யுக தர்மம்
வணக்கம் நலந்தானே!
கலியுகத்தில் பகவானை எப்படி வணங்குவார்கள் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணராக அவதரித்த பகவானை நாம சங்கீர்த்தனத்தின் மூலம் வழிபடுவர். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தின் ஒன்றினாலேயே எல்லா விஷயங்களும் அடையப்படுகின்றன. தீவிர தவத்தாலும், யாகத்தாலும், யோகத்தாலும் கூட பிடிக்க முடியாத பகவானை கலியில் நாமசங்கீர்த்தனம் செய்தே அடைகின்றனர்.
 இகலோக சௌக்கியங்கள் முதல் பரலோக மோட்சமான ஞானம் வரையிலும் திவ்யநாமமே அளித்து விடுகிறது. ஜனனம், மரணம் எனும் மாய சுழற்சியை நாமச் சுழற்சி நிறுத்துகிறது. கடவுளை அறியும் பாதையில் பயணிப்போருக்கு நாமத்தை விட எளிமையானது எதுவுமில்லை. பகவான் கலியுகத்தில் நாமத்திற்குள் ஜொலிக்கிறார். நாமத்தை சொல்வோருக்குள் ஒளிர்கிறார். நாமத்தை சொன்ன பக்தனை பகவானாக்குகிறார்.
இப்போது உள்ள மனிதர்கள் இதற்கு முன்பு இல்லாமல் இல்லை. கலியுகத்தில் இருக்கும் மனிதர்கள் அந்த யுகத்தில் மட்டும் வாழ்ந்தவரில்லை. கிருத யுகத்திலிருந்து துவாபர யுகம் வரை பிறந்து... வளர்ந்து... இறந்து... மீண்டும் கர்ப்பத்தில் உதித்து என்று இளைத்துப் போனவர்கள்தான். கிருத யுகத்தில் இருந்த ஜனங்கள் கலியுகத்தில் பிறக்க மாட்டோமா என்று ஆசைப்படுகின்றனர்.
திரேதாயுகத்து பக்தர்கள் கலி கொடுமை ஆயினும் நாம சாம்ராஜ்ஜியம் நடக்குமே பாகவதர்களுடன் கலந்திருக்கலாமே என்று நினைக்கிறார்கள். துவாபர யுகத்தில் கிருஷ்ணரை காண்போமா இல்லையோ ஆனால், அவன் நாமத்திற்குள் புகுந்து கொள்ளும் காலமான கலியில் அல்லவா நாம் பிறக்க வேண்டும் என்று ஜீவன்கள் எண்ணுகிறார்கள். இன்னுமோர் முக்கிய காரணமும் உண்டு.
கலியில் சிற்சில இடங்களில் நாராயண பக்தர்கள் அவதரிக்கப் போகிறார்கள். அவர்கள் தாமிரபரணி, கிருதமாலா, பயஸ்வினி (பாலாறு), காவேரி, மஹாநதி போன்ற முக்கிய நதிகள் பாயும் திராவிட தேசத்தில் அவதரிக்கப் போகிறார்கள். யுகம்தோறும் எல்லோருக்கும் வழிகாட்டப் போகிறார்கள்.
அந்தந்த நதியோரம் பிறக்கும் ஜீவன்கள் வாசுதேவனிடத்தில் அளவிலா பக்தி கொள்ளப் போகிறார்கள். அந்த புண்ணிய நதியின் தீர்த்தத்தை பருகுவோர் மனம் சுத்தமடையப் போகிறது. நதியே இறை ரூபத்தில் ஓடிக் கொண்டிருக்கும். அந்த நதிகள் பயிர் பச்சையை மட்டும் செழிக்கச் செய்யப் போவதில்லை. ஜீவன்களின் பக்தியை செழிக்கச் செய்து புஷ்டியாக்கப் போகிறது.
கலியுகத்தை பாவ யுகம் என்று சொல்ல முடியாது. பகவானின் நாமத்தாலேயே பவ சாகரம் எனும் சம்சாரக் கடலை தாண்டச்செய்யும் பகவானின் நாம யுகம் என்றுதான் சொல்ல வேண்டும். அர்ச்சாவதாரம் எனும் படியான விக்ரகத் திருமேனிகளில் ஆங்காங்கு எம்பெருமான் எழுந்தருளப் போகிறான்.
அப்போது இந்த நதியோரத்து நாராயண பக்தர்களும், ஞானியரும் பதிகங்களாலும், பாசுரங்களாலும் பாடி கலியை விரட்டப் போகின்றனர். எம்பெருமானின் திருவடியை அடையப் போகின்றனர் என்று பாகவதத்தில் நவயோகிகளின் சரித்திரம் விரிவாகப் பேசுகின்றது.
கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)
|