சாகசம்



யாரும் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்பதை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன்...’’  டி.வியில் அந்த சாகச மனிதர் சொல்லிக் கொண்டிருந்தார். சாகசப் பிரியனான அவன் தானும் ஒரு காட்டுப் பயணத்துக்குத் தயாராகிவிட்டான். நெருப்பால் கரடியை விரட்டுவது எப்படி, யானைகளை சாந்தப்படுத்துவது எப்படி, புலி மற்றும் ஓநாய்களிடம் சிக்காமல் மரக்கிளை மேலே குடில் அமைப்பது எப்படி என எல்லாவற்றையும் அந்த நிகழ்ச்சி வழியே அவன் கற்றிருந்தான்.



தகவல்தொடர்பு ஏதும் இல்லாமல் தனியாய் ஒரு காட்டுக்குள் நுழைந்தான். அருவியில் குளித்தான், மீன் பிடித்து தின்றான், செல்ஃபி எடுத்துத் தள்ளினான். தூரத்தில் ஏதோ சத்தம் கேட்கவே அந்தப் பக்கம் போய் மறைந்து நின்று பார்த்தான். ஒரு சமூக விரோதக் கும்பல் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தது. ஆதாரத்துக்காக கேமராவை க்ளிக்கினான்.

இருட்டுக் காட்டில் கேமராவின் ஃபிளாஷ் தானாக இயங்கி வெளிச்சத்தை உமிழ, கும்பல் சட்டென கவனத்தை இவன் பக்கம் திருப்பியது. ஆக்ரோஷமாகி எல்லோரும் இவனைத் துரத்தினார்கள். உயிருக்கு பயந்து ஓடியவனின் பின்னங்கழுத்தில் தடாரென்று ஒரு புல்லட் பாய்ந்தது. இப்படிப்பட்ட மனித மிருகங்களிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்யவேண்டும் எனச் சொல்லாத அந்த சாகச மனிதனைத் திட்டியபடியே விழுந்து பரிதாபமாக உயிரை விட்டான் அவன்.                     

-அனுசுயா