செல்ஃபி வித் கபாலி!



மலேஷிய விமானமே ‘கபாலி’ ஸ்பெஷல் ஆகும்போது ஒரு ஹோட்டல் ஆகக் கூடாதா என சொல்லாமல் சொல்கிறது கோயமுத்தூரில் உள்ள ‘கோலிவுட் கபே’. ஹோட்டல் உள்ளே சுற்றிலும் விதவிதமான கெட் அப்களில் நம்மை வரவேற்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி. மெனு கார்டில் கூட சூப்பர் ஸ்டார் பற்றிய அறிந்திராத தகவல்கள் பளிச்சிடுகின்றன. ரகுராம் மாஸ்டர் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே பெங்காலி  மொழிப்படமான ‘பாக்ய தேபட’ பற்றிக் கூட தகவல் இருப்பது வியப்பு.



மெனுவின் முதல் பக்கத்தில் இருக்கும் ரஜினி பற்றிய குறுக்கெழுத்துப் போட்டியைப் பூர்த்தி செய்தால் பரிசும் உண்டு. நிறைவாக, ஆறடி உயர ‘கபாலி’ ரஜினியோடு செல்ஃபி டைம்! ‘‘எங்க ஊர் மக்களுக்கு பொழுதுபோக்கே சினிமாவும், ேஹாட்டலும்தான் சார்... அதனால, இந்த ரெண்டையும் ஒரே இடத்துல தரணும்னு நினைச்சேன். அப்போ, உருவாச்சு இந்த ‘கோலிவுட் கபே’!’’ என உற்சாகமாகப் பேசுகிறார் இதன் உரிமையாளர் ‘பேரூர்’ ஹரிஹரன் சுரேஷ். இந்த 26 வயது இளைஞர் கடந்த மாதம்தான் இப்படி ஒரு வித்தியாச ஹோட்டலைத் திறந்திருக்கிறார்.

‘‘அப்பா இருபத்தஞ்சு வருஷமா கேட்டரிங் வேலை பண்றார். நான், பி.எஸ்சி கேட்டரிங் முடிச்சிட்டு அப்பாகூட சேர்ந்தேன். அவர் தந்த அனுபவத்தோடு இந்த ஹோட்டலைத் தொடங்கினேன். என் கான்செப்ட்டே, நல்ல உணவோட மாசம் ஒரு நடிகர் பற்றின தகவல் தர்றதுதான். நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி ரசிகன். அவர் நடிக்கும் படங்களை தவறாமல் பார்த்துடுவேன்.

இந்த ஹோட்டல் திறந்ததும் தலைவர்தான் என் ஞாபகத்தில் முதல்ல வந்தார். அதான், எடுத்ததுமே அவர் பத்தின தகவல்களைத் தொகுத்தேன். தெரியாத தகவல்களா இருக்கணும்னு இன்டர்நெட், பழைய சினிமா புத்தகங்கள்னு நிறைய தேடி எடுத்தேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. அப்புறம், தினமும் தலைவர் நடிச்ச படம் ஒண்ணு போடுவோம்.

இப்படி சின்ன சின்னதா மக்களை ஈர்க்கற மாதிரி பண்ணியிருக்கோம்!’’ என்கிறவர், கட் அவுட் பற்றி சுவாரஸ்யம் பொங்குகிறார். ‘‘இது ஆறடி உயர ரியல் சைஸ் கட்அவுட்... இப்போ மக்கள் மத்தியில செல்ஃபி ஃபேஷனாகிடுச்சு. அதனால, வர்ற வாடிக்கையாளர்கள் எல்லாரும் தலைவர் ‘கபாலி’ ரஜினிகிட்ட நின்னு செல்ஃபி எடுக்குற மாதிரி இதை வடிவமைச்சிருக்கோம். குழந்தைகளும், பெரியவங்களும் ஆர்வமா வந்து இங்கே செல்ஃபி எடுத்து அதை ஃபேஸ்புக்ல போட்டு மகிழ்றப்போ எனக்கும் மகிழ்ச்சி!’’ என நெகிழ்கிறார் ஹரிஹரன் சுரேஷ்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: சதீஷ்