கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

வேகம், விவேகம், துல்லியம், நுணுக்கம் என்று கச்சிதமான குணங்கள் பலவற்றையும் தன்னிடத்தே கொண்ட லக்னமே கன்னியாகும். மிதுனத்திற்கும், கன்னிக்கும் புதனே அதிபதி. ஆனாலும், புதனின் முழு வீச்சுமே கன்னி லக்னக்காரர்களிடம்தான் வெளிப்படுகிறது. கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள், ஏகலைவன் போல பார்த்துப் பார்த்தே பாதி விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஒரு ஜுவாலை இவர்களுக்குள் எரிந்து கொண்டே இருக்கும்.

தனக்கென்று ஒரு உலகத்தை சிருஷ்டிக்கும் திறன் பெற்றவர்கள் இவர்கள். தன் பேச்சை, எழுத்தை, கருத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டத்தையே தன்னருகே வைத்திருப்பார்கள். மேலோட்டமாக எல்லா விஷயங்களையும் இவர்களிடம் பேசிச் செல்ல முடியாது. ஒரு விஷயத்தின் அடித்தரை நுட்பம் வரை சென்று ஆய்வார்கள். தேங்கிய குளமாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எத்தனை ஈடுபாட்டோடு வேலை செய்கிறார்களோ அதே அளவுக்கு மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பார்கள்.

வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்துக் கொள்வார்கள். பார்ப்பதற்கு மென்மையானவர் போல இருந்தாலும், அடிஆழத்தில் கனன்று கொண்டிருக்கும் ஒரு எரிமலையையே வைத்திருப்பார்கள். சிறிய உதவி செய்தால் கூட வாழ்வின் இறுதி வரையில் நினைவில் வைத்திருந்து சந்தர்ப்பம் பார்த்து கைமாறு செய்வார்கள்.

எல்லா விஷயங்களையும், அறிவார்ந்த முறையில் புத்தி எவ்வளவு தூரம் செல்கிறதோ அதுவரையில் சென்று யோசிப்பார்கள். அதற்கு அப்பால் புத்தியைத் தாண்டிய விஷயங்களும் உள்ளன என்பதையும் புரிந்து வைத்திருப்பார்கள். அவமானங்களை ஏற்றுக்கொண்டு அதை சாதகமாக்கியே முன்னேறுவார்கள். அவமானங்களால் நொடிந்து போக மாட்டார்கள். அசாத்திய நினைவாற்றல் உண்டு. எளிதில் சோர்ந்து போகாமல் தங்கள் செயலின் இறுதிக்கட்டம் வரை காரியமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

ஏதோ ஒருவிதத்தில் கலைத்துறையில் ஈடுபாட்டோடு கவனம் செலுத்துவார்கள். குழந்தைகளை அனுபவசாலியாக வளர்க்க ஆசைப்படுவார்கள். அடுத்த தலைமுறை குறித்த அக்கறையை புதன் கொடுத்துக்கொண்டே இருப்பார். ‘இந்த உலகை விட பெரிய ஆசிரியர் வேறு எவருமில்லை’ என்று விட்டுவிடுவார்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள். புத்தகமே தெய்வம் என்று வழிபாட்டுணர்வோடு படிப்பார்கள்.
 
கன்னி ராசிக்காரர்கள் கூட புதனின் ஆளுமையிலிருந்து விடுபடலாம். ஆனால், கன்னி லக்னக்காரர்கள் விடுபட மாட்டார்கள். உடும்புப் பிடிபோல புதனின் அடிப்படை குணங்கள் இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும். இவை கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தரும் பொதுவான குணங்கள். இனி ராசியில் எந்தெந்த இடங்களில் புதன் இருந்தால், என்னென்ன பலன்களைத் தருவார் என பார்க்கலாம்... கன்னி லக்னத்திற்கு அதிபதியான புதன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயமாகும்.

இவர்கள் காந்தக் கண்களோடு இருப்பார்கள். இனிமையாகப் பேசி எல்லோரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். கூர்மையான புத்தியோடு இருப்பார்கள். கதை, கட்டுரை, அடுக்குமொழி என்று ஏதேனும் கலை கைவரப் பெற்றிருப்பார்கள். எதைச் செய்தாலும் அதிவேகமாகச் செய்வார்கள். பிறரிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். நடுத்தர உயரத்தோடு இருப்பார்கள். இவர்கள் எங்கு நின்றாலும் நாலு பேர் இவர்களிடம் ஏதேனும் ஆலோசனை கேட்டபடி இருப்பார்கள். நிறைய படித்துக்கொண்டே இருப்பார்கள். இலக்கியம், இசை, நாட்டியம் என்று கலைத்துறையின் ஏதேனுமொரு தனித்துவம் பெற்று, தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருப்பார்கள்.

லக்னத்திற்கு இரண்டாம் இடமான துலாம் ராசியில் புதன் அமர்ந்தால் பேசிப் பேசியே சாதிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சி.ஏ. படித்திருப்பார்கள். மொழிபெயர்ப்பாளர்களும் உண்டு. அவ்வளவு எளிதாக செலவு செய்ய மாட்டார்கள். தகுதியுடையவர்களாக இருந்தால்தான் செலவு செய்வார்கள். தான் யாருக்கு உதவுகிறோமோ, உண்மையிலேயே அவர்களின் நிலை என்ன என்று யோசித்துவிட்டுத்தான் செலவைச் செய்வார்கள். இவர்களைப் போல பேரம் பேச முடியாது. ஆனால், நெருக்கமான சிநேகிதர்களுக்கு பணத்தை வாரி இறைப்பார்கள்.

மூன்றாம் இடமான விருச்சிகத்தில் புதன் அமர்ந்தால், இவர்களுக்கு நாணயம், கீர்த்தி, புகழ் போன்றவை நிச்சயம் நன்முறையில் அமையும். எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் தொடக்கச் சிரமம் இருக்கும். தனியாக இருந்து செயல்படத் தயங்குவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். அதிலும் பொதுவுடைமைச் சிந்தனை எழுத்தில் தெறிக்கும். இளைய சகோதரர்கள் மீது மிகுந்த பாசத்தோடு இருப்பார்கள்.

நான்காம் இடமான தனுசு ராசியில் புதன் அமர்வதென்பது கேந்திராதிபதி தோஷத்தைக் காட்டுகிறது. நான்காம் இடமென்பது தாயார் ஸ்தானத்தைக் குறிக்கும். அங்கு புதன் அமர்ந்தால் ‘தாயா, தாரமா’ என்கிற தடுமாற்றத்தையும், அதனால் சில பிரச்னைகளையும் ஏற்படுத்துவார். தாயை பாராட்டிப் பேசினால் மனைவிக்குப் பிடிக்காது; தாயாரோடு இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். ஆனால், வாழ்க்கைச் சூழல் சேர்ந்திருக்க விடாது. தாயாருக்கு நரம்புக் கோளாறு வந்து நீங்கும். இவர்கள் கியர் இருக்கும் வண்டியை ஓட்டாமல் இருப்பது நல்லது. இரவு நேரத்தில் தனியாக தேசிய நெடுஞ்சாலைகளிலெல்லாம் வண்டியை ஓட்டிக் கொண்டு செல்லக் கூடாது.  

ஐந்தாம் இடத்தை ‘அத்தை புத்தி, வித்தை அம்மான்’ என்பார்கள். ஐந்தாம் இடமான மகரத்தில் புதன் அமர்ந்திருப்பதால் வாரிசு தாமதமாக கிடைத்தாலும் வீரியமும் விவேகமும் உள்ள குழந்தை அமையும். ‘‘பக்கத்து வீட்டு பையனுக்கெல்லாம் என் மாமன் உதவி பண்றாரு. ஆனா, கிட்டயிருந்து கஷ்டப்படற என்னை கண்டுக்கிடவே மாட்டேங்கறாரு’’ என்று நினைக்க வைக்கும். தன்முயற்சியோடும், சுயகட்டுப்பாட்டோடும் திகழ்வார்கள். தனித்திருந்து வெல்வார்கள். பூர்வீகச் சொத்தை கஷ்டப்பட்டு பெறுவார்கள்.

ஆறாம் இடமான கும்பத்தில் புதன் அமர்ந்தால் சமூகத்தோடு ஒத்துப் போக முடியாது. இவரால் உதவி பெற்றவர்களே இவர்களுக்கு எதிரியாக மாறுவார்கள். உத்யோகத்தின் பொருட்டு வழக்கு போட்டு ஜெயிப்பார்கள். யார் ஆட்சியாளர்களாக இருந்தாலும் எல்லோரையும் எதிர்ப்பார்கள். இவர்களுக்கு டான்சில் போன்ற இ.என்.டி பிரச்னைகள் வந்து நீங்கும். இவர்களில் சிலர் திக்கித் திக்கிப் பேசுவார்கள். யாருமே தன்னைப் புரிந்துகொள்ளவே இல்லையே என்று அவ்வப்போது நொந்து கொள்வார்கள்.

ஏழாம் இடமான மீனத்தில் புதன் நீசமடைகிறது. மேலும் கேந்திராதிபதி தோஷமாகவும் இருக்கிறது. பல காலமாக தாழ்வுமனப்பான்மையில் சிக்கித் தவித்து மீண்டு வருவார்கள். இவர்களுக்கு புத்திசாலித்தனமான, படித்த வாழ்க்கைத்துணை அமையும். ஆனால், இவர்களை விட அறிவுபூர்வமாகப் பேசினால் பிடிக்காது. தன்னை விஞ்சும்போதெல்லாம் சிறிய பயம் தோன்றி மறையும். இவர்கள் கூட்டு வியாபாரத்தைத் தவிர்த்து விடுதல் நல்லது. இவர்கள் ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

எட்டாம் இடமான மேஷத்தில் புதன் மறைகிறார். சொன்ன வேலையை அல்லது நினைத்த வேலையை உடனே செய்யாமல் அப்படியே தள்ளித் தள்ளிப் போடுவார்கள். கடைசி நேரத்தில் முடிப்பார்கள். ‘முன்னரே முடித்திருந்தால் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமோ’ என்று வருத்தப்படுவார்கள். விஷயங்களை உள்வாங்கும் திறனும், எதையும் உற்று நோக்கும் திறனும் அதிகம் பெற்றிருப்பார்கள். தனக்கு ஏற்பட்ட பிரமிப்பை வெளிக் காட்ட மாட்டார்கள். சாதனையாளர்களைக் கூட சாதாரணமாகப் பேசி அணுகுவார்கள்.

தயங்காது தான் நினைப்பதைக் கேட்பார்கள். ‘‘ஒருவிதத்துல அவன் உசத்தின்னா நானும் வேறொரு விதத்துல உசத்தி’’ என்று பேசுவார்கள். சேமிப்பே இருக்காது. லட்சியமும் இருக்கும். அதேசமயம் அலட்சிய குணமும் இருக்கும். தன்னை சமுதாயத்தில் நிலை நிறுத்திக் கொள்ள போராடுவார்கள். அதனால், எதிரிகள் இருந்து கொண்டேயிருப்பார்கள். பிறகு எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுவார்கள். எங்கு யாரிடம் கூர்மையான அறிவும், ஞானமும் உள்ளதோ அங்கு சரணடைவார்கள். இவர்களின் முன்னோர்களில் யாருமே நுழையாத துறைகளில் சென்று சாதிப்பார்கள்.

ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் புதன் அமர்வதென்பது விசேஷம்தான். தந்தையார் செய்த தொழிலையே கொஞ்சம் நவீனப்படுத்தி இவர்கள் தொடரக் கூடும். தந்தையை மறைமுகமாக விஞ்சவே முயற்சிப்பார்கள். நிறைய தர்ம காரியங்கள் செய்வார்கள். ஏதேனும் ஞான குருவை தன்னுடைய குருவாகக் கொள்வார்கள். ஒன்றைப் போலவோ அல்லது வேறு யார் மாதிரியோ இவர்கள் எதையுமே செய்ய மாட்டார்கள். இவர்களின் முயற்சி இல்லாமலேயே இவர்களின் பூர்வ புண்ணிய பலத்தால் வீடு, செல்வம் என்று அனைத்து வகையான பேறுகளும் அமையும்.

பத்தாம் இடமான மிதுனத்தில் புதன் தனித்து அமர்ந்தால் அக்கவுன்ட்ஸ், சி.ஏ., வங்கியில் பணி, கன்சல்டிங், பத்திர எழுத்தாளர், பத்திரிகைத் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, இசைத் துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இவர்களில் பலர் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரிவார்கள். ஒரு நிறுவனத்தில் முக்கிய ஆலோசகராக பதவியில் அமர்வார்கள். எப்போதும் புத்தியில் ஒரு சாணக்கியத்தனம் இருந்துகொண்டே இருக்கும்.

பதினோராம் இடமான கடகத்தில் புதன் அமர்ந்தால் மூத்த சகோதர, சகோதரிகள் மிகுந்த அன்போடு இருப்பார்கள். இவர்கள்தான் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஒரே வேலையை நம்பியிராமல் இரண்டாவதாக ஏதேனும் தொழிலில் ஈடுபட்டு சம்பாதிப்பார்கள். எந்த செயலைச் செய்யும் முன்னரும் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டோ அல்லது ஆலோசனை கேட்டுவிட்டோதான் செய்வார்கள். பெரியவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை தருவார்கள்.

பன்னிரண்டாம் இடமான சிம்மத்தில் புதன் அமர்ந்தால், தூக்கமின்மையால் சிரமப்படுவார்கள். வீண் செலவுகளைச் செய்வார்கள். வேலையின் காரணமாக அன்னிய தேசத்தில் இருந்துவிட்டு பின்னர் மத்திம வயதில் சொந்த ஊருக்கு வருவார்கள். எப்போதும் ஏதேனும் ஒரு விஷயத்தின் பொருட்டு கவலைப்பட்டபடி இருப்பதால் கனவுகளிலும் அது எதிரொலிக்கும். எனவே, கனவுத் தொல்லையால் அவதிப்படுவார்கள். அதேநேரம் ஆன்மிகம் சார்ந்த பல நூல்களை எழுதி பலபேருக்கு வழி காட்டுவார்கள்.

கன்னி லக்னத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். பெரும்பாலும் கன்னி லக்ன ஜாதகர்களுக்கு தனித்த  புதன் எங்கு அமர்ந்தாலும் பெரியளவில் எதிர்மறைப் பலனை தந்து விட மாட்டார். அதேநேரம் நற்பலனையே வாரி வழங்கிக் கொண்டிருக்கவும் மாட்டார். பகை, நீசம் பெற்ற இடங்களில் கொஞ்சம் எதிர்மறையான பலன்களைக் கொடுத்து எச்சரிக்கை விடுப்பார். ஆனாலும் பயம் வேண்டாம். அதிகபட்சமாக ஒரு குழப்பமான மனோநிலையும், என்ன செய்வது என்று தெரியாமலும் இருக்கும். இம்மாதிரி நேரங்களில் மகான்களை தரிசிப்பதும் அல்லது அவர்களை நினைவுபடுத்தும் தலங்களுக்குச் சென்று வருதலும் நல்லது.

எனவே, எப்போதுமே நீங்கள் மத் ராமானுஜரை மனதில் தியானியுங்கள். அவரின் வாழ்க்கை சரிதத்தையும், உபதேசங்களையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் அவரின் கருத்துலகத்தை அனுமதியுங்கள். உங்களுக்குள் இருக்கும் புதன் எனும் உபதேச குருவை அவர் விழிப்படையச் செய்வார். சென்னைக்கு அருகேயுள்ள பெரும்புதூர்தான் ராமானுஜரின் அவதார தலமாகும். அங்கு சென்று வாருங்கள். ராமானுஜரையும் அத்தலத்திலேயே உறையும் ஆதிகேசவப் பெருமாளையும் தரிசித்து வாருங்கள்.

-ஓவியம்: மணியம் செல்வன்

(கிரகங்கள் சுழலும்...)