செலிப்ரிட்டி சென்டிமென்ட்ஸ்



நிஜமாவே காதலுக்கு உதவினோம்!

தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற அனைவருக்கும் ஃபுல் டைம் வேலை, காதலுக்கு உதவுவதுதான். ‘‘நிஜத்துல நீங்க காதலுக்கு உதவியிருக்கீங்களா? லவ் ஜோடிகள் யாரையாச்சும் சேர்த்து வச்சிருக்கீங்களா?’’ என்ற கேள்வியையும் வி.ஐ.பி டைரக்டரியையும் தூக்கிக்கொண்டு கிளம்பினோம்...

‘காதல்ங்கற ரோஜாப்பூ ஒரு முறைதான் பூக்கும்’ என ஃபீலிங் விதைத்த இயக்குநர் விக்ரமனிடம் இதைக் கேட்டால், சிரிக்கிறார். ‘‘நிஜத்துல நான் யாருக்கும் லவ் மேரேஜ் பண்ணி வச்சதில்லை. ஆனா, ராஜகுமாரன் - தேவயானி திருத்தணியில கல்யாணம் பண்ணிக்கிட்டு நேரா என் வீட்டுக்குத்தான் வந்தாங்க. மறக்க முடியாத மொமன்ட் அது!’’ என மகிழ்கிறார் விக்ரமன்.

‘‘நான் ஸ்கூல் படிக்கும்போதே நிறைய பேரோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன் பாஸ்!’’ - செம எனர்ஜியாக ரெடியாகிறார் ‘புலி’ ஒளிப்பதிவாளரும், ‘சதுரங்க வேட்டை’ ஹீரோவுமான நட்ராஜ் சுப்ரமணியம். ‘‘அப்போ நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். கிரிக்கெட் ரொம்ப ஆர்வம். என்னை விட வயசுல பெரிய பசங்க நிறைய பேர் எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கற கிரவுண்டுக்கு கிரிக்கெட் விளையாட வருவாங்க. என்னையும் சேர்த்துக்கச் சொல்லிக் கேட்டா, சில அண்ணன்கள் பதிலுக்கு ஒரு ஹெல்ப் கேப்பாங்க. ‘இந்த லெட்டரை அந்தப் பொண்ணுகிட்ட கொடு... இந்தப் பொண்ணுகிட்ட கொடு’னு. பேட்ஸ்மேன் ஆகுற ஆசையில இப்படி நிறைய பேருக்கு போஸ்ட்மேன் ஆகியிருக்கேன்!’’ எனச் சொல்லி சிரிக்கிறார் நட்டி.

‘‘லவ்வுல நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணணும்னு ஆசைதான். பட், இப்போ உள்ள லவ்வுக்கு நம்ம உதவியெல்லாம் தேவைப்படாது!’’ - சிருஷ்டி டாங்கேவின் பேச்சில் நிஜம் எதிரொலிக்கிறது. ‘‘இப்போ உண்மையான காதலைக் கண்டுபிடிக்கறது கஷ்டம். லவ் உண்மையா இருந்தா, கண்டிப்பா அவங்களே ஒண்ணு சேர்ந்துடுவாங்க. நம்ம ஹெல்ப் தேவைப்படாது’’ எனக் கன்னக்குழி சிரிப்பில் சொல்லி முடித்தார் சிருஷ்டி!

‘‘ஆமா, அப்படி ஒரு பயலை சேர்த்து  வச்சிருக்கேன்!’’ - ஸ்டார்ட்டிங்கிலேயே குஷியானார் சிங்கம்புலி. ‘‘அப்போ நான்  சுந்தர் சி. கிட்ட அசிஸ்டென்ட். மதுரை பக்கம் திருமங்கலத்துல இருந்து  ஃப்ரெண்ட் ஒருத்தன் என்னைப் பார்க்க வந்திருந்தான். ஊர்ல தோட்டம், தொரவுனு பய கொஞ்சம்  வசதியானவன். ‘சினிமாவில்  சேரணும் மச்சான்... என்னைய சுந்தர் சி.கிட்ட சேர்த்து விடு’னு சொன்னான்.  ‘அதெல்லாம் அவ்வளவு சாதாரண விஷயமில்லப்பா... பத்து வருஷம் கஷ்டப்பட  வேண்டியிருக்கும்’னு சொன்னேன்.

‘அப்படியா’னு என் தலையை ஒரு தரம் பார்த்தான். கிரவுண்ட் காலியா இருந்ததும் கொஞ்சம் யோசிச்சான்.  ‘நோ ப்ராப்ளம்... நான் கேமராவைப் பிடிச்சிக்கிட்டு நிக்கிற மாதிரி  ஒரு போட்டோ  எடுத்துக் குடு மச்சான்’னு கேட்டான். ஷூட்டிங் ஸ்பாட்ல கேமராவை ஷிஃப்ட் பண்ற கேப்ல அவனைக் கூட்டிட்டுப் போய், கேட்ட மாதிரி போட்டோ எடுத்துக் கொடுத்தேன். அதை வாங்கிட்டு ஊருக்குப் போனவன்தான். அப்புறம் என்னாச்சுனு தகவல் இல்ல.

திடீர்னு ஒரு நாள் மறுபடியும் வந்தான்.  ‘மச்சான்! ஊர்ல எல்லார்கிட்டேயும் நான் சுந்தர் சி. கிட்ட அசிஸ்டென்டா  இருக்கேன்னு சொல்லியிருக்கேன். ஒரு பொண்ணு கூட செட் ஆகிடுச்சு. நான் கேமரா  பக்கத்துல நிக்கிற போட்டோவைக் காட்டினதும், பொண்ணு குடுக்கறேன்னு  சொல்லிட்டாங்க மச்சான்’னு அவன் சொல்ல, எனக்கு வாய் அடைச்சுப் போச்சு.  ‘எனக்கு நீ இன்னொரு உதவியும் பண்ணணும். சுந்தர் சி. பக்கத்துல நான்  நின்னுட்டிருக்கற மாதிரி இன்னொரு ஸ்டில்லும் எடுத்துக் குடுடா’னு  கேட்டான். ‘நீயாவது ஹேப்பியா இருடா’னு அதுக்கும் ஏற்பாடு பண்ணினேன். போட்டோகிராபரைப் பிடிச்சி, ‘இவன் சுந்தர் சி. கிட்ட நிக்கும்போது டக்குனு க்ளிக் பண்ணிடு’னு சொன்னேன். திருமங்கலம் பார்ட்டி திருதிருனு ஸ்பாட்ல முழிச்சிட்டு  நின்னப்போ ‘யாரு இவன்?’னு சுந்தர் சி. விசாரிச்சார்.

‘என் நண்பன்’னு  அறிமுகப்படுத்தினேன். அப்போ ஒரு க்ளிக். அதையும் வாங்கிட்டு ஊருக்குப்  போயிட்டான். அவன் பொண்ணு எடுத்திருக்கற இடத்துல இது எல்லாத்தையும் நம்பிட்டாங்க. ரெண்டே ரெண்டு  போட்டோவுல ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி, கல்யாணமும் முடிச்சிட்டான் நண்பன்.  சமீபத்துல ஒரு பட ஷூட்டிங்குக்காக திருமங்கலம் போயிருந்தேன். அப்போ நண்பனைப் பார்த்தேன். அவன் ஃப்ராடுத்தனத்தை அவன் பொண்டாட்டிகிட்ட சொன்னேன். ‘எல்லாம்  எனக்காகத்தானே பண்ணுனாங்க... மத்தபடி அவரு நல்லவருண்ணே’னு சொல்லிருச்சு. அதைக் கேட்டு  சிங்கம்புலி ஹேப்பி!’’

- மை.பாரதிராஜா