மறதி



சீனிவாசன்

ஆனந்த் தன் செமஸ்டர் தேர்வுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். ‘‘பேனா, ஹால் டிக்கெட், பஸ் பாஸ் எல்லாம் எடுத்துக்கிட்டியா..?’’ - அம்மா அக்கறையுடன் ஞாபகப்படுத்தினாள். ‘‘நான் என்ன குழந்தையா? வீணா என்னை டென்ஷன் பண்ணாதே!’’- ஆனந்த் கத்திவிட்டு ‘பை...’ சொல்லி புறப்பட்டான். கதவைத் தாழிட்டு உள்ளே வந்த அம்மா டி.வியை ஆன் செய்தாள். அடுத்த நொடி காலிங்பெல் கத்தியது. திறந்தாள். ஆனந்த் அசடு வழிந்தபடி, ‘‘சாரிம்மா... சயின்டிஃபிக் கால்குலேட்டர் என் டேபிள்ல இருக்கு. ப்ளீஸ்மா..!’’ எனக் கெஞ்சினான்.



‘‘இப்ப கெஞ்சு... மொதல்ல சொல்லும்போது கத்தினியே?’’ - அம்மா அதைக் கொண்டுவந்து கொடுத்தாள். ஐந்து நிமிடங்களில் மீண்டும் அழைப்பு மணி... இப்போது ஆனந்த் செல்போனை மறந்திருந்தான். ‘‘நீ பரீட்சைக்குப் போன மாதிரிதான்..!’’ - முனகிக் கொண்டே அதைக் கொடுத்தனுப்பினாள் அம்மா.

லேட்டானதால் ஆனந்த் செல்லும் பஸ்ஸில் வழக்கத்தை விட கூட்டம் அதிகம். அடித்துப் பிடித்து காலேஜை அடைந்தான். அங்கு மாணவர்கள் யாரையுமே வெளியில் காணோம். தேர்வு ஆரம்பித்து விட்டதோ! விரைந்து... உள்ளே ஓடினான். வழியில் ஹாஸ்டல் நண்பன் ரமேஷ்... ‘‘எங்கடா ஓடறே..?’’ என்றான். ‘‘எக்ஸாமுக்குதான்டா... ஏன், நீ வரலியா?’’ - ஆனந்த் கேட்டான்.
ரமேஷ் சிரித்தான்... ‘‘இன்னிக்கு ஏதுடா எக்ஸாம்? டைம் டேபிள்படி இன்னைக்கு லீவ் ஆச்சே!’’