இது சனங்களின் கதை!



குக்கூ இயக்குநரின் ‘ஜோக்கர்’ லீட்...

ஒரே ஒரு படம்தான்... ‘குக்கூ’. பார்வையற்றவர்களின் பரிதாப உலகத்தில் நுழைந்துவிடாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கையின் சில கணங்களை எடுத்துக்காட்டியதில் ராஜுமுருகன் எழுதியது புதுக்கவிதை. அடுத்து அவரது ‘ஜோக்கர்’ ரிலீஸுக்கு ரெடி. அப்படியே அதிர அதிர சிரிப்பின் ஊடான உரையாடல்.

‘‘ஜோக்கர்... டைட்டில், போஸ்டர், பாடல்கள்னு எல்லாமே கவனத்தை ஈர்க்குது. என்ன மாதிரி படம் இது?’’
‘‘பத்திரிகையாளனா நான் நிறைய எழுதினது சமூக, அரசியல் நையாண்டிக் கட்டுரைகள்தான். கடந்த பதினைஞ்சு வருஷமா வேலை, வாசிப்பு, பயணம்னு எல்லாமே கவனிக்கப்படாத ஜனக்கூட்டத்தை நோக்கித்தான் இழுத்துட்டுப் போகுது. நிறைய இயலாமைகளுக்கு நடுவுல சின்னச் சின்ன பங்களிப்புகளை பண்ணணும்னு ஒரு நினைவு துரத்திக்கிட்டே இருக்கு. ‘ஜோக்கர்’ அப்படி ஒரு பங்களிப்பு!



காமெடிகளை எல்லாம் சீரியஸாகவும்... சீரியஸ்களை எல்லாம் காமெடியாகவும் பார்த்துப் பழகிட்ட சமகால சமூகத்தைப் பத்தின கதை. அதனால இது செம காமெடியான படம். தர்மபுரி பக்கம் பாப்பிரெட்டிபட்டிங்கிற கிராமத்துல இருக்கிற மன்னர்மன்னன்ங்கிற கடைக்கோடி மனிதனோட வாழ்க்கைதான் கதை. அப்புறம் அவன் வாழ்க்கைக்குள் வருகிற மூணு பேர். பொன்னூஞ்சல்னு 60 வயசு ஆளு, போட்டோக்கள்ல ஜெயகாந்தன் மாதிரியே நிக்கிறார்ல... அவர்தான். ரொம்ப அறச்சீற்றம் கொண்டவர். அதனால்தான் ஜே.கே ஃபீலுக்கு அவரை மாத்தினோம். அப்புறம் மல்லிகா, இசைனு ரெண்டு பெண்கள். இந்த நாலு பேரும் நாமதான்.

பழமலய் அய்யாவோட ஒரு கவிதைத் தொகுப்புக்கு ‘சனங்களின் கதை’னு பெயர் வச்சிருப்பார். இந்த ‘ஜோக்கர்’ சனங்களின் கதைதான். இதை முழுச் சுதந்திரத்தோட சினிமாவாக்க முதல் காரணம், என் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும் எஸ்.ஆர்.பிரபுவும்தான்!’’

‘‘ ‘ஜிகிர்தண்டா’ சோமசுந்தரம்தான் ஹீரோவா..?’’
‘‘சோமு இப்ப திருவண்ணாமலை தாண்டி விவசாய நிலத்துக்கு நடுவுல சின்னதா ஒரு வீட்ல தங்கியிருக்கார். ‘ஏங்க, வேலையை பூரா சென்னையில வச்சுக்கிட்டு இங்க வந்து தங்கியிருக்கீங்க?’னு கேட்டா, ‘இங்க பக்கத்துல மருதம்னு ஒரு ஆல்டர்நேட்டிவ் ஸ்கூல் இருக்கு. வழக்கமான கல்வி முறையைத் தாண்டி பிள்ளைகளுக்கு இயற்கையைப் பத்தியும், வாழ்க்கையைப் பத்தியும் புரிதல் ஏற்படுத்துற பள்ளிக்கூடம். என் பொண்ணை இங்கதான் சேர்த்திருக்கேன். அதுக்காகத்தான் இங்கயே வந்திட்டோம். இங்கயே இயற்கை விவசாயம் பண்ணப் போறோம்’ங்கிறார். அப்படி ஒரு கலைஞன்.

இந்தப் படத்தில் வர்ற பொன்னூஞ்சல் கேரக்டருக்காகத்தான் அவரைக் கூப்பிடப் போனேன். இப்படி சில பல உரையாடல்களுக்குப் பிறகு மன்னர் மன்னன் இவர்தான்னு வரச் சொல்லிட்டேன். அடுத்து மு.ராமசாமி அய்யா... இரண்டாவது கதை நாயகர். அப்படி ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். ரம்யா, காயத்ரினு ரெண்டு பெண்கள்... நடிப்புக்கான நல்ல நாயகிகள் தேடுவோருக்கு இவர்களைப் பரிந்துரைக்கிறேன். அப்புறம் எழுத்தாளர்கள் பவா.செல்லதுரை, ‘சோளகர் தொட்டி’ சா.பாலமுருகன், பத்திரிகையாளர்கள் மை.பா.நாராயணன், அருள் எழிலனும் நடிச்சிருக்காங்க!’’

‘‘பாடல்கள் அழகா, ஃப்ரெஷ்ஷா இருக்கு. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எப்படி?’’
‘‘இந்த ஆல்பம்தான் ஷான் ரோல்டன். இதுதான் அவரோட உண்மையான வெளிப்பாடு. ஒரு விஷயம் சொல்லணும்... பயணங்கள்ல கேட்கிற சில குரல்கள் நம்ம கூடவே வந்திடும் இல்லையா! எலெக்ட்ரிக் டிரெயின்ல சமோசாவை ‘சம்சே... சம்சே’னு வித்த குரல், ரோட்டோரத்துல நின்னு ‘ஸ்டாண்ட எடுத்து விடுப்பா’னு கத்துன குரல், நெடுஞ்சாலையை ஒட்டின கிராமத்து மந்தைல, ‘வந்தானய்யா... சூரனும் வந்தானய்யா’னு கூத்துல உச்சஸ்தாயியில் பாடின குரல்...



மலையடிவாரக் கோயில்ல ‘தில்லையம்பலம் திருவுருவம் காட்டுது’னு ஜோசியம் சொன்ன மூதாட்டியின் குரல்... மேலெல்லாம் குரங்குகள் விளையாட கோட்டை மதில் சுவர் மேல உட்கார்ந்துட்டு சூஃபி பாடல் பாடின கரகரத்த ஒரு குரல்... தேடிப் போனா அவ்வளவு குரல் கிடக்கு இந்த மண்ணுல. இந்தப் படம் முழுக்க இப்படிக் குரல்களை பயன்படுத்துவோம்னு ஷான் சொன்னார். ஷானும், யுகபாரதியும் தர்மபுரிக்கு வந்து பாடகர்களை சந்திச்சாங்க.

‘மியூசிக்கோட ஆன்மா இங்கதான் சார் இருக்கு’னு சொல்லிட்டு இவங்களையே எல்லாப் பாடல்களிலும் பயன்படுத்தியிருக்கார் ஷான். பெருமாள்னு ஒரு கூத்துக் கலைஞர், அறந்தை பாவானு அரசியல் மேடைப் பாடகர், முருகவேல், சுந்தரய்யானு வீதி நாடகப் பாடகர்கள், ராணியம்மானு நடவுப் பாட்டு பாடுறவங்க... இவங்கல்லாம் பாடியிருக்காங்க. ஒளிப்பதிவாளர் செழியன், பிரத்யேகமாக கதையின் ஊடே பயணம் போயிருக்கார்.’’

‘‘இப்படியான சினிமாவேதான் பண்ணணும்னு நினைக்கிறீங்களா?’’
‘‘சினிமா இந்த வாழ்க்கையோட ஒரு சின்ன பகுதி. நிறைய விஷயங்கள் மீதி இருக்கு. நம்மாழ்வார் செத்துப் போயிட்டார். ஆனால், அவர் செய்த வேலை எத்தனை கரங்களை உருவாக்கியிருக்கு. யாரோ ஒரு சின்னப் பொண்ணு ‘குடிக்காதீங்க சார்’னு பலர் கால்ல விழுது... யாரோ ஒரு மனுஷன் ‘நீர் வளத்தைக் காப்போம்’னு சைக்கிள்லயே தமிழ்நாடு முழுக்க சுத்துறார்.

எங்கேயோ டெல்லியில பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பொண்ணுக்காக, ஒரு வாரம் சாப்பிடாமல் சில மாணவர்களும், மாணவிகளும் உண்ணாவிரதம் உட்கார்றாங்க. எனக்காகவும் உங்களுக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவங்களால முடிஞ்சதை செய்யிறதாலதான் இந்த உலகம் இன்னும் உயிர்த்திருக்கு. நாமளும் அப்படி ஏதாவது செய்யறதுதான் முதல் வேலை... மத்ததெல்லாம் அப்புறம்தான்!’’

- நா.கதிர்வேலன்