நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்

மழையை விட கடலை விட
நதியை விட குளத்தை விட
அதிமர்மமானதும்
அதிரகசியமானதுமான நீர்
கண்ணீர்
- மாலதி மைத்ரி
(‘சங்கராபரணி’ தொகுப்பிலிருந்து...)
 


கடவுள் இறந்த இரண்டாம் நாள், அவரின் சடலத்தை அறுத்துப் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். இதயத்திற்கு பதில் அவ்விடத்தில் சிறு பள்ளமிருந்தது. அந்தப் பள்ளத்தில் சமையலறை விறகுகளின் கரும்புகையும், பெண்களின் கண்ணீர்த் துளிகளுமிருந்தன. காலம் காலமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும்போதும், துன்புறுத்தும்போதும் கடவுளின் இருப்பு கல்லறைக்கு இடம் பெயர்ந்து விடுகிறது.

சிறு வயதில் நாங்கள் அப்பா - அம்மா விளையாட்டு ஆடுவோம். எங்கள் வயதுச் சிறுமிகள் வீட்டிலிருந்து எடுத்து வந்த அகல் விளக்குகளில் மண்ணை நிரப்பி சோறு பொங்கும் அம்மாவாக நடிக்க, சிறுவர்கள் நாங்கள் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் அப்பாவாக நடிப்போம். “என்ன கொழம்புடீ வெச்சிருக்க?’’ என்று நாங்கள் கேட்க... “கத்திரிக்கா சாம்பார்’’ என்பார்கள் பயத்துடன்.

“மீன் கொழம்பு ஏன்டீ வெக்கல?’’ என்று ‘டீ’யை அழுத்திச் சொல்லி கோபப்பட்டு, இல்லாத பெல்ட்டை இடுப்பிலிருந்து உருவி அடிப்பதாய் பாவனை செய்வோம். அவர்களும் அழுவதாய் சிணுங்கி, ‘‘குடிச்சிட்டு காசே தர மாட்டேங்குறீங்க... நான் காட்டுல வெறகு பொறுக்கி வித்து சோறாக்குனேன். அதான்...’’ என்று தயக்கத்துடன் சொல்வார்கள்.  “எதிர்த்தா பேசற... முண்ட!’’ என்று அவர்கள் தலைமுடியைப் பிடித்து கன்னத்தில் அறைவோம். எங்களுக்கு அப்பன் கொடுத்து, அப்பனுக்கு பாட்டன் கொடுத்து, பாட்டனுக்கு முப்பாட்டன் கொடுத்த ‘ஆண்’ என்னும் திமிர் எங்கள் பிஞ்சுக் கைகளில் குடியேறும். நாங்கள் திமிரோடும் பெண்கள் தியாகத்தோடும் வீடு செல்ல... விளையாட்டு முடிவுறும்.

‘நம் சமூகம் தாய்வழிச் சமூகம். இனக்குழுவின் தலைவியாக பெண்ணே இருந்தாள்...’ என்று ஆய்வுகள் சொல்கின்றன. வரலாற்றின்  எந்தத் தருணத்தில், எந்த இடத்தில் பெண்ணின் கையில் இருந்து சிக்கிமுக்கிக்கல்லின் தீ பறிக்கப்பட்டு சமையல் அறையின் தீப்பெட்டி கொடுக்கப்பட்டதோ... சிறு தெய்வங்களான பெண் கடவுள்கள் பின்தள்ளப்பட்டு ஆண் கடவுள்கள் முன்னிறுத்தப்பட்டனவோ... அந்த தினத்திலிருந்துதான் ‘தியாகம்’ என்னும் இரும்புக் கம்பிக்குள் பெண்கள் தள்ளப்பட்டிருக்கக்கூடும்.

ஒவ்வொரு பெண்ணும் சமையல் உப்பிடமிருந்து விசுவாசத்தைக் கற்றுக்கொள்கிறாள். வெங்காயத்திடமிருந்து கண்ணீரைப் பெற்றுக்கொள்கிறாள். இட்லித் தட்டுகளிலிருந்து வெந்து தணியவும், ஈர விறகுகளிடமிருந்து உள்ளுக்குள் புகையவும் புரிந்துகொள்கிறாள். ஒரு சில பெண்கள் மட்டுமே இவற்றையெல்லாம் தாண்டி மிளகாயிடமிருந்து காரத்தையும், கோபத்தையும் கற்றுக் கொள்கிறார்கள், பரிமளா அக்காவைப் போல.

பரிமளா அக்கா எனக்குப் பரிச்சயமானது, மாதத் தவணை ஏலச்சீட்டு பிடிக்கும் வீட்டில்தான். என் அப்பாவைப் பெற்ற பாட்டி அப்போது காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் ஏலச்சீட்டு கட்டிக் கொண்டிருந்தார்கள். அமாவாசை அன்று ஏலம் விடுவார்கள். மாதா மாதம் அமாவாசை அன்று பாட்டியுடன் நானும் எங்கள் கிராமமான கன்னிகாபுரத்திலிருந்து காஞ்சிபுரம் சென்று வருவேன். அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அமாவாசை வந்துவிட்டால் எனக்குத் திருவிழா மாதிரி. மாலையில்தான் சீட்டு ஏலம் விடுவார்கள் என்றாலும் காலையிலேயே நானும் பாட்டியும் கிளம்பி விடுவோம். இப்போது கல்யாண மண்டபமாகி விட்ட கிருஷ்ணா டாக்கீஸில் ஏதாவது ஒரு படம் பார்த்துவிட்டு, ஸ்ரீதர் கேப்பில் எண்ணெய் மிதக்கும் அப்பளத்துடன் மதிய சாப்பாடு. பின்பு மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்குவோம். பகலிலேயே மின்சார விளக்குகளை எரிய விட்டு அம்பாரமாக தக்காளிகளையும், உருளைக்கிழங்குகளையும் குவித்து வியாபாரம் செய்யும் மார்க்கெட்டைப் பார்க்கவே அந்த வயதில் பிரமிப்பாக இருக்கும். அதற்குள் மாலையாகி விடும். சீட்டு பிடிக்கும் வீட்டிற்குச் செல்வோம்.

நான் ஒரு தூணோரம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன். கூடம் முழுக்க பத்துப் பதினைந்து பெண்கள் அமர்ந்து ஏலம் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த ஏலம் விடும் பாட்டியைப் பிடிக்கவே பிடிக்காது. ஏதாவது பேசினால், ‘‘சும்மா இருடா’’ என்று அதட்டும். நெற்றியில் பெரிய வட்டமாக குங்குமப் பொட்டு வேறு பயமுறுத்தும். அந்தச் சமயங்களில் பரிமளா அக்கா என்னை மடியில் தூக்கி வைத்துக்கொள்ளும்.

பரிமளா அக்காவிற்கு அப்போது இருபத்தைந்து வயதிருக்கும். காதில் பெரிய பெரிய வளையங்களைக் கம்மலாகப் போட்டிருக்கும். பார்க்க அழகாக இருக்கும். ஏலம் முடிந்து, ‘தள்ளு’ பணம் போக மீதி காசு வாங்கிக்கொண்டு பாட்டியும் பரிமளா அக்காவும் அருகிலிருக்கும் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

வௌவால்கள் கிறீச்சிடும் கோயில் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் அந்தப் பேச்சுக்கள் பரிமளா அக்காவின் விசும்பல் ஒலியுடன்தான் முடியும். ‘‘தெனமும் குடிச்சிட்டு வந்து அடிக்குறாரு பாட்டி. எதுக்கு எடுத்தாலும் சந்தேகம். யாராவது ஆம்பளைங்க வீட்டுக்கு வந்தா பேசக் கூடாது. தண்ணி கேட்டாக்கூட அவரேதான் கொண்டு போயி தருவாரு. வாசல்ல காய்கறிக்காரர்கிட்ட பேசுனாகூட உள்ள கூப்பிட்டு சிகரெட்டால சூடு வெப்பாரு... அதுவும் எங்க? கழுத்துக்குக் கீழ... டே குமாரு! நீ கொஞ்சம் திரும்பிக்க...’’ நான் திரும்பிக்கொள்வேன். “அய்யய்யோ’’ என்று பாட்டியின் குரல் கேட்கும்.

“தெனம் தெனம் செத்துப் பொழைக்குறேன்’’ என்று பரிமளா அக்காவின் அழுகை அதிகரிக்கும். “என்ன பண்றது... பொண்ணா பொறந்துட்டம். பொறுத்துப் போ’’ என்று பாட்டியின் குரல் ஆறுதல் சொல்லும். நான் அந்தப் பக்கம் திரும்பலாமா வேண்டாமா என யோசித்து கொஞ்ச நேரம் கழித்துத் திரும்புவேன். “போலாமாடா?’’ என்று கண்ணீரைத் துடைத்தபடி பரிமளாக்கா லேசாகச் சிரிக்கும்.

பரிமளா அக்காவின் கணவர் ஒரு தனியார் வங்கியில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஓரிரு முறை அவர்கள் இருவரும் சைக்கிளில் செல்லும்போது பார்த்திருக்கிறேன். கறுப்பாக பெரிய மீசையுடன் பரிமளா அக்காவின் அழகிற்குப் பொருத்தமில்லாமல் இருப்பார். ‘அடுத்த முறை பரிமளா மாமா சைக்கிளில் செல்லும்போது யாருக்கும் தெரியாமல் கல்லால் அடித்துவிட்டு ஓடிவிட வேண்டும்’ என்று நினைத்துக் கொள்வேன். எங்களை எங்கள் ஊர்ப் பேருந்தில் ஏற்றிவிட்டு பரிமளாக்கா விடைபெறும். திரும்பி வரும்போது எதுவும் பேசாமலேயே பாட்டி மௌனமாக வருவார்கள்.

அடுத்த அமாவாசை சீட்டிற்கு நாங்கள் சென்றபோது பரிமளா அக்காவைக் காணவில்லை. எல்லோரும் அரசல்புரசலாகப் பரிமளாக்காவைப் பற்றிப் பேசிக்கொண்டது காதில் விழுந்தாலும் என்ன விஷயமென்று எனக்குப் புரியவில்லை. பாட்டியிடம் கேட்டதற்கு, ‘‘அடுத்த மாசம் வரும்டா’’ என்று மட்டும் சொன்னார்கள்.

‘சின்னப் பையன்... பயந்துவிடுவான்’ என்று அன்று அவர்கள் என்னிடம் மறைத்த விஷயம் ஓரிரு நாட்களில் வேறொரு உறவுக்காரப் பெண் மூலம் வெளி வந்தது. பரிமளாக்கா புருஷனின் தலையை வெட்டி விட்டதாம். வெட்டிய தலையை இட்லி குண்டானில் வைத்து எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் சரண்டராகி விட்டதாம். கேஸ் நடக்கிறதாம். ‘‘உண்மையா?’’ என்று பாட்டியிடம் கேட்டேன். எதுவும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தார்கள்.

காலம் காலமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும்போதும், துன்புறுத்தும்போதும் கடவுளின் இருப்பு கல்லறைக்கு இடம் பெயர்ந்து விடுகிறது.

ஒவ்வொரு பெண்ணும் சமையல் உப்பிடமிருந்து விசுவாசத்தைக் கற்றுக்கொள்கிறாள்.வெங்காயத்திடமிருந்து கண்ணீரைப் பெற்றுக்கொள்கிறாள்.

(பறக்கலாம்...)