குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

செர்னோபிலின் குரல்கள் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
(எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002. விலை: ரூ.300/- தொடர்புக்கு: 99425 11302) ‘இனி நீ தேர்வு செய்ய வேண்டியது என்ன? வாழ்வா, சாவா? நல்லாசியா, சாபக்கேடா? நீயும் உன் சந்ததியும் வாழ்ந்திட, வாழ்வையே தேர்வு செய்!’ என விவிலியத்தில் ஒரு அர்த்தமுள்ள வசனம் வரும். ‘செர்னோபிலின் குரல்கள்’ சொல்ல வருவதும் அதையே. அணுஉலைகளின் பத்திரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பெருகி வழிகின்றன.



‘ஆக்கபூர்வ காரியங்களுக்குத்தான் அணுசக்தி என்பது ஒரு மாயை’ என இதில் தெளிவாகிறது. ஓய்ந்துபோன கூடங்குளம் போராட்டம், புதிய அணுஉலைகளுக்கு அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி இப்போது செய்துகொண்ட ஒப்பந்தம் என நெருக்கடியான ஒரு சூழலில், உலகை உலுக்கிய இந்தப் புத்தகம் தமிழில் வெளிவருவது நெற்றிக்கண்ணைத் திறப்பது போன்றதாகும். செர்னோபில் அணுஉலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி அனுபவங்கள், பட்ட துயரம், பயங்கர நிமிடங்களை அவர்களின் வார்த்தைகளிலே படிக்கிறபோது, அணுவைப் பற்றி நாம் கருதி வந்தவை அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. ஸ்வெட்லானா உலக மக்களுக்கு அளித்த கொடை இந்தப் புத்தகம். 2015ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த நூலிற்காக ஸ்வெட்லானா பெற்றுள்ளார்.

சர்வே

இந்தியா அமைதிப் பூங்காவாக இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு பெரும் கவலையோடு ‘சாரி, அப்படியெல்லாம் இல்லை!’ என பதில் சொல்கிறது ‘GLOBAL PEACE INDEX’ என்ற சர்வே. உலகின் 163 நாடுகளில் அமைதி எந்த அளவுக்கு நிலவுகிறது என இதில் கணக்கெடுத்தார்கள். தனிநபர் பாதுகாப்பு, பொது இடங்களில் பாதுகாப்பு, உள்நாட்டு சமூக நிலவரம், ராணுவம் எந்த அளவுக்கு பிஸியாக இருக்க நேர்கிறது என எல்லாவற்றையும் கணக்கிட்டு இந்தியாவுக்கு 141வது ரேங்க் கொடுத்திருக்கிறார்கள்.



ஐஸ்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, நியூசிலாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் அமைதியான முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவுக்குக் கீழே இருக்கும் அத்தனையும் கலவர நாடுகள். சிரியா, தெற்கு சூடான், இராக் போன்ற போர் தேசங்கள் கடைசி இடங்களில் உள்ளன. இந்தியாவின் மொத்த வருமானத்தில் நூறில் 9 ரூபாயை நாம் பாதுகாப்புக்காக செலவிடுகிறோம்.

சிற்றிதழ் Talk!

‘‘வேதாளமோ, தெறியோ விதிவிலக்குகள். அவையெல்லாம் பெரிய ஸ்டாருங்க நடிக்கக்கூடிய படம். கண்டிப்பா ‘கபாலி’ படம் வசூல் பண்ணும். இவங்கல்லாம் ஐஸ்கிரீம்ல இருக்கிற செர்ரி மாதிரி. அப்போ ஐஸ்கிரீம்? அதுதான், மற்ற 200 படங்கள். அதெல்லாம் நல்லா ஓடினாத்தான் இண்டஸ்ட்ரி நல்லா இருக்க முடியும். வருஷத்துக்கு ரெண்டு ‘தெறி’ வர முடியாது. விஜய்யோட அடுத்த படம் வர்றதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடும். அதுவரைக்கும் இண்டஸ்ட்ரி என்ன பண்ணும்? ரஜினி வருஷம் முழுவதும் நடிச்சாலும் ஒரு ‘கபாலி’தான் வரும். அதை நம்பி இண்டஸ்ட்ரி இருக்க முடியாது...’’ ‘படச்சுருள்’ ஜூன்-2016 இதழில் தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன்

அண்ணே, ஒரு விளம்பரம்...

அபார்ட்மென்ட் அருகே கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். வரிசையாக அபார்ட்மென்ட் வாசிகள் அங்கே கார், பைக் என வாகனங்களை பார்க் செய்ததும் அவர்கள் ஆட்டம் கலைகிறது. இதை பால்கனியில் இருந்து பார்க்கும் பெண் உடனே களத்தில் இறங்குகிறாள். ஒவ்வொரு அபார்ட்மென்ட்வாசியையும் அழைத்து காரை நகர்த்தச் சொல்கிறார்.

பழையபடி ஆட்டம் தொடர்கிறது. ‘இனி யாரும் அந்நியர் இல்லை’ எனும் டேக்லைனுடன் வரும் இந்த விளம்பரம் டாமினோஸ் பீட்சாவினுடையது. இதே சீரிஸில் இன்னும் சில விளம்பரங்கள் இருந்தாலும் இதை அதிகம் பேர் சிலாகிக்கக் காரணம், ஸ்லிம் ஸ்லீக்காக இதில் நடித்திருக்கும் அந்த மாடல். யாருப்பா அது? நாடே கேட்டுக் கொண்டிருக்கிறது இதை!

நிகழ்ச்சி மகிழ்ச்சி!

நடிகை சைலஜா, நீனா ரெட்டி என பல தொழில்முனைவோர்கள் இணைந்து சென்னையில் Cinema Rendezvous என்ற பெயரில் மூவி கிளப் ஒன்றைத் துவக்கியிருக்கிறார்கள். சென்னை பி.வி.ஆரில் நடந்த இதன் துவக்க விழாவில், சமீபத்தில் இந்தியா முழுக்க பேசப்பட்ட ‘சாய்ரட்’ எனும் மராத்திய மொழிப் படத்தைத் திரையிட்டனர். இயக்குநர்கள், திரை விமர்சகர்கள் எனப் பலரும் படத்தைப் பார்த்து விவாதம் செய்தனர். சனிக்கிழமை தோறும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்கும் சினிமா விவாதம் இந்த மூவி கிளப்பில் நடக்கவிருக்கிறது. குறும்பட இயக்குநர்களும் இந்த கிளப்பில் இணைந்து தங்கள் படங்களைத் திரையிட முடியும்!

டெக்டிக்!

இணையம் என்ற சொல்லோடு சேர்ந்து அறிமுகமான வார்த்தை யாஹூ. 1998 துவங்கி, 2000மாவது ஆண்டுகளில் பெருவாரியான இணைய அரட்டைகள் அந்த யாஹூவின் மெசெஞ்சர் ஆப் மூலமாகத்தான் நடைபெற்றன. முகமறியா ‘யாரோ’விடம் இன்ஸ்டன்ட்டாக hi சொல்லிப் பேசலாம் என்பதும் asl (age, sex, location) கேட்கலாம் என்பதும் யாஹூ மெசேஞ்சர் இந்தியாவில் செய்த கலாசாரப் புரட்சிகள். அப்படிப்பட்ட யாஹூ மெசெஞ்சர் சர்வீஸ் வரும் ஆகஸ்ட் 5ம் தேதியோடு நிறுத்தப்பட இருக்கிறது.

‘‘நாங்கள் இன்னும் மேம்பட்ட மெசெஞ்சர் கருவியை யாஹூ மெயிலோடு இணைத்துவிட்டோம். அதனால் இது தேவைப்படாது!’’ என யாஹூ தரப்பில் சொல்லப்பட்டாலும், உலகம் முழுவதுமுள்ள சாட்டிங் தலைமுறை, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் அளவுக்கு அப்செட்!