கோமாதா எங்கள் குலமாதா...
பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.  கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவேதான் அவரை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கிறோம்.கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும். 
ஒரு பசு தன்னுடைய முதல் கன்றை பிரசவிக்கும்போது அதனை “தேனு” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை “கோ” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைத் தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
பசுவின் வாய்ப் பகுதியில் கலிதேவதை இருக்கிறது. அதனால்தான் பசு பின் பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வச் செழிப்பை உண்டாக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால். வாழைப்பழம் கொடுக்கலாம்.
உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்திக் குளிக்க வைப்பது நல்லது.பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
தலை - சிவபெருமான் நெற்றி - சிவசக்தி வலது கொம்பு - கங்கை இடது கொம்பு - யமுனை கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால் மூக்கின் நுனி - முருகன் மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள் இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர் இரு கண்கள் - சூரியன், சந்திரன் வாய் - சர்ப்பாசுரர்கள் பற்கள் - வாயுதேவர் நாக்கு - வருணதேவர் நெஞ்சு - கலைமகள் கழுத்து - இந்திரன் மணித்தலம் - எமன் உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள் மார்பு - சாத்திய தேவர்கள் வயிறு - பூமிதேவி கால்கள் - வாயு தேவன் முழந்தாள் - மருத்துத் தேவர் குளம்பு - தேவர்கள் குளம்பின் நுனி - நாகர்கள் குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள் குளம்பின் மேல்பகுதி - அரம்பையர்கள் முதுகு - ருத்திரர் யோனி - சப்தமாதர் (ஏழு கன்னியர்)
குதம் - லட்சுமி முன் கால் - பிரம்மா பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன் பால் மடி - ஏழு கடல்கள் சந்திகள் - அஷ்ட வசுக்கள் அரைப் பரப்பில் - பித்ரு தேவதை வால் முடி - ஆத்திகன் உடல்முடி - மகா முனிவர்கள் எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்
சிறுநீர் - ஆகாய கங்கை சாணம் - யமுனை சடதாக்கினி - காருக பத்தியம் வாயில் - சர்ப்பரசர்கள் இதயம் - ஆகவணியம் முகம் - தட்சரைக் கினியம் எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்
பிரம்மதேவன் பசுவைப் படைத்த வுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.அப்போது பசு லட்சுமிதேவியிடம், “நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. மலம் கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது”, என்று சொன்னது.
லட்சுமி தேவியும், “அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டதோடு, பசுவின் பின்புறத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
கோமாதாவை பூஜிப்பது இந்து மதத்தில் சம்பிரதாயமாக உள்ளது. இதைத் தான் கோபூஜை என்பர். இது நம் புராணங்களில் விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது.கோக்ஷீரத்தில் என்கிற பசும் பாலில் நான்கு சமுத்திரங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பசுவின் அனைத்து உடல் உறுப்புகளிலும் அனைத்து புவனங்களும் (லோகங்கள்) ஒளிந்திருப்பதாக வேத பண்டிதர்கள் கூறுவதுண்டு.பசுவின் உடல் பாகங்களில் ஒளிந்திருக்கும் தேவதைகளின் விவரங்களை ஆராய்வோம்.
பசுவின் நெற்றி, கொம்புப் பாகத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். ஆகையால் கொம்பின் மேல் தெளிக்கப்பட்ட நீரை உட்கொண்டால், த்ரிவேணி சங்கமத்திலுள்ள நீரை ப்ரோக்ஷணம் செய்து கொண்ட பலன் கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்லாமல் சிவாஷ்டோத் திரம், ஸஹஸ்ரநாமம் சொல்லி வில்வத்தினால் பசுவை பூஜை செய்தால், ஸாக்ஷாத் காசி விஸ்வநாதரை பூஜை செய்த பலன் கிட்டும் என்று வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள்.நாசி துவாரத்தில் ஸுப்ரமண்யர் (முருகன்) குடியிருப்பதால், நாசித் துவாரத்தை பூஜித்தால் புத்திர சோகம் இராது.
பசுவின் காதுகள் அருகே அஸ்வினி தேவர்கள் கொலுவிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அதனால் பசுவின் செவிகளை பூஜித்தால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுபடலாம்.
பசுவின் கண்களில் சூரிய, சந்திரர்கள் இருப்பார்கள் என்றும், அவற்றை பூஜிப் பதால் அஜ்ஞானம் என்ற இருள் விலகி, ஞான ஒளி, சகல விதமான சம்பத்துகளும் கிட்டும் என்று கூறுகிறார்கள். பசுவின் நாக்கில் வருண தேவர் இருப்பதனால், அதை பூஜிப்பதால் உரிய காலத்தில் சந்ததி உண்டாகும் என்று கூறுகிறார்கள்.
பசுவின் கால்களுக்கு மேலே உள்ள ஸரஸ்வதியை பூஜித்தால் வித்யா ப்ராப்தி உண்டாகும். பசுவின் வலது கன்னத்தில் யமதர்மராஜரும், இடது கன்னத்தில் தர்மதேவதைகள் இவர்களை பூஜித்தால் யமனின் தொல்லை இராது. மேலும் புண்ணிய லோக ப்ராப்தி கிட்டும். பசுவின் உதடுகளில் உள்ள ப்ராத: ஸந்தியாதி தேவதைகளை பூஜித்தால் நமது பாபங்கள் நசிக்கும்.
பசுவின் கண்டத்தில் (கழுத்தில்) இந்திரன் உள்ளபடியால், இதை பூஜித்தால் இந்த்ரியங்களை அடக்கும் சக்தி ஏற்படும். புத்திர பாக்கியம் உண்டாகும்.பசுவின் மடியில் நான்கு புருஷார்த்தங்களும் உள்ளன. அதை பூஜித்தால் தர்மார்த்த காம மோக்ஷம் கிட்டும் மற்றும் பூமியில் நாகங்களின் பயம் இருக்காது.
பசுவின் குளம்பில் கந்தர்வர்கள் உள்ளபடியால் குளம்பினை பூஜித்தால் கந்தர்வ லோக ப்ராப்தி கிட்டும்.பசுவின் குளம்பின் அருகில் அபஸரஸுகள் இருப்பதால் இதை பூஜித்தால் அன்யோன்யமும், ஸௌந்தர்யமும் கிட்டும்.அதனால்தான் கோமாதாவை ஸகல தேவதா ஸ்வரூபமாக பாவித்து பூஜை செய்கிறார்கள்.
அனுஷா
|