ஆச்சரிய ரஜினி... எமோஷனல் தனுஷ்!



ஜோக்கர் குரு சோமசுந்தரம்

வெற்றி மழையில் நனைந்து, தலை துவட்டியபடி சிரிக்கிறார் குரு சோமசுந்தரம். ‘ஜோக்கர்’ அவரை இன்னும் மேலே உயர்த்தியிருக்கிறது. அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை வி.ஐ.பிகள் எனப் பலரும் பாராட்டி வைக்க, நெகிழ்ந்திருக்கிறார் ‘மக்கள் ஜனாதிபதி’. ‘‘முதல்ல நான் சமூக வலைத்தளங்கள், மீடியாவினருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். படத்தோட தயாரிப்பாளர்கள் நல்ல முறையில் தயாரிச்சதோட மட்டும் நிறுத்திக்காம, சரியான ப்ரொமோஷன்கள் மூலம் படத்தை ரீச் பண்ண வச்சிருக்காங்க. அவங்களுக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ். ராஜுமுருகன் சார் இந்த ஸ்கிரிப்ட்டை சொன்னபோது நம்பிக்கை வந்தது. ஆனால், இவ்வளவு தூரம் எனக்குக் கிடைத்த அங்கீகாரத்திற்கு அவரே பொறுப்பு.

ரஜினி சார் படம் பார்த்துட்டு மொத்த டீமையும் பாராட்டினார். ஹீரோ, மன்னர் மன்னன் கேரக்டராகவே வாழ்ந்திருக்கார்னு சொல்லியிருக்கார். இப்படி ஒரு படம் அமையறது அரிதான விஷயம். தயாரிப்பாளர்களிடம், ‘உங்களால எப்படி இப்படி ஒரு தைரியமான படத்தைக் கொடுக்க முடிஞ்சது’னு ரொம்பவே ஆச்சரியப்பட்டார். விஷால் சார் படத்தைப் பார்த்துட்டு ‘அடுத்த வருஷம் முழுவதும் அவார்டு ஃபங்ஷன்கள் போவீங்க... எல்லா விருதுகளும் உங்களுக்கு கிடைக்கும்’னார். தனுஷ் சார் இன்னும் ஒரு படி மேல.

எங்களை நேர்ல கூப்பிட்டுப் பாராட்டியவர், என்னைப் பார்த்ததும் ரொம்பவே எமோஷனல் ஆகிட்டார். ‘தேசிய விருது உங்களுக்கு நிச்சயம். இயக்குநர், ஹீரோ, இசையமைப்பாளர்னு எல்லாருக்குமே மரியாதை காத்திருக்கு’னு பாராட்டிக்கிட்டே இருந்தார்!’’

‘‘‘ஜோக்கர்’ல ஹீரோவானது எப்படி?’’
‘‘ ‘ஆரண்யகாண்டம்’, ‘கடல்’, ‘ஜிகர்தண்டா’னு நான் நடிச்ச எல்லா படங்களையும் ராஜுமுருகன் சார் பார்த்திருக்கார். இந்தியில் நவாஸுதின் சித்திக் மாதிரி நானும் ஒரு அற்புதமான நடிகன்னு பேட்டிகள்ல கூட சொல்லியிருக்கார். மன்னர் மன்னன் கேரக்டர் பத்தி அவர் சொன்னதும், அதோட முழு ஸ்கிரிப்ட்டையும் வாங்கிப் படிச்சேன். என்னால பண்ண முடியுமானு சின்ன தயக்கம். ‘கூத்துப்பட்டறை’யில் பத்து வருஷம் கத்துக்கிட்ட விஷயங்களும், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் அனுபவமும் ஒண்ணா சேர்ந்ததால தைரியம் வந்துச்சு.

‘ஜோக்கர்’ தொடங்குறதுக்கு முன்னாடி ரெண்டு, மூணு மாசம் இடைவெளி அமைஞ்சது. அதுல எனக்குள்ள ரிகர்சலைத் தொடங்கிட்டேன். அப்புறம் தர்மபுரியில் வீடெடுத்து தங்கினோம். மு.ராமசாமி ஐயாவில் இருந்து எல்லாருக்கும் ரிகர்சல் இருந்துச்சு. ஒத்திகை திருப்தி ஆன பிறகே ஷூட்டிங் கிளம்பினோம்!’’ 

‘‘ராஜுமுருகன்...’’
‘‘ரொம்ப பொறுமையானவர். படப்பிடிப்பு நடக்கும்போது எந்த சத்தமும் ஆர்ப்பாட்டமும் இருக்காது. தினமும் நாம வேலைக்குப் போற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். அவ்வளவு பெரிய கேரக்டரை கொஞ்சமும் டென்ஷன் இல்லாமல் பண்ணினதுக்கு அவரும் ஒரு காரணம்!’’

‘‘கூத்துப்பட்டறை டு சினிமா... எப்படி?’’
‘‘மதுரை பக்கம் இருக்கற பார்த்திபனூர் என் அப்பாவின் ஊர். அம்மாவுக்கு பேராவூரணி. மதுரை அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் டிப்ளமோ முடிச்சிட்டு,  ரப்பர் கம்பெனியில் வேலை செஞ்சேன். ஸ்கூல், காலேஜ்ல படிக்கும்போதே சினிமா ஆர்வம். தொடர்ந்து ஆங்கிலப் படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன். ‘கூத்துப் பட்டறை’ பத்தி தெரிஞ்சதும் உடனே சென்னைக்கு வந்துட்டேன். நேரே நாசர் வீட்டுக்குப் போனேன். அவர்தான் ‘கூத்துப் பட்டறை’யின் முகவரியை எனக்குக் கொடுத்து அனுப்பி வச்சவர். 2002ல அங்கே சேர்ந்தேன். அது ஒரு காட்டாறு போல என்னை வாரிச் சுருட்டி இழுத்துக்கிட்டது.

பத்து வருஷம் அங்கேதான் இருந்தேன். தியாகராஜன் குமாரராஜா ‘ஆரண்ய காண்டம்’ மூலம் என்னை சினிமாவுக்குக் கூட்டி வந்தார். சின்னச் சின்ன ரோல்கள்னாலும்  ரசிச்சு வொர்க் பண்ண முயற்சிப்பேன். மனைவி, ரெண்டு குழந்தைகள்னு அழகான குடும்பம். எல்லாருமே திருவண்ணாமலையில் இப்போ இருக்கோம். ‘ஜோக்கரு’க்கு பிறகு ‘ஒரு வேதாளம் சொல்லும் கதை’யில் நடிக்கறேன். ‘உங்களோட ஒரு படத்துல சேர்ந்து வொர்க் பண்ண விரும்புறேன்’னு தனுஷ் சாரும் சொல்லியிருக்கார். நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்னு நம்புறேன்!’’

- மை.பாரதிராஜா