கவிதைக்காரர்கள் வீதி



அது வேறு காலம்

கூரை வீடு
மாடி வீடு
இரண்டிற்கும் நடுவே நிறைய
ஓட்டு வீடுகள் அன்று
வெயில் சுட்டிருக்கும்
மாடி வீட்டிற்கு
முந்தைய படியும்
கூரை வீட்டிற்கு அடுத்த படியும்
ஓட்டு வீடுகள்தான்...
காலையில் பனி படர
ஓடுகளிலிருந்து வரும்
குழம்பு வாசமும்
வெள்ளைப் புகையும்
தாழ்வாரத்தில் ஒழுகும்
மழை தேங்கிய நீரும்
அதிகாலையின் வானொலிச் செய்தியும்
உடல் சுடாது கண் கூசும் மஞ்சள்வெயிலும்
இன்று நினைத்தால்கூட
தேநீர்க் கடையின் தகரப் பந்தலின்
மேல் நின்று கத்திய

காகத்தின் நினைவோடு
கலையாமலே இருக்கிறது...
முருங்கை மரம் பூ உதிர்த்தும்
வேப்பங்கொட்டை காய்ந்தும்
ஓட்டு வீட்டிற்குள் வாழ்ந்த
அந்த வாழ்க்கை வேறு
மின்விசிறியின் சப்தம்
இசையானது
இந்த ஓட்டு வீடுகளில்தான்
விண்முட்டும் கனவுகளுக்குக்
கைகோர்க்க
வானத்து நிலா வீட்டிற்குள்
வந்ததுமிந்த
ஓட்டு வீட்டின் ஓட்டைவழிதான்
செம்பருத்தி பூத்ததும்
சில ஓட்டு வீடுகளின் மேல்
பூசணிக்கொடி படர்ந்ததும்
மைனா முட்டையிட்டதும்
ரயில்பூச்சிகள் கூட வாழ்ந்ததுமென
சொல்ல நிறைய அனுபவங்கள் அன்று
ஒற்றை வீட்டிற்குள் இருந்தது
இன்று ஓட்டு வீடுகள்
சிட்டுக்குருவியின்
சத்தத்தோடு சேர்ந்து
குறைந்துகொண்டே வந்தாலும்
ஒற்றை வரியில்
அதன் நினைவுகளையெல்லாம்
நிரப்பி விடலாம்...
‘அது வேறு காலம்!’

-வித்யாசாகர்