ஒலிம்பிக்... தங்க வேட்டையில் தமிழக வீரர்கள்!



சுதந்திரத்திற்குப் பிறகு ஒலிம்பிக் தடகளத்தில் ஒரு தங்கம் கூட வென்றதில்லை இந்தியா!  ஆனால், இந்த அவப்பெயர் தற்போது நடக்க இருக்கும் ரியோ ஒலிம்பிக் நானூறு மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாறலாம். அப்படி அமைந்திருக்கிறது அந்த நால்வர் கூட்டணி! வேகத்தில் அமெரிக்காவிற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் ஜொலிக்கிறது இந்த அணி! இதில் இடம்பெற்றுள்ள ஆரோக்கிய ராஜிவ், தருண் இரண்டு பேரும் அக்மார்க் தமிழர்கள்.



இவர்களுக்கு மாற்று வீரராக உடன் செல்லும் மோகன்குமாரும் தமிழரே! தங்கள் வாழ்நாள் கனவை கடின உழைப்பால் நெருங்கியபடி, பெங்களூரு விளையாட்டு ஆணைய மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் இருந்தவர்களிடம் பேசினோம். முதலில் ஆரோக்கிய ராஜிவ்... திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர். வறுமையான குடும்பப் பின்னணி. ஆனாலும், அசராமல் உழைத்து ஒலிம்பிக் தடகளக் குழுவில் இடம் பிடித்திருக்கிறார்.

‘‘என்னோட அப்பா செளந்தரராஜன்தான் எனக்கு ரோல் மாடல். அவர், ஓட்டப் பந்தயத்துல மாவட்ட சாம்பியன். அவர் மாதிரி வரணும்னு ஆசை. ஆரம்பத்துல நீளம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப்னு என் கவனம் இருந்துச்சு. அதுல தேசிய அளவுல சாம்பியன் பட்டம் வாங்கினேன். அப்போ, ஸ்கூல்ல ராமச்சந்திரன் சார் பயிற்சி கொடுத்தார். இந்தளவுக்கு நான் வர அவரும் ஒரு காரணம். அவர், ‘இதுக்கு மேல நீ முன்னேறி வரணும்னா நல்லா சாப்பிடணும்.

உடம்பை பயிற்சியில தேத்தணும்’னு சொன்னார். ஆனா, எனக்கு வசதியில்ல. குடும்பச் சூழலால காலேஜ் படிப்பையே பாதியில விட வேண்டிய நிலை. ஊட்டியில இருக்குற மெட்ராஸ் ரெஜிமென்ட்ல 2010ம் வருஷம் சிப்பாய் வேலை கிடைச்சது. அங்கதான் என்னை மெருகேத்திக்கிட்டேன். அங்க பயிற்சியாளர் ராம்குமார் நிறைய ஊக்கம் கொடுத்தார். இரண்டு வருஷம் கழிச்சு ஆர்மி சாம்பியன்ஷிப் நானூறு மீட்டர்ல ஜெயிச்சேன்.

அப்புறம் நேஷனல் ஓபன்ல முதலிடம், ஏசியன் கிராண்ட் பிரிக்ஸ்ல தங்கம்,  2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில வெண்கலம்னு என் கிராஃப் வேகமா போச்சு. ஒலிம்பிக் ஃபெடரேஷன் கேம்ப்ல நானும் கேரளாவைச் சேர்ந்த அனஸ்ஸும் நானூறு மீட்டர் தேசிய ரெக்கார்டை ெதாட்டோம். அடுத்து எங்க ரெண்டு பேரோட தருணும், கேரளாவைச் சேர்ந்த குன்ஹு முகமதுவும் சேர்ந்தாங்க. துருக்கியில நடந்த நானூறு மீட்டர் ரிலே போட்டியில நாங்க தேசிய ரெக்கார்டா இருந்த 3.02.7 விநாடிகளை உடைச்சு 3.01.7 விநாடிகள்ல வந்துட்டோம். அதனாலதான் எங்க மேல நம்பிக்கை வந்துச்சு!’’ என விவரித்தவரை சிரித்தபடி தொடர்கிறார் தருண்.

‘‘ஒலிம்பிக்ல பதினாறு டீம்தான் கலந்துக்க முடியும். அதுக்கு தகுதிப் போட்டி உண்டு. கடந்த மாசம் பெங்களூருவுல நடந்த தகுதிப் போட்டியில 3.00.9னு வந்து சாதனை படைச்சிட்டோம். இப்போ, ஒலிம்பிக்ல 13வது தர வரிசையில இந்தியா இருக்கு. ஆனா, டைமிங்ல ரெண்டாவது இடத்துல இருக்கோம்!’’ என உற்சாகம் பொங்க பேசும் தருணுக்கு சொந்த ஊர் அவிநாசி அருகிலிருக்கும் ராவுத்தம்பாளையம் என்ற கிராமம்.

‘‘நான் நாலாவது படிக்கும்போதே அப்பா அய்யாசாமி இறந்துட்டார். அம்மா பூங்கொடி டீச்சரா இருக்காங்க. ஆரம்பத்துல, நான் கோ-கோ ப்ளேயர். அண்டர் 16ல தமிழ்நாடு டீமுக்காக விளையாடினேன். ஆனா, ஆறாவது படிக்கும்போதே அத்லெட்டிக்ஸ் பயிற்சியும் எடுத்திட்டு இருந்தேன். அங்க அழகேசன் சார் நிறைய பயிற்சி கொடுத்தார். பிளஸ் ஒன் படிக்கும்போது ஜூனியர் நேஷனல்ஸ், ஓபன் நேஷனல்ஸ்ல தங்கம் வாங்கினேன். அப்புறம், இந்திய கேம்ப் நடந்தப்போ இந்த டீம் கூட இணைஞ்சேன். இப்போ, ஒலிம்பிக் தகுதி வரை வந்திருக்கோம்!’’ என்கிறார் நெகிழ்வாக!

மற்றொரு வீரரான மோகன்குமார் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர். அப்பா ராஜா கான்ட்ராக்டர். அம்மா மீனாகுமாரி. அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் ஃபைனல் இயர் மாணவர் இவர். ‘‘சின்ன வயசுல இருந்தே தடகளத்துல ரொம்ப ஆர்வம் சார்... 2008ம் ஆண்டிலிருந்து பயிற்சி எடுத்திட்டு இருக்கேன். கடந்த வருஷம் நானூறு மீட்டர் தனிநபர்ல ஜூனியர் நேஷனல்ஸ்ல தங்கம் வாங்கினேன். அப்புறம், சீனியர் லெவல் தர வரிசையில முன்னேறியதால இந்த சான்ஸ் கிடைச்சிருக்கு!’’ என்கிறார் சந்தோஷமாக.

கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் தொடர் ஓட்டத்துக்கு இந்தியா தகுதி பெறவில்லை. ஆனால், இன்று சாத்தியமாக்கி இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இவர்களோடு கேரளாவைச் சேர்ந்த அனஸ், குன்ஹு முகமது ஆகிய இருவரும் இணைந்திருக்கிறார்கள். குன்ஹு ராணுவத்திலும், அனஸ் கப்பற்படையிலும் பணியாற்றுகின்றனர். ‘‘நிச்சயம் நாங்க தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்போம்!’’ என கோரஸாக நம்பிக்கை விதைக்கிறார்கள் இவர்கள்!  

பெருமை சேர்ப்பார்கள்!

‘‘எங்க மகன் நிச்சயம் தங்கம் வாங்குவான் சார்...’’ என உற்சாகமாகப் பேசுகிறார்கள் ஆரோக்கிய ராஜிவின் தந்தை சௌந்தரராஜனும், அம்மா லில்லி சந்திராவும். ‘‘எங்களுக்கு மூத்த பையன் ராஜிவ். நான், விவசாயக் கூலி... அதனால அவனுக்கு ஊக்கம் மட்டும்தான் கொடுக்க முடிஞ்சது. இப்போ, எல்லாரும் அவனைப் பத்தி பேசும்போது பெருமையா இருக்கு!’’ என்கிறார் நெகிழ்ச்சியாக! 

* ‘‘தருணுக்கு விளையாட்டுன்னா உயிர். அவன் அப்பா இறந்தப்போ ரொம்பவே நொடிஞ்சு போயிட்டேன். தனியார் பள்ளியில வேலை பார்த்துதான் அவனை படிக்க வச்சேன். இப்போ, எங்க ஸ்கூல்ல தொடங்கி கிராமம் வரை அவனைக் கேட்காத ஆளில்ல. இன்னைக்கு அவன் எனக்குப் பெருமை சேர்த்துட்டான். நாளைக்கு ஒலிம்பிக்ல ஜெயிச்சு நிச்சயம் நம் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பான்!’’ என்கிறார் தருணின் அம்மா பூங்கொடி.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: வெங்கடேசன், நிக்கோலஸ், தங்கவேல்