சண்டையே போடத் தெரியாத புரூஸ் லீ!



ஜி.வி.பிரகாஷுக்கு இது புத்துணர்ச்சி வருடம். இசையமைப்பாளராக இருந்த ஜி.வி, நடிப்புக்கு வந்து ஹாட்ரிக் வெற்றிக்கு மிக அருகில் காத்திருப்பது ஆச்சரியமான நம்பிக்கை வரலாறு. கோடம்பாக்கத்தின் வெற்றி ஃபார்முலா லிஸ்ட்டில் இருக்கிற ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’ கிட்டத்தட்ட ரெடி. ‘நாளைய இயக்குநராக’ பளிச்சென வெளியில் வந்த பிரசாந்த் பாண்டியராஜ்தான் இயக்கம்! 23தான் வயது... ‘புரூஸ் லீ’ பற்றிப் பேசுவதெல்லாம் கலகல!



‘‘சந்தோஷமா உங்களை வச்சுக்க முடிகிற காமெடிப் படம்தான் ‘புரூஸ் லீ’. ெபாதுவா ‘காமெடிதானே’னு யாராவது ஈஸியா சொல்லிட்டா நான் கொந்தளிச்சிடுவேன். நிஜமா அதுதான் கஷ்டம். இப்பவும் சார்லி சாப்ளின்தான் உலகின் மிகப் பெரிய காமெடியன். அவருடைய படைப்புகளில் சிரிக்கச் சிரிக்க நமக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்திருக்கார். சண்டையே போடத் தெரியாத ஒருத்தனுக்கு - பயந்தாங்கொள்ளினு யாராலும் அடையாளம் காணப்படுகிற ஒருத்தனுக்கு ‘புரூஸ் லீ’னு ஒரு பெயர் வச்சா எப்படியிருக்கும்?

ஆக்‌ஷன் மாதிரி ஆரம்பிச்சு கலகலனு காமெடியில் பயணமாகும். என்னவோ நடக்கப்போகுது, நடக்கப்போகுதுனு போய்க்கிட்டு இருக்கும். திருச்சியில் ஒரு கடையில் வேலை செய்துக்கிட்டு இருக்கிற பையன் ஒரு பிரச்னையில் சிக்கிடுறான். அவனுக்கு ஒரு புரூஃப் கிடைக்குது. அதை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்க்கணும். அவன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கொண்டு போய் சேர்க்கறான்னு கதை போகும்.

இதில் ஏதாவது புதுசா தெரியுதா உங்களுக்கு... ஒண்ணுமில்லைதானே! பழைய சீன் மாதிரி உங்களுக்குப் பட்டாலும், அது முடியும்போது உங்களிடம் நிச்சயம் புன்னகையை வரவழைக்கும். நாமெல்லாம் வீட்டுல ஜோக்கடிச்சு சிரிக்கிறோமே... நமக்கு யாராவது சொல்லியா கொடுத்தாங்க? எதையும் கஷ்டம்னு நினைச்சாதான் கஷ்டம்... நாமளும் காமெடி பண்ணுவோம் பாஸ்னு இறங்கிட்டா அதுதான் காமெடி. நமக்கு வரும்னு எதையும் நம்பிட்டா நம்ம கைக்கு அது வரும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!’’



‘‘எப்படி ஜி.வி.பிரகாஷ்..?’’
‘‘எனக்கு இந்தப் படத்தில் நடிக்க பெரிய ஹீரோ வேண்டாம். அவங்களுக்கு அது சரியா வராது. நடிக்கவும் மாட்டாங்க. அடையாளமே தெரியாம புதுசா வர்றவங்களும் இதைச் செய்ய முடியாது. நடுவில் உள்ளவர்கள் வேணும். இதில் எனக்கு பாந்தமாகப் பொருந்துவார்னு தெரிந்தது ஜி.விதான். ‘என்னய்யா, உன்னை அத்தனை பேர் ரெகமெண்ட் பண்றாங்க. வந்து கதையைச் சொல்லிட்டுப் போய்யா’னு கூப்பிட்டார். போய் கதையைச் சொன்னேன்.

இரண்டாவது யோசனையேயில்லை. உடனே, ‘சரி... பண்ணுவோம்’னு சொல்லிட்டார். இந்த ‘செட்டே’ ரொம்பக் குதூகலமா இருக்கும். அந்தக் குதூகலம் படத்திலும் இருக்கும். நகைச்சுவை என்பது கடுமையா சாதகம் செய்பவர்களால் மட்டுமே முடியும். ஆனா, ஜி.வி.க்கு அது அவ்வளவு அருமையா வருது. ஒரு நல்ல காமெடி படம் உங்களுக்கு என்ன சந்தோஷம் தருமோ, அதெல்லாம் இது தரும். ஜி.வி.பிரகாஷ் சண்டை போடத் தெரியாத ‘புரூஸ் லீ’யை வச்சு, மக்களோட அத்தனை வேதனைகளுக்கும் மருந்து பூசி, களிம்பு தடவியிருக்கோம்!’’

‘‘படத்தோட நாயகி கீர்த்தி கர்பந்தா...’’
‘‘தமிழுக்கு மட்டுமே புதுசு. தெலுங்கு, கன்னடம், இந்தினு 20 படத்திற்கு மேல் பின்னியிருக்காங்க. வீட்டு வரவேற்பறையில் ஃபிலிம்ஃபேர் விருது காட்சிக்கு இருக்கு. ‘தில்’லான ஒரு பொண்ணு கேரக்டர். அவ்வளவு சரியா செய்திருக்காங்க. இந்த படத்திற்கு, ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’னு பெயர் வச்சோம். பர்மிஷன் கிடைக்கலை.

சரினு ‘புரூஸ் லீ’னு வச்சிட்டோம். முனீஸ்காந்த்தான் காமெடி வில்லன். அவரோட அலப்பறை படத்தில் வேற தினுசில் இருக்கும். வில்லன் ஹாலிவுட் படத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி காய் நகர்த்துவார். ஹீரோ தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பார்த்து அதன்படி நடப்பாரு. ரொம்ப வேடிக்கை. நடிப்போட, ஜி.வி போட்டுக் கொடுத்திருக்கிற பாடல்கள் நாலும் தேன்!’’



‘‘குறும்படங்கள் செய்திட்டு சினிமாவுக்கு வர்றது சுலபம்தானா?’’
‘‘இப்ப நிறைய அது மாதிரி வந்துட்டாங்களே..! ஆனா, நான் அது மட்டுமே போதாதுனு நினைச்சேன். அனுபவம் தேடிக்கணும்னு ‘நாளைய இயக்குநர்’ நடுவரா இருந்த டைரக்டர் பாண்டிராஜ்கிட்டயே சேர்ந்தேன். சம்பளமும் கொடுத்து, பயிற்சியும் தந்தவர் என் குரு. ‘என்னங்க, குரு பெயரையே வச்சுக்கிட்டிருக்கீங்க’னு கேட்கறாங்க.

அப்பாவின் பெயரும் குரு பெயரும் ஒன்றாக அமைந்தது சந்தோஷம்தானே! மாதா, பிதா, குரு, தெய்வம்னுதானே வரிசையே போகுது. இந்தப் படத்தை முடிச்சதும் தயாரிப்பாளர்களிடம் இன்னொரு கருத்தான கதையைச் சொன்னேன். அவர்களும் பிடித்துப் போய் ட்விட்டரில் ‘எங்கள் யூனிட்டின் அடுத்த படம்’ என அந்தக்கதையை மனமுவந்து அறிவித்துவிட்டார்கள். அடுத்த தடவை கருத்தோடு உங்களை சந்திக்கிறேன் பிரதர்!’’

- நா.கதிர்வேலன்