்து விடுகின்றன.

டெக் டிக்

ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் இளசுகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னையே, அதிக நேரம் பேட்டரி சார்ஜ் நிற்பதில்லை என்பதுதான்.  இந்த சிக்கலைத் தீர்க்க  ‘சோலார் பவர் பேங்க்’ புதிதாக சந்தைக்கு வந்திருக்கிறது. இதன் சிறப்பே மின்சாரம் தேவையில்லை என்பதுதான். சில மணி நேரம் சூரிய ஒளியில் வைத்தாலே இந்த பவர் பேங்க் சார்ஜ் ஆகிவிடும். பிறகு எங்கு வேண்டுமானாலும் நம் மொபைலின் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

டிரெக்கிங் செல்பவர்கள், நீண்ட நாட்கள் பயணம் செய்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களை சார்ஜ் செய்ய வசதியாக இரண்டு யூஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் ஒரு எல்.இ.டி டார்ச் லைட் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பவர் பேங்க், ஒரு வருட வாரன்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ.3000  முதல் ரூ.15000 வரை

நிகழ்ச்சி மகிழ்ச்சி

சமந்தா, லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா, லட்சுமி மஞ்சு, விஜய்சேதுபதி என திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட கலர்ஃபுல் விழா இது. ‘சவுத் ஸ்கோப்’ மற்றும் ‘ரிட்ஸ்’ இணைந்து நடத்திய ‘லைஃப்ஸ்டைல் அவார்ட்ஸ்’ விழா சென்னையில் நடந்தது. ஸ்டார் ஹோட்டல், புதிய ரக கார்களின் அறிமுக அணிவகுப்பு என ஃபங்ஷன் ஜொலிஜொலித்தது. நாகசைதன்யாவுடன் காதல், நட்பு பற்றி  ‘சவுத் ஸ்கோப்’ இதழில் மனம் திறந்திருந்தார் சமந்தா. பட்டுப்புடவையில் ஜிகுஜிகுவென வருவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். செம ஸ்டைலீஷான மாடர்ன் காஸ்ட்யூமில் வந்து சமந்தா அசத்தியதுதான் இந்த விழாவின் ஹைலைட்!‘

சர்வே

‘இந்தியாவில் சுமார் 8.4 கோடி குழந்தைகள்  மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்குவதில்லை’ என்ற அதிர்ச்சியான தகவலை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது இப்படி என்றால், பள்ளி முடிந்து மாலை மற்றும் விடுமுறை நாட்களில் பகுதிநேரமாக வேலைசெய்யும் குழந்தைகளின் எண்ணிக்கையோ சுமார் 78 லட்சம். நமது கல்வி உரிமைச்சட்டத்தின்படி 5 -17 வயது வரைக்குமான குழந்தைகளுக்கு இலவசக்கல்வி வழங்கப்படவேண்டும். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைமைதான் இங்கு நிலவுகிறது. 

ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் வேலைக்குச் செல்வதாக இந்தக் கணக்கெடுப்பு சொல்கிறது. வேலைக்குச் செல்கின்ற  வளர்ந்த பெண்களைவிட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அவர்களுக்குப் போதிய கல்வி சரியாக சென்றடையாததுதான் என்கிறது இந்தக் கணக்கெடுப்பு. சுதந்திரமடைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் இன்னும் சரியான கல்வியையே மக்களுக்கு கொடுக்க முடியாதபோது வல்லரசு கனவு வெறும் பகல் கனவுதான்!

யு டியூப் லைட்

சுதந்திரக் காற்றை சுவாசிப்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல... அது விலங்குகளுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என உணர்த்தியிருக்கிறது ‘நவ் திஸ்’ (now this)  என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ. வெளிநாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த கரடியையும் அதன் குட்டிகளையும் மீட்டு, அவை விரும்பும் அழகான காட்டில் உலவ விட்டு மகிழ்ந்திருக்கிறார்கள் ‘பீட்டா’வின் விலங்குகள் நல ஆர்வலர்கள். இந்த வீடியோவை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். 6800 லைக்குகளும் கிடைத்துள்ளது. மண்தரையிலும், புல்வெளியிலும் காலடி பட்டதும் கரடி புரண்டு மகிழ்ந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே இல்லை!

சிற்றிதழ் Talk

எழுதி எழுதிச் சோர்வு தட்டிப் போன சிறுகதை/நாவல் எழுத்தாளனுக்கு தெம்பூட்டுவதே கவிதைகள்தான். அவர்கள் அபூர்வமான பறவையைப் போல காலவெளியில் நம்பிக்கையுடன் பறந்துகொண்டே இருக்கிறார்கள் - எழுத்தாளர் கோணங்கி (‘பேசும் புதிய சக்தி’ இதழில்)