காதல்



‘‘உங்களை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது!’’  - முகம் சிவக்க மாலா கத்தினாள். ‘‘இங்க மட்டும் என்னா வாழுதாம்..? அதேதான்! நீ என்னிக்கு என் வாழ்க்கைல வந்தியோ... அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்!’’ - பிரஷர் எகிற, குதித்தான் கணேசன்.

‘‘கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க! டிபன் சாப்பிட்டுட்டு போங்க...’’‘‘நீயாச்சு, உன் டிபனுமாச்சு!’’ - விருட்டென வெளியேறினான்.‘‘உங்களுக்கு அவ்வளவுன்னா... எனக்கு மட்டும் மானம், ரோஷம் இருக்காதா?’’ - சடாரென்று கிளம்பிப்போய் காருக்குள் ஏறினாள் மாலா. ஷூட்டிங் ஸ்பாட்டில்...

‘‘ஸ்டார்ட்... கேமரா... ரோல்!’’ ‘‘டார்லிங், உங்களைப் பார்த்த பிறகுதான் என் வாழ்க்கையே பிரகாசமாச்சு! இப்படியே என்னைக்குமே இருந்துடக் கூடாதா?’’ - இது ஹீரோயின்.

‘‘அன்பே, என்னோட பாதி நீதான். உன்னைக் காதலிக்க ஆரம்பிச்ச நாள்தான் பொன்னான நாள்!’’ - இது ஹீரோவின் டயலாக். ‘‘கட்... கட்... வெல்டன், ஒரே ஷாட்டில் டேக் ஓகே!’’ - டைரக்டர் கைகுலுக்கி வழியனுப்பினார்.

ஹீரோ கணேசனும், ஹீரோயின் மாலாவும் முகத்தை திருப்பிக்கொண்டு தத்தம் கார்களில் பயணித்து வீட்டுக்குப் போனார்கள்... அந்த வீடு, காலையில் சண்டை போட்ட அதே வீடுதான்!

கே.அசோகன்