பிரகலாதன் செய்த துதி
வணக்கம் நலந்தானே!
வைகுண்டநாதா... பரந்தாமா... நிறைய கர்ம வாசனைகளால் என் இருதயம் மூடிக் கிடக்கிறது. உலகப் புழுக்கம் தாங்க முடியவில்லை. மனமோ என்ன சொன்னாலும் கேட்காமல் வெளியுலக விஷயங்களை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது. அடங்கு... அடங்கு... என்றால் செவிடன்போல நடிக்கிறது. ஆஹா... இப்படி ஓடுகிறதே எனும் நினைப்பும் கூட அதற்கு எழவில்லை. எப்படியெல்லாம் என்னை ஏமாற்றுகிறது.

நீங்கள் எல்லாவிதமாகவும் இருக்கிறீர்கள். எல்லாவற்றினுள்ளும் இருந்து அசைக்கிறீர்கள். அசைவும் நீங்கள்தான். அசைவற்றவரும் நீங்கள்தான். அனுபவிப்பரும் நீங்கள்தான். எதையும் அனுபவிக்காது சாட்சி ரூபமாக இருக்கும் ஆத்மாவும் நீங்கள்தான். ஆனால், மனிதர்களோ என் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்ளாவிடில் யார் கவனிப்பார்கள் என்கிறார்கள்.
நீ குடும்பத்திற்குள் இரு. ஆனால், உனக்குள் குடும்பம் இருக்கிறதே அது மாயை என்றால் நம்ப மறுக்கிறார்கள். செய்ய வேண்டியதை செய். ஆனால், எல்லாவற்றையும் அவன் செய்கிறான் என்றால் தலையாட்டி விட்டு நான்தான் செய்கிறேன். செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.
‘‘உன்னுடைய அழகுப் பேச்சு என்னையே கவர்ந்து விட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ ‘‘இல்லை பகவானே... இல்லை. பக்தனுடைய லட்சணத்தை அறிந்தவர்கள் நீங்கள். மீண்டும் வரத்தை கேள் என்று சொல்லாதீர்கள்.
எந்த உத்தம பக்தனும் வரத்தை கேட்க மாட்டான். ஏனெனில், அப்படி கேட்கும்போதே அவன் வணிகனாகி விடுகிறான். என்னை தயை கூர்ந்து வணிகனாக பார்க்காதீர்கள். நாமிருவரும் பரஸ்பர வியாபாரிகளல்ல. எப்போதே வேண்டிக் கொண்டதை யாரையோ கருவியாக்கி அனுப்பி எனக்கு உதவச் செய்யாதீர்கள்.
இறைவனே உன் ரூபத்தில் எனக்கு வந்து உதவுகிறார் என்று அவனிடம் என்னை நன்றி கூறச் செய்யாதீர்கள். உங்களுக்கும் எனக்கும் நடுவில் கருவியாக யாரும் வேண்டாம். உங்கள் ரூபத்தில் வேறொருவரிடம் நான் உதவி பெறுவதை விரும்பவில்லை. ஏனெனில், வரங்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
நான் எதையுமே விரும்பாத உங்களின் பக்தன். எனக்கு அப்படியே வரம் கொடுக்க தீர்மானித்தால் எந்த ஆசையுமே எழாத வரத்தை கொடுங்கள். ஆச்சரியமான சிம்ம உருவம் கொண்டவரே உங்களை நமஸ்கரித்து கேட்கிறேன்’’ என்று துணிச்சலோடு கேட்டார்.
நரசிம்மர் மெல்ல அள்ளி தன் மடியில் அமர்த்திக் கொண்டார். தாய்ப்பசு கன்றை நக்கிக் கொடுப்பதுபோல நாக்கினால் வருடினார். இதைவிட வேறென்ன வேண்டும் என்று பிரகலாதன் ரிஷிகளைப்போல சமாதியில் ஆழ்ந்தான். தேவலோகமே ஆச்சரியத்தில் ஆனந்தித்தது. ‘‘பிரகலாதா... நீ எப்போதும் என் கதைகளை கேட்டு ஆனந்தமடைவாய்.
உன்னையும் என்னையும் இந்த என் சரித்திரத்தையும் நினைத்துக் கொண்டும், உன்னால் என் பொருட்டு நீ இப்போது துதித்தாயே இந்த துதிகளை எப்போது ஒரு மனிதன் சொல்லுவானோ அல்லது நினைப்பானோ அவன் அந்தக் கணமே கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவான்.’’ என்று சிம்ம பகவான் சிலிர்த்தார்.
கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)
|