நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்

‘இ’ for இலை, தழை

நான் உலகம் முழுக்க பயணித்திருக்கிறேன். புல்லின் மேலிருக்கும் பனித்துளியை மட்டும் ரசிக்க மறந்துவிட்டேன்
- தாகூர்



World Trade Centreல் இருந்து நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயருக்கு டாக்ஸியில் கிளம்பினோம். நடிகர் கமல்ஹாசன், ஜோதிகாவுடன் ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ என்று ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பாடியபடி நடந்து சென்ற சாலைதான், நியூயார்க்கின் பிரசித்தி  பெற்ற டைம்ஸ் ஸ்கொயர்.

உலகத்தில் உள்ள அத்தனை மொழி பேசும் மக்களையும் ஒரே சாலையில் சந்திக்க முடியுமா? பள்ளத்தாக்கு முழுக்க பூ பூத்ததைப் போல் அத்தனை முகங்களிலும் இனம் புரியா புன்னகையையும், உற்சாகத்தையும் தரிசிக்க முடியுமா? முடியும் என்றால் நீங்கள் டைம்ஸ் ஸ்கொயருக்கு செல்ல வேண்டும்!

வாழ்க்கை எப்பொழுதும் விசித்திரமானது. வெவ்வேறு மனித முகங்கள் பொருத்திய கம்பளங்களை அது தினமும் நம் முன் விரித்துக்கொண்டே இருக்கிறது. இருபுறமும் வானுயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே டைம்ஸ் ஸ்கொயர் வீதியில் மக்களுடன் மக்களாய் நடந்து செல்கையில், ஏனோ என் மனதில் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நடந்து சென்றது ஞாபகம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

‘எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உன் மானுட பரப்பை!
என் குலம்! என் இனம்! என்றுனை
தம்முன் ஆழ்த்திய மக்கள் பெருங்கடல்
பார்த்து மகிழ்ச்சி கொள்!
அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!’

என்ற பாரதிதாசனின் வரிகளை அசை போட்டபடி நடந்தேன். ‘‘இதுதான் எம்பயர் ஸ்டேட் பில்டிங். உலக அதிசயத்துல ஒண்ணு’’ என்று சுதாகர் சொல்ல, நாங்கள் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் உச்சிக்கு லிப்ட்டில் ஏறிக் கொண்டிருந்தோம். மேலேயிருந்து பார்க்கையில் மேக மூட்டத்திற்கு நடுவில் நியூயார்க் புள்ளி புள்ளியாய்த் தெரிந்தது.

‘இத்தரை கொய்யாப்பிஞ்சு! நாமதில் சிற்றெறும்பு’ என்று மீண்டும் பாரதிதாசனின் வரிகளே மனதிற்குள் வந்தன. இருட்டும் வரையில் டைம்ஸ் ஸ்கொயரில் திரிந்துவிட்டு, பென் ஸ்டேஷன் (penn station) வந்தடைந்து நியூஜெர்ஸி செல்ல ட்யூப் ரயிலைப் பிடித்தோம். ரயில் பெட்டி முழுக்க குஜராத்திகள், பஞ்சாபிகள், தெலுங்கர்கள், தமிழர்கள் என ஒரே இந்திய வாசம்.

‘‘இன்னைக்கு சண்டே என்பதால் கூட்டம் ரொம்ப கம்மி. வீக் டேஸ்ல இன்னும் அதிகமா இந்தியர்கள் வருவாங்க’’ என்றான் ஹரி. நடுவில் ஒரு நீண்ட பாலம் வர, ‘‘இப்ப நம்ம ட்ரெயின் கடலுக்கு நடுவுல போய்க்கிட்டிருக்கு’’ என்றான் சுதாகர். ‘‘எப்படிடா?’’ என்றேன். ‘‘ரெண்டு பக்கமும் ட்யூப் வெச்சு, ட்யூப்புக்குள்ள ட்ரெயின்ல போய்க்கிட்டு இருக்கோம்’’ என்று ஹரி சொன்னதும் நான் தொழில்நுட்பத்தை வியந்தேன்.

அடுத்த பத்தாவது நிமிடம் சொல்லி வைத்தாற் போல அந்த அதிசயம் நடந்தது.  பெட்டியில் இருந்தவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் ஒரு பிளாஸ்டிக் கப்பைத் திறந்து அதற்குள்ளிருந்த இலை, தழைகளை சாப்பிட ஆரம்பித்தார்கள். ‘‘என்னடா இது?’’ என்றேன் சுதாகரிடம். ‘‘ஸ்பின்னிச் சாலட்’’ என்றான். ‘‘அப்படின்னா?’’ ‘‘நம்ம ஊருல பசலைக் கீரை கிடைக்கும்ல... அதுமாதிரி!’’

‘‘இதை எதுக்கு சாப்பிடறாங்க?’’ ‘‘இதுதான்டா இங்க எல்லாருக்கும் டின்னரு. நான் கூட டெய்லி நைட் இதைத்தாண்டா சாப்பிடுறேன்’’ என்றான் ஹரி. ‘‘வீட்ல சமைக்கிறது இல்லையா?’’ என்றேன். ‘‘சமையலா? உன்னை மாதிரி இந்தியாவுல இருந்து யாராவது கெஸ்ட் வந்தாதான் சமையல். எல்லார் வீட்லேயும் ரெடிமேட் சப்பாத்தி வாங்கி அடுக்கி வெச்சிடுவோம். சூடு பண்ணி ஊறுகாயோ, டொமாட்டோ சாஸோ, தயிரோ தொட்டுக்கிட்டு சாப்பிட வேண்டியதுதான்’’ என்று சொல்லும்போதே ஹரியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தன.

‘‘அடப்பாவி!’’ என்றேன். ஹரி நன்றாக சாப்பிடக் கூடியவன். சென்னையில் அவன் அம்மா அவனை ஊட்டி ஊட்டி வளர்த்ததெல்லாம் இங்கு வந்து இலை, தழைகளைச் சாப்பிடத்தானா என்று நினைக்கையில் மனது கஷ்டப்பட்டது. ‘‘இதுவாவது பரவாயில்லை. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் வொய்ஃபும் வொர்க் பண்றதுனால மூணு வேளையும் வீட்ல தயிர் சாதம்தான். அதுல ஒரு காமெடி கேளு...’’ என்றான் சுதாகர்.

‘‘சொல்லுடா’’ என்றேன். ‘‘இங்கு ஒவ்வொரு ஆபீஸ் கேன்டீன்லேயும் நாலஞ்சு மைக்ரோவேவ் அவன் இருக்கும். லஞ்ச் டைம்ல அவங்கவங்க கொண்டு வந்த சாப்பாட்டை வரிசையில நின்னு அவன்ல வெச்சு சூடு பண்ணி சாப்பிடுவாங்க...’’ ‘‘சரி, அதுக்கென்ன இப்போ?’’ என்றேன். ‘‘நம்ம தயிர் சாத ஃப்ரெண்ட் இருக்கான்ல, அவன் அந்த அவன் முன்னாடி வந்து நின்னா  மட்டும் அரை மணி நேரம் எடுத்துப்பான். எல்லாரும் சத்தம் போடுவாங்க.

ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கறான்னு நம்ம தமிழ் பசங்க எல்லாம் சேர்ந்து ஒருநாள் கண்டுபிடிச்சுட்டாங்க. அவனோட வொய்ஃப் டெய்லி ஒரு டிபன் பாக்ஸ்ல தண்ணியில ஊற வெச்ச அரிசியையும், இன்னொரு கப்ல தயிரும் கொடுத்தனுப்புவாங்களாம். இவன் அந்த அரிசியை அவன்ல வேக வெக்கறதுக்குத்தான் அவ்வளவு நேரம்’’ என்று சுதாகர் சொல்லி சிரித்தான். எனக்கு நம் இளைஞர்கள் இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்கு வந்து எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தமாக இருந்தது.

நியூஜெர்ஸியில் இறங்குவதற்கு முன்பு திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் ஒரு இந்திய இளம் பெண், இலை தழைகளை மென்று கொண்டிருந்தாள். கஷ்டப்பட்டு அவள் தொண்டைக்குள் அனுப்பிக்கொண்டிருந்தது இலை மட்டுமல்ல, டாலராகவும் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். நம் இளைஞர்கள் இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்கு வந்து எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தமாக இருந்தது.

-ஓவியங்கள்: மனோகர்

(பறக்கலாம்...)