சூப்பர் வில்லன்களின் சூசைட் ஸ்குவாட்!



‘பாட்ஷா’ ஆன்டனி, ‘கேப்டன் பிரபாகரன்’ வீரபத்ரன், ‘படையப்பா’ நீலாம்பரி, ‘காக்கி சட்டை’ தகடு தகடு விக்கி, ‘சத்ரியன்’ அருமை நாயகம் ஆகிய சூப்பர் வில்லன் கேரக்டர்கள் ஒரே படத்தில் வந்தால் எப்படி இருக்கும்? தமிழ் சினிமாவே களேபரம் ஆகிவிடும் இல்லையா? அப்படித்தான் இருக்கிறது, தற்போதைய ஹாலிவுட் நிலைமை.

சூப்பர்மேன், பேட்மேன் போன்ற ஹாலிவுட் & காமிக்ஸ் ஹீரோக்களை அறிந்திருப்பீர்கள். அவர்களின் புகழுக்கு முக்கியக் காரணம், அவர்களின் சூப்பர் வில்லன்கள். அந்த வில்லன்களை எல்லாம் இணைத்து ஒரு படம் செய்தால் எப்படியிருக்கும் என்று வார்னர் பிரதர்ஸ் யோசிக்க, ‘Sucide Squad’ இனிதே உதயம்.

டெட்ஷாட், ஹார்லி குயின், கேப்டன் பூமராங், எல், கில்லர் க்ரூக் ஆகிய சூப்பர் வில்லன்கள் ஜெயிலில் இருக்கிறார்கள். அமெரிக்க அரசு, சில அண்டர்கிரவுண்ட் வேலைகளுக்கு இவர்களை உபயோகப்படுத்திக்கொண்டால் என்ன என்று யோசிக்கிறது. இவர்களுடன் ஜூன் மூன் எனும் ஆர்க்கியாலஜிஸ்ட். இவர் உடலில் என்சாண்ட்ரஸ் எனும் சூனியக்கார ஆவி இருப்பதால், இவரையும் சூசைட் ஸ்குவாடில் யூஸ் பண்ணிக்கொள்ள திட்டமிடுகிறார்கள்.

‘சரி, இவர்களுக்கு என்ன வேலை?’ என்று யோசித்த இயக்குநர் டேவிட் அயெர், ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவரு... ஹாலிவுட் கெட்டால் அமெரிக்காவுக்கு நாச அழிவு’ என அரதப்பழசான கதையை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுசரி, அவர் என்ன ‘பல்லாண்டு வாழ்க’ எம்.ஜி.ஆரா, வில்லன்களைத் திருத்த! டெட் ஷாட்டாக வரும் வில் ஸ்மித்தின் அறிமுகத்திலேயே படம் சூடுபிடிக்கிறது. அடுத்து ஹார்லியாக அறிமுகம் ஆவது மார்கோட் ராபி.

‘The Wolf of Wall Street’ படத்திலேயே அம்மணியின் அதிரிபுதிரி ஆக்டிங்(!)கைப் பார்த்து மிரண்டிருப்பீர்கள். இதில் காமெடியையும் கையில் எடுத்துக்கொண்டு பட்டையைக் கிளப்புகிறார். படம் முழுக்க, இவர் வரும் ஒவ்வொரு சீனிலும் ஒன்லைனர்களால் பட்டையைக் கிளப்புகிறார். இவர் மட்டும் இல்லையென்றால், படம் அம்பேல்தான்!

தொடர்ந்து மற்ற சூப்பர் வில்லன்களும் அறிமுகம் ஆகி, தற்கொலைப்படை ஃபார்ம் ஆகும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட். தற்கொலைப்படைக்கு தேர்வாகியிருந்த சூனியக்காரி(யின் ஆவி), தன் தம்பியுடன் இணைந்து மிட்வே சிட்டியை அழிக்க ஆரம்பிக்கிறார். அவரின் மாயாஜாலத்துடன் எப்படி மோதுவது என்று தெரியாமல், அமெரிக்க போலீஸ் படையே தெறித்து ஓடுகிறது. நம் சூப்பர் வில்லன்களுக்கு இது எதுவும் தெரியாது. ‘‘வாங்க ராசாக்களா... சும்மா ஒரு டெரரிஸ்ட் அட்டாக்’’ என்று சூனியக்காரியிடம் இவர்களைக் கோர்த்துவிடுகிறார்கள்.

‘போலீஸிடமிருந்து நைஸாக எஸ்கேப் ஆக வழியிருக்கிறதா?’ என்று உள்ளுக்குள் திட்டமிட்டபடியே முன்னேறுகிறது தற்கொலைப்படை. ஹார்லியின் காதலனான ஜோக்கர், இன்னொரு பக்கம் ஹார்லியை மீட்க வந்துகொண்டிருக்கிறான். இப்படி எல்லா பக்கமும் கதை சூடுபிடிக்க, இரண்டாம் பாதியில் படம் செம விறுவிறுப்பாகப் போகிறது.

தற்கொலைப்படைக்கு கொடுக்கப்படும் மிஷன், ‘சூனியக்காரியை அழிப்பது’ என்பது முதலிலேயே நமக்கு சொல்லப்பட்டு விடுகிறது. எனவே சூப்பர் வில்லன்கள் அதிர்ச்சியாகும்போது, நாம் பாப்கார்னில் உப்பு இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். வில் ஸ்மித் போர்ஷனில் சென்டிமென்ட்டை ஓவராகப் பிழிந்ததால், அவரையெல்லாம் பயங்கரமான வில்லனாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சூப்பர் வில்லன்களை நாட்டுக்காகப் போராட களமிறக்குவதே பெரிய லாஜிக் ஓட்டைதான்.

இதையெல்லாம்கூட பொறுத்துக்கொள்ளலாம். இவர்களின் மிஷன் பற்றிய விவரத்தை, இந்த திட்டத்தின் தலைவியான இன்டலிஜென்ஸ் ஆபீசர் ஒரு பெரிய ஃபைலில் வைத்திருக்கிறார். டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் ஒரு பென் ட்ரைவில் வைக்காமல் கையில் வைத்துக்கொண்டே சுற்றுகிறார். இதில் பெரிய காமெடி என்னவென்றால், அந்த ஃபைலின்மீது ‘TOP SECRET’ என்று எழுதியிருப்பதுதான். முன்பு தமிழ் சினிமாவில் கிச்சனில் ‘விஷம்’ என்று எழுதி ஒட்டப்பட்ட பாட்டில் ஒன்று இருக்கும்.

அது ஒரு நிமிடம் கண்ணில் வந்து போகிறது. ‘நாங்களே திருந்திட்டோமே... நீங்க ஏன்யா இன்னும் இப்படி இருக்கீங்க? டாப் சீக்ரெட்டுன்னா, சீக்ரெட்டா வைப்பியா... அதை விட்டுட்டு’ என்று நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், காமிக்ஸில் பிரபலமான சூப்பர் வில்லன்கள், சில குறைகள் என்றெல்லாம் இருந்தாலும் நம் மனதைக் கவர்வது மூன்று விஷயங்கள்தான்...

1. ஹார்லி, ஹார்லி, ஹார்லி. 2. சென்டிமென்ட் - டெட்ஷாட்டும் எல்லும் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கும் பாசம். 3. ஜோக்கரின் ஹார்லி மீதான முரட்டுக் காதல் அமெரிக்காவில் படம் ரிலீசானதும் ‘கேவலத்திலும் கேவலமான படம்’ என்றுதான் ஆரம்ப கட்ட விமர்சனங்கள் கூறின. ‘திரைக்கதை சரியில்லை, லாஜிக் இல்லை’ என்று விமர்சகர்கள் ஆராய்ச்சியில் மூழ்கியிருக்க, ரசிகர்களோ ‘‘தம்பிகளா... ஓரமாப் போய் விளையாடுங்கப்பா’’ என விமர்சகர்களை ஒதுக்கிவிட்டு தியேட்டருக்குப் படையெடுக்கிறார்கள்.

குறிப்பாக, டீன் டிக்கெட்டுகள்! போட்டிக்கு வந்த ‘Ben Hur’ ரீமேக்கும் ஊற்றிக்கொள்ள, ‘தற்கொலைப்படை’ காட்டில் பணமழை. அப்புறம் என்ன, படக்குழுவினர் இரண்டாம் பாகத்திற்கு இப்போதே தயாராகிவிட்டார்கள். அதிலாவது கதை இருக்குமா; அல்லது அடுத்து நியூயார்க் சிட்டியைக் காப்பாற்றக் கிளம்பிவிடுவார்களா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!