செழுமையான வாசிப்பு அனுபவம்



முனைவர் ரெ.கார்த்திகேசு, மலேசியா

(வெளியிட்ட சில மாதங்களிலேயே 11 பதிப்புகளைக் கண்டிருக்கிறது ‘வைரமுத்து சிறுகதைகள்’. விரைவில் மலையாளத்தில் மொழி பெயர்ப்பாக இருக்கும் இந்த நூலைப் பற்றி எழுதுகிறார், மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு.)  ‘கவிஞர் வைரமுத்துவின் இந்தக் கதைகளை யாரும் படிக்கலாம். எளிதில் புரிந்து கொள்ளலாம்; அனுபவிக்கலாம்’ என்று எந்த ஒரு விமர்சகரும் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆனால் ‘இந்தக் கதைகளை அவர் ஏன் எழுதுகிறார்’ என்று அவருடைய மனதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள், அவருடைய அரிய முகவுரையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அங்கே ஒரு லட்சியப் பிரகடனம் செய்திருக்கிறார்: ‘வாழ்வு தொலைத்த காட்டில் மனிதம் தேடுவதே என் தேடல். மரபுகளை மறுத்தல், புனிதங்களை உடைத்தல், அதிகார மையங்களைச் சிதைத்தல் என்று சுற்றியடிக்கும் பின்நவீனத்துவச் சூறாவளியில் அடிப்படை அறக்கோட்பாடுகளும் அழிந்துபோவதற்கு நான் உடன்பட மாட்டேன். மரபுகளின் பெருமிதம் எனக்குச் சேர்க்கும் வலிமையை இழந்துவிட மாட்டேன்.’

ஆம். மரபு காக்கும் கதைகள்தான் இவை. விழுமியங்கள் என்ற பெயரில் சனாதனங்களை அவர் போற்றவில்லை. பல கதைகளில் சனாதனங்களை அவர் உடைக்கிறார்.வைரமுத்துவின் கதைகளை ஒரு பறவைப் பார்வையாகப் பார்த்தாலும், அவை தமிழர் வாழ்வின் வகைதொகைகளை அளக்கும் கதைகள் என்று சொல்லலாம். அதற்குமேல், மனிதத்தையே அளக்கும் கதைகள். சிறுகதையின் சிறப்பு, ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளை ஒட்டுமொத்தமாகச் சேர்த்து வைத்துப் பார்ப்பதில் இல்லை. ‘தனி ஒரு சிறுகதை எவ்வாறு அமைந்திருக்கிறது; என்ன பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது; எப்படி வாசகனுடன் பேசுகிறது; எப்படி வாசகனை வெல்கிறது’ என்பதில் உள்ளது.

இதில் ஒரு சிறுகதையை எடுத்துப் பார்ப்போம்... ‘கொஞ்ச நேரம் மனிதனாயிருந்தவன்’ என்று ஒரு கதை. இது கிராம விழுமியங்களை மட்டுமல்ல, பொதுவான மனித விழுமியங்களின் உயர்வையும் தாழ்வையும் முரண் அணியில் விளக்குகின்ற கதை. காடையன், கிராமத்துச் சாதாரணன். ஊரில் வெள்ளம் வந்து பொருள்களெல்லாம் அடித்துக்கொண்டு வருகையில் ஆற்றில் இறங்கி அவற்றைப் பிடுங்கி ஆதாயம் தேடுகிறான். அப்போது ஒரு பெண்ணின் பிணமும் வருகிறது. இங்கு விரிகிறது வைரமுத்துவின் சொற்படம், எளிய வார்த்தைகளில் ‘குளோஸ் அப்’ காட்சிகளாக:

‘‘எளம் பொணம்; சும்மா மினுமினுன்னு மின்னுது; இந்த வருசந்தான் கல்யாணமான பொண்ணு மாதிரி தெரியுது. ஊறுன பொணத்தில லட்சணம் போச்சு. தெறந்தே கெடக்கு வாயி. மூடிவிட்டாலும் ஒட்ட மாட்டேங்குதுக ரெண்டு தாடைகளும். புள்ளத்தாச்சி மாதிரி உப்பிக் கெடக்கு தண்ணி குடிச்ச வயிறு...’’

பிணமாக இருந்தாலும், போட்டிருக்கும் நகைகள் எனும் லாபகரமான பொருள் அவனுக்கு முக்கியம். பிணத்தைத் தூக்கிக் கரையில் போட்டு சேலை முதல் நகைகள் வரை பிடுங்கிக் கொண்டு ஒரு குழி தோண்டிப் பிணத்தைப் புதைத்து விடுகிறான். சேலை மனைவிக்குப் போகிறது. அவளிடமும் முழு உண்மையைச் சொல்லவில்லை.

பிணத்துக்கு மாமியார் எப்படியோ மோப்பம் பிடித்து அவனிடம் வந்துவிடுகிறாள். தளுக்காகப் பேசுகிறாள்: ‘‘பாத்தா எங்கூடப் பொறந்தவன் மாதிரி இருக்க. ஒனக்கு வேணும்னா ஒரு பங்கு எடுத்துக்க தம்பி. பெரிய மனசு பன்ணி என் நகை, நட்டுக்களைக் குடுத்திட்டிங்கன்னா கும்பிட்டு வாங்கிட்டுப் போயிருவோம்’’ என்கிறாள்.

அவளைச் சத்தம் போட்டுப் பேசி விரட்டி விடுகிறான். ‘‘சில நேரங்கள்ள பொய்யி தன்ன நம்ப வைக்கிறதுக்கு சத்தத்தை ஒத்தாசைக்குக் கூப்பிட்டுக்கிடும்’’ என்கிறார் கவிஞர். இப்படி மோசமான மனிதர்களின் கீழான விழுமியங்களையே பேசும் கதை எங்கே உன்னதமாகிறதென்றால், பிணத்தின் தாய் அவனைத் தேடி வரும்போதுதான். அவள் கோரிக்கை வேறு விதமாக இருக்கிறது. அவன் காலைப் பிடிக்கிறாள் அவள். ‘‘எந்திரிக்க மாட்டேண்டா மகனே. என் பிள்ளய எனக்குக் குடுத்திர்ரா. அவகாதுல மூக்குல கழுத்தில கெடந்தத நீயே வச்சுக்கடா ராசா. அவள எரிச்சியோ, பொதச்சியோ, அந்த எடத்த மட்டும் காட்டு சாமி. அங்கேயே நான் செத்து என் சீவனப்போக்கிக்கிறேன்’’ என்கிறாள்.

கவிஞர் சொல்கிறார்: ‘ஈரக்கொல நடுங்கிப் போச்சி காடையனுக்கு. அடிதடி நடக்குது மனசுக்குள்ள.’ காடையன் மனசுக்குள் பேசுகிறான். ‘வைகை ஆத்தா கொடுத்தான்னு நெனச்சோம். பெத்த ஆத்தா கேக்குறாளே... ரெண்டு நாளைக்கு முன்னால அங்காள ஈஸ்வரி குடுத்தத ஆத்தா வந்து பறிக்கிறாளே. காடையா! சத்தத்த அள்ளிவிடு. கத்து... கத்து... வரலியே! நெஞ்சாங்குழி அடைக்குதே! நேத்து இருந்த தாட்டியம் இன்னைக்கு ஏன் எனக்கு இல்லாமப் போச்சு? நேத்து வந்தவுக சொத்தைத் தேடி வந்தவுக... இப்ப வந்திருக்கிறவுக சொத்தத் தேடி வரல. சொந்தம் தேடி வந்து அழுவுதுக...’

ஓர் மகத்தான அறப் போராட்டம் சாமானியனின் உள்ளத்தில் சாமானிய வார்த்தைகளால் நிகழ்கிறது. இரக்கமற்ற கல்நெஞ்சை மனிதம் கரைக்கிறது. இறுதியில் அவன் மனைவி உடுத்தியிருந்த அந்தப் பிணத்தின் சேலையை உருவி அம்மாவிடம் ஒப்படைக்கிறான். ‘‘இந்தா ஆத்தா, இதுதான் ஒம் மக!’’

‘வாழ்வு தொலைத்த காட்டில் மனிதம் தேடுவதே என் தேடல்’ என்பதற்கு இதுவே ஓர் உன்னதமான உதாரணம். எளிய சொற்கள், சொற்செட்டு, உணர்வுகளுக்கு ஏற்ற வாக்கிய அமைப்புகள் அனைத்தும் வாசகனைக் கவ்விப் பிடிக்கின்றன. இறுதியில் அவனை உலுக்குகின்றன. கதைக் கலை பூரணம் பெறுகின்றது. இதைப்போல இந்தக் கதைகளில் எங்கு தொட்டாலும் வாழ்வு அதன் முழு வக்கிரத்தோடு சொல்லப்பட்டு, இறுதியில் மரபும் அறமும் நிலை நிறுத்தப்படுகின்றன. ஆனால் இந்த லட்சியம் மட்டுமே இந்தக் கதைகளின் சிறப்பை ஒட்டுமொத்தமாக நிர்ணயிக்கின்றன என்று எளிதாக எண்ணிவிடக் கூடாது. கதைகள் நம்மை பிரமிக்க வைப்பதற்கு இன்னும் பல வலுவான ஏதுக்கள் இருக்கின்றன.

ஒன்று, கவிஞரின் நடை. சொல்லும் பொருண்மைக்கேற்ப அது வேறுபட்டு நின்றாலும் எங்கும் கவித்துவம் பளிச்சிடுவது நிச்சயம். கதாசிரியராக மாற நினைக்கும் கவிஞர், கவிதையிலிருந்து தன்னை வெளியேற்ற நினைக்கலாம். ஆனால் கவிதை அவரை விடுமா? மற்றொன்று, கவிஞரின் பார்வை. தமிழ் வாழ்க்கையின் பல கூறுகளையும் அகலவும் ஆழ்ந்தும் பார்க்கும் பார்வை அது. அது காலம் அளாவிய பார்வை. அது உலகம் அளாவிய பார்வையும் கூட. புத்தர் காலத்திலிருந்து, சோழர்கள் காலத்திலிருந்து, மொகலாய சாம்ராஜ்ஜிய காலத்திலிருந்து,  நேற்றைய தமிழரின் அமெரிக்க மோகம் வரை அது பார்க்கிறது. விழுமியங்களையும் அது அலசுகிறது. இன்று கலாசார விழுமியங்கள் நவீன காலத்து நாகரிகப் பற்றில் நசுக்கப்படுவதையும் அவர் காட்டுகிறார்.
 
இங்கே புத்தன் தன் அந்திம காலத்தில் தான் அடைந்த உயர் மனநிலை போதாது என்று மருகுகிறான். ‘‘நான் இனிமேல்தான் புத்தனாக வேண்டும்’’ என்று தனக்கே சொல்லிக் கொள்கிறான்.  ஷாஜஹான் தான் கட்டிய காதல் கோட்டையின்கீழ் போதி மரத்தடி போல ஞானம் பெறுகிறான்: ‘‘இன்னொரு தாஜ்மகால் வேண்டாம். ஏழைகள் பலியாக வேண்டாம். என்னை மும்தாஜுக்குப் பக்கத்திலேயே புதைத்துவிடுங்கள்.’’ இன்றைய தமிழ்நாட்டில் சாதிப் பெருமையும் வர்க்கப் பெருமையும் கொண்ட டைகர் ராமானுஜத்துக்கு நைஜீரியப் பெண் மருமகளாக அமைந்து ஞானம் புகட்டுகிறாள்: ‘‘மேல்நாட்டில தாம்பத்திய சாஸ்திரமே மாறிண்டு வர்றது. அதாவது ஆணும் ஆணும் கல்யாணம் பண்ணிக்கிறதும் பெண்ணும் பெண்ணும் குடித்தனம் பண்றதும் மேல் நாட்டில சட்டப்படி சரின்னுட்டா. என் பையன் அப்படி ஒரு முடிவெடுத்திடாம ஒரு பொம்மனாட்டிய கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கானே. நேக்கு பரம சந்தோஷம்.’’ 

பெரிய மனிதர்களின் ஆணவங்கள் சாதாரணர்களால் அடக்கப்படுகின்றன. மனித சாதனைகளுக்கு மேல் மனிதம் முக்கியம் என்பது எங்கணும் வலியுறுத்தப்படுகிறது.ஈழப்போர் பற்றிய கதையில் கவிஞரின் மனவெதும்பல் வெளிப்படுகிறது. ‘எண்ட மக்களே, எங்கட தலைவரே!’ ஒரு ஈழப் போர்ப்பரணி. ஈழப் போரில் காலை இழந்து பிழைத்து, தன் மனைவி குழந்தையுடன் மறைந்து வாழ்பவன். பின்னர் இலங்கையின் இரக்கமற்ற ஆட்சியிடம் பிடிபடுகிறான். அவன் செயற்கைக் காலைப் பற்றிக்கொண்டு அழும் குழந்தை. ஒரு புதிய புறநானூற்றுக் காட்சி.
‘நினைத்தபடி வாழ முடியாததும் நினைத்தபோது சாக முடியாததும்தான் மனித குலத்தின் மிகப் பழைய கவலை.’

‘போரில் மடிந்தவர்கள் பாக்கியவான்கள்; தப்பித்தவர்கள் பாவிகள்’ என்கிறார். 40 கதைகள் எழுதினார் என்பது ஒரு சாதனைதான். ஆனால் அது கின்னஸ் சாதனை போன்றது. புள்ளி விவரங்களால் ஆனது. ஆனால் அதுவல்ல கவிஞரின் பெருமை. 40 செழுமையான வாசிப்பு அனுபவங்களைத் தமிழ்ப் புத்திலக்கிய உலகுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதே அவருடைய பெருமை.

(வைரமுத்து சிறுகதைகள், வெளியீடு: சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட், சென்னை-600024. விலை: ரூ.300/-)

படங்கள்: புதூர் சரவணன்