கலக்கல் கலர்ஃபுல் வேடந்தாங்கல்!



பறவைகள் சரணாலயம் என்றாலே அடுத்த வார்த்தையாக வேடந்தாங்கல் வந்து விழும். சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஸ்பாட் அத்தனை பாப்புலர். மரங்களும் புதர்களும் அடர்ந்த ஒரு ஏரியில் இருக்கும் சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கடந்த நான்கு வருடங்களாக வறண்டு, வெறிச்சோடிக் காணப்பட்டது. நவம்பர், டிசம்பரில் பெய்த பெருமழை மக்களுக்குத் தொல்லையாக அமைந்தாலும், வேடந்தாங்கலுக்கு அதுதான் நீர்வளம் தந்திருக்கிறது. விளைவு, அரிதும் பெரிதுமான வெளிநாட்டுப் பறவைகள் குவிந்து விட்டன, சரணாலயத்தில்!



‘‘வேடந்தாங்கலில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை சீஸன். இங்கு நிலவும் இதமான தட்பவெப்ப நிலை, பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஏற்றது. எனவே, ஆஸ்திரேலியா, மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இங்கு வரும். காஷ்மீரின் குளிர் தாங்காமலும், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியின் உறைபனியிலிருந்து தப்பிக்கவும் நிறைய பறவைகள் வந்து போகும்.

ஆனால் கடந்த நான்கு வருடங்களாக இங்கு பறவைகளின் வரத்து குறைவுதான். சரியான மழை இல்லை. நீர்வரத்து மிகவும் குறைவு. அதனால் சென்ற வருடம் வெறும் இரண்டாயிரம் பறவைகள்தான் வந்தன. இந்த வருடம்தான் வண்ணமயமான பழைய வேடந்தாங்கலைப் பார்க்க முடிகிறது!’’ - புத்துணர்ச்சியுடன் பேசத் துவங்கினார் வன அதிகாரி சிவக்குமார்.

‘‘இந்த வருடம் இதுவரை 85 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.  நத்தைக் கொத்தி நாரைகள் (Open Billed Stork) என்னும் பறவை இனத்தில் மட்டுமே 30 ஆயிரம் வந்துள்ளன. அத்துடன், ஆஸ்திரேலிய பறவையான சாம்பல் நிற கூழைக்கடா (Grey Pelican) 20 ஆயிரம் வந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் தவறாமல் வரும் இலங்கைப் பறவையான வெள்ளை அரிவாள் மூக்கன் (White Ibis) 20 ஆயிரம் வந்துள்ளன.

காஷ்மீரில் இருந்து சாம்பல் நாரை (Grey hornbill) மூவாயிரமும், மியான்மர் நாட்டில் இருந்து பாம்புத்தாரா (Snake bird / darter) இரண்டாயிரமும் வந்துள்ளன. அத்துடன் பலவகை நாரைகள், ஊசிவால் வாத்து, தட்டை வாயன், நீர்க்கோழி, புள்ளி மூக்கு வாத்து, மீன்கொத்திகள், கொண்டலாத்தி, மரங்கொத்திகள், ஆந்தைகள், ஆள்காட்டிகள், கருஞ்சிட்டு, கருப்பு வெள்ளை சிட்டு, கதிர்குருவிகள், வால்காக்கை, சின்னான்கள், குக்குறுவான்கள் போன்றவையும் வந்துள்ளன.



வரும் விருந்தாளிகளுக்கு வசதியாக ஆறு மாதங்களுக்கு முன்பே 200க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளோம். ஏரியைத் தூர் வாரி சுத்தப்படுத்தி வைத்தோம். தற்போது 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், மரக்கிளைகளில் கூடு கட்டி குஞ்சு பொரித்துள்ளன. 30 ஆயிரம் குஞ்சுகள் மரக் கிளைகளில் தாய்ப் பறவைகளுடன் தங்கியுள்ளன. இந்தப் பருவத்தில் ஒரு பறவையையும் அந்த இனத்தின் குஞ்சுகளையும் ஒருசேர இங்கு பார்க்கலாம் என்பதே வேடந்தாங்கலின் சிறப்பு. தற்சமயம் ஏரி முழுவதுமே பறவைகளால் நிரம்பி வழிகின்றன. இந்தப் பறவைகள், ஏரியின் அருகில் உள்ள குட்டை மற்றும் சிறிய நீர்நிலைகளில் சந்தோஷமாக இளைப்பாறுகின்றன!’’ என்றார் அவர்.

பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் பறவைகளைப் போலவே உற்சாகமாக வலம் வரும் சிறுவர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ‘‘இந்த பேர்ட்ஸ் எல்லாம் எந்த ஃபிளைட்ல வந்துச்சி டாடி?’’ என்று அப்பாவிடம் பறவைகள் பற்றிப் படித்துக் கொண்டு இருந்த சிறுவன் வருணிடம் பேசினோம்...



‘‘இந்த பேர்ட்ஸை எல்லாம் நான் புக்ஸ்லதான் பாத்திருக்கேன். இப்ப நேர்ல பாக்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதோ பாருங்க அங்கிள்... ஜோடிப் பறவைங்க ரெண்டு அதோட குஞ்சுகளுக்கு பறக்க கத்துக் கொடுக்குது!’’ என்று வருண் சரணாலயத்தை நோக்கி கை நீட்டினான். சரணாலயம் முழுவதும்  ஆயிரக்கணக்கான பறவைகள். அங்கும் இங்கும் ரசித்தபடி விளையாடும் சிறுவர்கள். வாய் பிளந்து நிற்கும் வெளிநாட்டினர். சென்னைக்கு அருகில் இப்படி ஒரு சொர்க்கமா?

- புகழ் திலீபன்