ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

சுபா

தன்னைக் கொல்வதற்காக தீபக் தர்மசேனா சிறைச்சாலையில்கூட ஆள் ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற செய்தி, சின்னதுரையின் கண்களில் குழப்பம் கொண்டு வந்தது. ஆனாலும், அவன் சிறு அச்சத்துடன் சிரித்தான்.

“சார், நீங்க என்னை பயமுறுத்தப் பார்க்கறீங்க... நீங்க சொல்றதை நான் நம்பல...” என்றான். “அப்புறம் உன் இஷ்டம்...” என்று சொல்லிவிட்டு, துரை அரசன் எழுந்தார். “எதுக்கும் இவன் மேல ஒரு கண்ணு வெச்சுக்குங்க. இவனுக்குக் கொடுக்கற சாப்பாட்டை செக் பண்ணிட்டுக் கொடுங்க... மத்த கைதிங்ககிட்டேர்ந்து இவனைப் பாதுகாக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்று அருகிலிருந்த சிறை அதிகாரியிடம் அவன் காதில் விழுமளவு ஓங்கிய குரலில் சொன்னார். அங்கிருந்து புறப்பட்டார்.

சின்னதுரை யோசனையுடன் சுவரில் சாய்ந்து அமர்ந்தான். கும்கும் தன் வசீகரத்தையெல்லாம் இழந்துவிட்டவள் போல் சோர்ந்து அமர்ந்திருந்தாள். துரை அரசன் அவளுடைய கார் சாவியையும், கைப்பையையும் திருப்பிக் கொடுத்தார். “இனிமே அவன் சொன்னான், இவன் சொன்னான்னு நம்பர் பிளேட்டை மாத்தி வண்டி ஓட்டறது, கடத்தல் பொருளை ஒரு இடத்துலேர்ந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுக்கறதுனு சட்டத்துக்கு எதிரா வேலை செஞ்சா, போலீஸ் உன்னை மன்னிக்காது. ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா, உன்னைத்தான் தூக்கி ஜெயில்ல போடுவேன்...” என்று மிரட்டலாய்ச் சொன்னார்.

தப்பித்தால் போதும் என்று கும்கும் தலையசைத்து “தேங்க்ஸ்” என்றாள். விடுவிடுவென்று வெளியே வந்து காரை எடுத்தாள். இந்த மஞ்சள் ஜென் அதிர்ஷ்டக் கார் என்று இத்தனை நாள் விற்காமல் வைத்திருந்தாள். முதல் வேலையாக விற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். தீபக் தர்மசேனா சற்றே கலங்கிப் போயிருந்தார். திடீரென்று அவருக்கு எதிராக பல ஸ்க்ரூக்கள் முடுக்கப்படுவதை அவர் உணர்ந்திருந்தார். சின்னதுரை போலீஸில் மாட்டுகிறான். கும்கும் கச்சிதமாக மடக்கப்படுகிறாள். எங்கே, எப்படி ரகசியங்கள் வெளியே கசிய ஆரம்பித்தன..?

அரவமணி நல்லூர் நடராஜரைத் தொட்ட பிறகுதான் எல்லாம் அவருக்கு எதிராக நடக்கின்றனவா..? சின்னதுரை கொடுத்ததாக மாத்ருபூதம் மூலம் வந்து சேர்ந்த எஸ்டி கார்டை இயக்கிப் பார்த்தார். அதில் பல்வேறு கோயில் சிற்பங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் பதிவாகியிருந்ததை கவனித்தார். போலீஸ் கையில் இது சிக்காமல், சின்னதுரை சாமர்த்தியமாக அனுப்பி வைத்துவிட்டான் என்றே அவர் நம்பினார். அதற்கு இரண்டு பிரதிகள் போடப்பட்டு, கமிஷனர் வசமும், துரை அரசன் வசமும் இருக்கின்றன என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

தனக்கு நெருக்கமான வக்கீலை அழைத்துப் பேசினார். “பேசாம முன் ஜாமீன் வாங்கிரவா..?” “வேணாம்...” என்றார், வயது முதிர்ந்த அந்த வக்கீல். “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லனு நீங்களே உங்களைக் காட்டிக் கொடுத்துக்கற மாதிரி ஆயிரும். ஏடாகூடமா ஏதாவது பத்திரம் கித்திரம் வெச்சிருந்தா, அதையெல்லாம் எடுத்து வேற எடத்துல பத்திரப்படுத்துங்க... பிரச்னையான ஆளுங்க யாரோடயும் கொஞ்ச நாளைக்கு தொடர்பே வெச்சுக்காதீங்க... அவங்களுக்கு நீங்களும் போன் பண்ணாதீங்க... அவங்க போன் பண்ணாலும் எடுக்காதீங்க...”

“சரி...” எதெல்லாம் காவல்துறையின் கையில் சிக்கினால் ஆபத்து என்று நினைத்தாரோ, அதையெல்லாம் கவர்ந்து ஒரு தோல் பையில் போட்டார். தன் வங்கியின் பாதுகாப்பு அறைப் பெட்டகத்தில் கொண்டுவைத்தார். கும்கும் போன் செய்தபோது எடுக்காமல் தவிர்த்தார். விஜய்யின் வாழ்க்கையிலும், அடுத்தடுத்து சில காரியங்கள் துரிதமாக நடந்தன. கிரிதர் எங்கே எந்த கயிற்றைப் பிடித்து இழுத்தாரோ, தெரியவில்லை. கமிஷனரின் உத்தரவின் பேரில், விஜய் மீது போடப்பட்டிருந்த சந்தேக வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. கே.ஜி. தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டப் பிரிவு அவனுக்கு அமெரிக்காவுக்கு விசா வாங்க ஏற்பாடுகள் செய்தது.

பத்தே நாட்களில் அமெரிக்காவுக்கான விசா தயாராகி, அவனுக்கான பயணச்சீட்டு வீட்டுக்கு வந்தது. “எனக்கே இவ்வளவு வேலை நடக்கும்போது, விஜய் மல்லையாக்களுக்கு ஏம்மா நடக்காது..?” என்று சொல்லிக்கொண்டே, விஜய் பெட்டிகளில் பேக் பண்ண ஆரம்பித்தான். அழைப்பு மணி ஒலித்தது. மரகதம் சென்று கதவைத் திறந்தாள். வாசலில் துரை அரசன் நின்றிருந்தார்.

“என்னடா இது, நம்ம வீட்டுக்கு வழக்கமா வர்ற விருந்தாளி வரலையேனு எங்க வீட்டு காக்காகூட கத்திட்டேயிருந்தது. வாங்க... வாங்க...” என்று அவள் சொன்னதும், துரை அரசன் புன்னகைத்தார். சோபாவில் அமர்ந்தார். “காபில சர்க்கரை கம்மியாப் போடுங்கம்மா...” என்றார். “என்ன சார்? கைல வாரன்ட், கீரன்ட் ஒளிஞ்சு இருக்கா..?” என்று கேட்டபடி விஜய் அவர் எதிரில் வந்து அமர்ந்தான். 

“விஜய், உன் மேல இருந்த கேஸை வாபஸ் வாங்கினதுல உன்னைவிட எனக்குத்தான் சந்தோஷம் அதிகம். தப்பான ஆள் உள்ள இருந்தா, தப்பு செய்யறவன் தைரியமா வெளிய தப்பை செஞ்சிட்டு தப்பிச்சிட்டே இருப்பான்...” “தலை சுத்துது சார், உங்க பன்ச் டயலாக் கேட்டு! என்னை வழியனுப்ப நீங்க வரலைன்னு தெரியும்... மேட்டருக்கு வாங்க சார்!” “விஜய், நீ அமெரிக்கா போறதுல எங்களுக்கும் சில வசதிகள் இருக்கு...” என்றார் துரை அரசன், காபியை உறிஞ்சிக்கொண்டே.

“சிலைக் கடத்தல்ல ஈடுபட்டிருக்கற ஒரு முக்கியமான புள்ளியை நாங்க நெருங்கிட்டு இருக்கோம்னு நினைக்கறேன். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியான்னு எல்லா இடத்துலயும் அந்த சிலைகள் விலைபோகுது. அதனால, நீ அங்க போயிருக்கும்போது, எப்பவுமே என்னோட தொடர்புலயே இரு! உன்னுடைய உதவி எனக்குத் தேவைப்படலாம்... என்னுடைய உதவி உனக்குத் தேவைப்படலாம்...” “ஷ்யூர் சார்..”

“அமெரிக்காவுல இருக்கற ஒரு நம்பர் தரேன். இதை எங்கேயும் குறிச்சுக்காத... உன் போன்ல ஸ்டோர் பண்ணி வைக்காத... மனப்பாடம் பண்ணி மனசுல வெச்சுக்க. ஏதாவது எமர்ஜென்ஸின்னா, இந்த நம்பருக்குப் பேசு. உன் போன்லேர்ந்து வேணாம்... ஏதாவது பொது போன்லேர்ந்து போன் பண்ணு...” அவர் கொடுத்த எண்ணை விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து, “உள்ள ரெக்கார்டு ஆயிருச்சு சார்...” என்றான்.

சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் பரபரப்பாக துரை அரசனுக்கு எதிரில் அந்த தடிமனான ஃபைலைக் கொண்டுவந்து வைத்தார். “தீபக் தர்மசேனாவோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சிட்டிருக்கோம், சார்! அவர் சட்டுனு எல்லாத்தையும் நிறுத்திட்ட மாதிரி இருக்கு. ஸ்டேட் பாங்க்குக்கு கைல ஒரு பையைக் கொண்டு போனாரு. வெளிய வரும்போது அந்தப் பை இல்ல...” “நம்ப டிபார்ட்மென்ட்லயே அவருக்குத் துப்பு கொடுக்க ஆளுங்க இருப்பாங்க, சுகுமார்.

அதனால அவர் உஷாராகி இருப்பாரு. ஆனா, நாம அதைவிட உஷாராயிருக்கோம்னு அவருக்குத் தெரியாது. சிக்கலா இருக்கறதை எல்லாம் கொண்டுபோய் லாக்கர்ல வெச்சிருப்பாருன்னு நெனைக்கறேன். பெரிய கையா இருக்கறதால, அவசரப்பட்டு அவர் மேல கை வெச்சா, எல்லாம் நமக்கு எதிராவே திரும்பிடும். அதனாலதான் பதுங்கியிருக்கேன்...”

“கரெக்ட் சார்...” “ஆனா, கண்காணிப்பைக் குறைக்க வேண்டாம்...” “யெஸ், சார்...” அந்த ஜீப் குலுக்கல்களுடன் பயணம் செய்தது. உள்ளே, இரு காவலர்களுக்கு நடுவில் கைகளில் விலங்கோடு சின்னதுரை அமர்ந்திருந்தான். அவன் முகம் வெளிறியிருந்தது. “இப்ப எதுக்கு என்னை வேற ஜெயிலுக்கு மாத்தறீங்க..?”

“ஏய், தொணதொணனு கேள்வி கேக்காத. புழல் சிறைல உனக்கு ஆபத்துனு உன்னை சேலம் ஜெயிலுக்கு மாத்தச் சொல்லி உத்தரவு. பொண்டாட்டிகூட கோயிலுக்கு கூழ் ஊத்த வர்றேன்னு சொல்லிட்டு திடீர்னு இந்த டூட்டில போட்டு, போக முடியாம நானே டென்ஷனா இருக்கேன். இருக்கற வேலையைவிட்டு உன் கூட நாங்க என்ன ஊர் சுத்திப் பாக்கவா வந்திட்டிருக்கோம்..?” என்று பான்பராக் வாசத்துடன் கான்ஸ்டபிள் எரிந்து விழுந்தார்.

சில நாட்கள் சிறையில் இருந்ததே, சின்னதுரையின் அசட்டு தைரியத்தைத் தவிடுபொடியாக்கியிருந்தது. “அதுக்கில்ல, சார்... வழில யாராவது என்னை ஷூட் பண்ணிருவாங்க. இல்லேன்னா லாரியைக் கொண்டுவந்து போலீஸ் வண்டி மேல மோதி என்னை காலி பண்ணிருவாங்க...” “இப்ப நீ வாயை மூடல... ‘தப்பிக்கப் பார்த்தான், ஷூட் பண்ணிட்டேன்’னு நானே உன்னைக் காலி பண்ணிடுவேன்!” என்று அந்த கான்ஸ்டபிள் துப்பாக்கியை உயர்த்திக் காட்டினார்.

அதற்கப்புறம், சின்னதுரை வெளியே வார்த்தைகளை விடாமல் தொண்டைக்குள்ளேயே புலம்பிக்கொண்டு வந்தான். சென்னை விமான நிலையம், அர்த்த ராத்திரியிலும் பரபரப்பாக இருந்தது. சர்வதேச விமானங்கள் புறப்பாடு என்று போட்டிருந்த கேட்டில் நீளமான வரிசை. அவரவர் தள்ளுவண்டிகளில் கனமான சூட்கேஸ்களுடன் அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

தடுப்புக் கம்பிக்குப் பின்னே, வழியனுப்ப வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. கைகுலுக்கலுடன் சில வழியனுப்பல்கள். கண்ணீருடன் சில பிரிவுகள். கட்டிப் பிடித்து சில உணர்ச்சிக் கொந்தளிப்புகள். விவரம் புரியாமல், கலைந்த தூக்கத்தோடு சந்தோஷமாக ஓடிப் பிடித்து விளையாடும் குழந்தைகள்.

விஜய்யின் விமானம் இரவு இரண்டு மணிக்கு மேல் புறப்பாடு. துபாய் சென்று, அங்கிருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ செல்லும் விமானத்துக்கு மாற வேண்டும் என்று ஏற்பாடு. டாக்சியிலிருந்து பெட்டிகளை அவன் இறக்க, நந்தினி ஓடிப்போய் தள்ளுவண்டியைக் கொண்டுவந்தாள். மரகதம் கண்களில் கண்ணீருடன் அவன் கன்னங்களைத் தடவினாள். “ஜாக்கிரதையா இருடா...” என்றாள்.

“நந்து, நீதான் அம்மாவைப் பார்த்துக்கணும்..!” என்றான் விஜய். “எங்களைப் பத்தி கவலைப்படாத... நீ போய் வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டு வா..!” என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள், மரகதம். விஜய், மரகதத்தை அருகில் இழுத்து அணைத்துக்கொண்டான். “பார்த்தும்மா... உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்க..” என்றான். மரகதம் நந்தினியின் பக்கம் திரும்பினாள். “இவ்வளவு ஜாடையா சொல்றானே, இன்னுமா புரியல..? அவன் என்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டான்னா என்ன அர்த்தம்..? உன்னையும் கட்டிப் பிடிக்கணும்னு புரியல..? தள்ளிப் போய் நிக்கற..?” நந்தினி முகம் சிவந்தாள்.

“அங்க குட்டைப் பாவாடை போட்டுக்கிட்டு வெள்ளை வெளேர்னு பொண்ணுங்க சுத்திட்டிருக்கும். நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அதுங்க பின்னால போயிடாத... கற்போட திரும்பி வா!” என்று சொல்லி நந்தினி அவனை அணைத்துக்கொண்டாள். “ஆல் த பெஸ்ட்...” என்று காதில் கிசுகிசுப்பாகச் சொன்னாள். விஜய், நந்தினியை இறுக்கமாக அணைத்து, “அதிர்ஷ்டமும், கவனமும் எனக்கு நெறைய வேணும்...” என்று சொன்னான். “நான் சொன்னதைலாம் நீ நெனைவு வெச்சுக்க...” சேலம் சிறைச்சாலை.

எதிர் வெயிலில், காலை உடற்பயிற்சிகள் முடிந்து, கைதிகள் அவரவர் சிறைக்கூடங்களுக்கு வரிசையாகச் செல்ல வேண்டிய நேரம். சின்னதுரையின் முன்னால் இருந்தவன், அவனைவிட ஆறு அங்குலம் உயரமாக இருந்தான். அவனுடைய அகலமான முதுகிலிருந்து வியர்வைக்கோடுகள் வழிந்துகொண்டிருந்தன. அவன் சட்டென்று முகத்தைத் திருப்பி, சின்னதுரையைப் பார்த்தான். அந்தக் கண்களைப் பார்த்ததும், சின்னதுரையின் உடலில் ஒரு நடுக்கம் சேர்ந்தது.

“என்னடா... தீபக் தர்மசேனாவுக்கு துரோகம் பண்ணிட்டு நீ பாதுகாப்பா உள்ள இருந்துரலாம்னு நெனைக்கறியா..?” என்றான். பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் பற்களுக்கிடையில் ஒரு அரை பிளேடு வெளியே வந்தது. அதை அவன் எடுத்த வேகத்தில், சரக்கென்று சின்னதுரையின் கையில் அந்த பிளேடால் ஒரு கோடு போட்டான்.

சின்னதுரை அலறினான். அவன் பிளேடை தூர எறிந்தான். “என்னைக் காட்டிக் கொடுத்தே, உன் கழுத்துல கோடு விழும்..” சின்னதுரையின் அலறல் கேட்டு, விசில் ஊதிக்கொண்டே ஒரு காவலர் ஓடிவந்தார். சின்னதுரை அச்சத்திலேயே மடங்கி விழுந்தான்.

குட்டைப் பாவாடை போட்டுக்கிட்டு வெள்ளை வெளேர்னு பொண்ணுங்க சுத்திட்டிருக்கும். நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அதுங்க பின்னால போயிடாத.

(தொடரும்...)

-ஓவியம்:  அரஸ்