வீட்டு சாப்பாட்டுக்கும் ஒரு ஆப்!



சென்னைப் பெண்ணின் செம ஐடியா!

மாநகரவாசிகளின் முக்கியமான பிரச்னையே சாப்பாடுதான். பொறுமையாக வீட்டில் சமைக்க விடாமல் பொருளாதாரம் துரத்துகிறது. அப்படி இப்படி அசால்ட்டாக சமைக்கும் வீட்டுச் சாப்பாடு நாக்குக்கு ஒப்பவில்லை. வெளியே வெளுத்துக் கட்டலாம் என்றால் அது உடலுக்கு ஒப்பவில்லை. இந்த வெற்றிடத்தைத்தான் வெற்றி கொண்டிருக்கிறது ‘மோர்மிளகாய்’ (moremilaga) எனும் ஸ்மார்ட்போன் ஆப். சென்னையின் பல வீடுகளில் பாரம்பரிய முறையில் தயாராகும் உணவை சுடச்சுட வீடு,  அலுவலகம் தேடி வந்து டெலிவரி செய்கிறார் இந்த
ஆப்புக்கு சொந்தக்காரர் விஜி கணேசன்!



‘‘மாஸ்  கம்யூனிகேஷன் படிச்சிட்டு விளம்பரத்துறையில வேலை பார்த்துட்டிருந்தேன். திடீர்னு ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு இல்லத்தரசியாக வேண்டிய நிலை. போரடிச்சுது. வீட்டு வேலை செய்கிற ஒரு அம்மாகிட்ட யதேச்சையா பேசிட்டிருந்தேன். தினமும் சில வீடுகளுக்குப் போய் சமையல் செய்து கொடுத்துட்டு வர்றதா அவங்க சொன்னாங்க. சாப்பாட்டு நேரத்துக்கு முன்னாடி எல்லார் வீட்டுலயும் போய் வேலையை முடிச்சிடணும்னு அந்தம்மாவுக்கு பரபரப்பு.

‘ஏன்... உங்க வீட்லயே எல்லாருக்கும் சமைச்சு எடுத்துட்டுப் போய் எல்லார் வீட்டுக்கும் கொடுத்தா என்ன?’னு கேட்டேன். அவங்ககிட்ட அதுக்கு பதில் இல்ல. நான் பதில் தேட ஆரம்பிச்சேன். அதுதான் இந்த ஆப். இதுல சமையல் ஆர்வம் உள்ள பெண்கள் சுமார் 10 பேரை இணைச்சிருக்கோம். இவங்க யாருக்கும் பணம் குறிக்கோள் இல்லை. ஒரு பேஷனுக்காக வித்தியாச வித்தியாசமா சமைக்கிறவங்க. தினமும் அவங்க வீட்டு உணவுத் தேவை போக கொஞ்சம் அதிகமா உணவுகளை சமைச்சுக் கொடுக்கறாங்க. அதுதான் டீல். இதுக்கு ஏத்த வருமானமும் அவங்களுக்கு கிடைக்குது.

கடந்த ஒரு வருஷமா இது அருமையா போயிட்டிருக்கு!’’ என்கிறவர் இந்த ஆப் செயல்படும் முறை பற்றி விளக்குகிறார்...‘‘மெனுவை பொறுத்தவரை மதியம் லன்ச் மற்றும் டின்னர் மட்டும்தான் இந்த ஆப்பில் கிடைக்கும். இதுல தென்னிந்திய, வட இந்திய உணவுகள் அடக்கம். மதியத்துல சில வகை காம்போ பேக் இருக்கும். அடிப்படையான மதிய உணவுன்னா சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், ரசம்... இதன் விலை 80 ரூபாய். இதைத் தவிர்த்து அவியல், ஸ்வீட், சப்பாத்தி மாதிரியான எக்ஸ்ட்ரா உணவுகளும் மெனுவில் இருக்கும். ரசத்தில் மட்டுமே எலுமிச்சை ரசம், அன்னாசி ரசம், கண்டந்திப்பிலி ரசம்னு பத்துக்கு மேல வெரைட்டி கொடுக்குறோம்.

சமையல் பண்றவங்களைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான உணவில் எக்ஸ்பர்ட்டா இருப்பாங்க. அதனால நாங்களே ஒவ்வொண்ணையும் டேஸ்ட் பண்ணிதான் இல்லத்தரசிகளை செலக்ட் பண்றோம். பொதுவா அடுத்த நாளுக்கான மெனுவை முதல் நாளே ஆப்பில் பதிவேற்றுவோம். வர்ற ஆர்டரைப் பொறுத்து தேவையான அளவை சமைக்கிறவங்ககிட்ட சொல்லிடுவோம்.

அவங்ககிட்ட இருந்து உணவு அயிட்டங்களைக் கொண்டு வரவும், ஆர்டர் கொடுத்தவங்ககிட்ட கொண்டு போய் சேர்க்கவும் டெலிவரி பாய்ஸ் இருக்காங்க. இப்ப தினமும் சுமார் 30லிருந்து 40 ஆர்டர்கள் வரை வருது. ஆரம்பத்துல மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளுக்குத்தான் சப்ளை செய்தோம். வரவேற்பு அதிகரிக்கவே, திருவான்மியூர் சுற்று வட்டாரத்துக்கும் விரிவுபடுத்தியிருக்கிறோம்.

ஆப் அல்லது எங்க இணையதளத்தில் ஆர்டர் செய்ய முடியாத பெரியவர்களுக்காக மொபைல் நம்பரும் கொடுத்திருக்கோம். அதிலும் ஆர்டர் தரலாம். கையில பணம் இருந்தும் தரமான வீட்டுச் சாப்பாடு கிடைக்கலையேனு ஏங்கித் தவிக்கிற சென்னைவாசிகள் இந்த ஆப்பை அமோகமா வரவேற்கறாங்க. பல வீடுகள்ல இருந்து தயாராகுற உணவுங்கறதால, நிறைய சுவைகளுக்கு உத்தரவாதம். அதனால இது சீக்கிரமே போரடிக்கிற வாய்ப்பும் இல்லை!’’ என்கிறார் விஜி புன்னகையுடன்!

ஒரு பேஷனுக்காக வித்தியாச வித்தியாசமா  சமைக்கிறவங்க. தினமும் அவங்க வீட்டு உணவுத் தேவை போக கொஞ்சம் அதிகமா  உணவுகளை சமைச்சுக் கொடுக்கறாங்க...

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்