ஸ்டேட் பேங்க் கூட்டணி!



பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளாக இருக்கும் ஐந்து வங்கிகளையும், பெண்களுக்கு என கடந்த ஆட்சியில் பிரத்யேகமாகத் துவங்கிய பாரதிய மகிளா வங்கியையும் அதனுடன் இணைத்து, உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக அதை மாற்றுவதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறது மத்திய அரசு. பொருளாதார நிபுணர்கள் பலரும் இதை வரவேற்க, தொழிற்சங்கங்களும் மாநில அரசுகளும் எதிர்க்கின்றன.



அரசு சார்ந்த பரிவர்த்தனைகளுக்கான ட்ரெஷரி வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து துவங்கிய நடைமுறை இது. பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சுயேச்சையான சமஸ்தானங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என இதேபோல ஸ்டேட் வங்கிகளை உருவாக்கிக் கொண்டன. வங்கிகள் தேசியமயமாக்கத்தின்போது, இந்த சுயேச்சை சமஸ்தான வங்கிகள் பலவும், பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் ஆக்கப்பட்டன.

காலபோக்கில் இவற்றில் பல வங்கிகள் ஸ்டேட் வங்கியுடன் இணைந்தன. கடந்த 2008ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் சௌராஷ்டிராவும், 2010ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரும் இணைந்தன. இப்படி இணையாமல் தனித்து இயங்குபவை இப்போது ஐந்து வங்கிகள். ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா ஆகிய அவற்றை ஸ்டேட் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இப்போது ஸ்டேட் வங்கி 36 நாடுகளில் 14 ஆயிரம் கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த இணைப்பின் மூலம் 37 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கியாக இது மாறும். ‘உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று’ என்ற அடையாளத்தை ஸ்டேட் வங்கி பெறும். ‘‘அது மட்டுமில்லை. இப்படிப்பட்ட இணைப்புகள் வங்கிகளின் வல்லமையைப் பெருக்கும். செலவுகளைக் குறைக்கலாம். அதனால் லாபமும் அதிகரிக்கும். கஸ்டமர்களுக்கு அதிக சேவை கிடைக்கும்’’ என்கிறார்கள் ரிசர்வ் வங்கி தரப்பில்.

‘‘ஸ்டேட் வங்கியை மட்டுமில்லை. இதர சின்னச்சின்ன பொதுத்துறை வங்கிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். 26 அரசுத்துறை வங்கிகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து மொத்தம் 6 வங்கிகளாக ஆக்கிவிடலாம். ஒரே ஆள் பல வங்கிகளில் ஏமாற்றிக் கடன் வாங்குவது போன்ற மோசடிகள் இதில் தவிர்க்கப்படும்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஆனால், ‘‘இப்படி வங்கிகளை இணைப்பது, எல்லா வங்கிகளின் மூலதனங்களையும் ஓரிடத்தில் திரட்டி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன்களை கட்டுப்பாடு இல்லாமல் வாரி வழங்குவதற்கான சூழ்ச்சிதான்’’ என்கிறார், அரசுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணா. ‘‘இப்படிப்பட்ட பெரிய வங்கிகள் அமெரிக்காவில் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் திவால் ஆனதுதான் கடந்த கால வரலாறு.

இந்த துணை வங்கிகள் ஐந்தும் 45 ஆயிரம் ஊழியர்கள், 6700 கிளைகளுடன் இயங்கி கடந்த ஆண்டில் 9 லட்சம் கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்துள்ளன. 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் லாபம் ஈட்டின. இவற்றை இன்னும் துணை வங்கிகளாக வைத்திருக்காமல், சுதந்திரமாகச் செயல்பட வைப்பதே நாட்டுக்கு நல்லது’’ என்கிறார் அவர்.

ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்குக் கிடைக்கும் பென்ஷன் உள்ளிட்ட சில சலுகைகள், துணை வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு இப்போது கிடைப்பதில்லை. இந்த இணைப்பின் மூலம் அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கக்கூடும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சில மாநில அரசுகளும் இந்த இணைப்பை எதிர்க்கின்றன. உதாரணமாக, கேரளா.

ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் என்பது கேரளாவின் ஒரு முக்கியமான வங்கி. மாநிலம் முழுக்க கிளைகளுடன் செயல்படும் இது, அந்த மாநிலத்தின் அடையாளமாகவே இருக்கிறது. ‘‘இதை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டால் எங்கள் அடையாளம் அழிந்துவிடும். கேரள மக்களுக்கு இதில் கிடைக்கும் முக்கியத்துவம் பறிபோய்விடும்’’ என்பது கேரளாவின் வாதம். எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், இணைப்பில் வேகம் காட்டுகிறது மத்திய அரசு.

இனி செல்லாது!
எந்த நியூஸையும் பயனுள்ளதாக்கி விடுவதில், மோசடிப் பேர்வழிகளை மிஞ்ச ஆளில்லை. டெல்லியைச் சேர்ந்த சௌரவ், ரிஷி நெருலா என்ற இரண்டு கால் சென்டர் அதிகாரிகளை போலீஸ் கைது செய்துள்ளது. காரணம், இந்த ஸ்டேட் வங்கி இணைப்பு விவகாரம்தான். ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் அப்பாவிகள் பலருக்கு போன் செய்து, ‘‘உங்கள் பேங்கை ஸ்டேட் பேங்குடன் இணைக்கப் போவதால், உங்களுடைய பழைய டெபிட் கார்டு செல்லாது. புது கார்டு தரப் போகும் அதிகாரிகள் நாங்கள்’’ எனச் சொல்லி, கார்டு விவரங்களைத் திருடி பணத்தை அபகரித்திருக்கிறார்கள் இவர்கள்.

- அகஸ்டஸ்