ராசி



-பிரகாஷ் ஷர்மா

தணிகைவாசன் குழந்தை பிறந்த அன்றே சொல்லிவிட்டார் மகனிடமும், மருமகளிடமும், ‘‘என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்! கஷ்டமே வாழ்க்கையாகக் கொண்ட என் அம்மா பெயரை மட்டும் வைத்துவிட வேண்டாம்!’’ என்று. அய்யர் வந்து சம்பிரதாய பூஜைகளைச் செய்து, குழந்தையின் பெயரைச் சொல்லச் சொன்னார்.

தணிகைவாசன் தன் மகன் வாயிலிருந்து வந்த அந்த பெயரைக் கேட்டதும் கண்கலங்கி, தன் மனைவியைப் பார்த்தார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. விசேஷம் முடிந்து, சாப்பாடு நடந்தது. அமைதியாக தணிகைவாசன் பக்கம் வந்தான் மகன். ‘‘அப்பா! பாட்டி ரொம்பக் கஷ்டப்பட்டு, யாரோட துணையும் இல்லாம ஒரு இளம் விதவையா உங்களை வளர்த்தாங்க. பங்காளிகள் துரோகத்திலிருந்து காப்பாத்தி, பத்துப் பாத்திரம் தேய்ச்சு, உங்களைப் படிக்க வச்சு ஆளாக்கினாங்க.

நல்ல வருமானம், வசதியோட நீங்க வாழும்போது பார்க்க முடியாம இறந்துட்டாங்க. அதனால அவங்க பேரை ராசியில்லாத பேரா நினைக்கறீங்க. ஆனா, அவங்க இல்லைன்னா நீங்க இல்ல. உங்களை மாதிரி ஒரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாடி இருந்த அந்தப் பெண் மாதிரி, என் மகளும் வருங்காலத்துல இருக்கணும்பா! அதனாலதான் ‘சுகந்தி’னு பாட்டி பேரையே வச்சேன்.’’ தணிகைவாசன் பேச முடியாமல் நா தழுதழுத்தார்.